Last Updated : 22 Nov, 2016 11:46 AM

 

Published : 22 Nov 2016 11:46 AM
Last Updated : 22 Nov 2016 11:46 AM

கேள்வி மூலை 08: இடது கைக்காரர்கள் சிறந்த அறிவாளிகளா?

வலது கைக்காரர்கள் நடைமுறைத் தர்க்கத்துக்கு ஏற்பச் சிந்திப்பவர்கள், பெரும்பாலும் சராசரியாக இருப்பார்கள். இடது கைக்காரர்கள் படைப்பாளிகள், மிகச் சிறந்த அறிவாளிகள் என்றொரு கூற்று பொதுவாக நம்பப்படுகிறது.

ஒருவர் பெரும்பான்மையினரைப் போலவே வலது கைப் பழக்கமுள்ளவராக இருந்தாலும் சரி, சிறுபான்மையினரில் ஒருவராக இடது கைப் பழக்கமுள்ளவராக இருந்தாலும் சரி - அவர்களுடைய மூளை செயல்படும் விதத்தில் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. நிகழ்தகவு அடிப்படையில் ஒரு சில விஷயங்களில் மட்டும் கூடுதல் லாபங்கள் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, கிரிக்கெட்டில் இடது கை பேட்ஸ்மேன், இடது கைப் பந்துவீச்சாளராக இருப்பதால் சில அம்சங்கள் சாதகமாக அமையும். மற்றபடி, மூளையின் எந்தப் பகுதியை ஒருவர் அதிகம் பயன்படுத்தினாலும், பலனில் பெரிய வித்தியாசம் கிடையாது.

அமெரிக்காவில் உள்ள உடா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜாரெட் நீல்சன், இது தொடர்பாக ஓர் ஆய்வை நடத்தினார். ஆயிரம் நபர்களின் மூளை ஸ்கேன்களை அவர் ஆராய்ந்தார். இதில் வலது அல்லது இடது மூளைக்காரர்கள் தனி ஆதிக்கம் செலுத்துவதற்கான எந்த ஆதாரத்தையும் கண்டறிய முடியவில்லை. இடது கைக்காரர்களுக்கு வலது மூளை அரைப்பாதியும், வலது கைக்காரர்களுக்கு இடது மூளை அரைப்பாதியும் அதிகமாகச் செயல்படும். பொதுவாக வலது மூளை மேம்பட்டது என்றொரு நம்பிக்கை. ஆனால் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நல்ல உருவகமாகவும் உவமையாகவும் பயன்படலாமே தவிர, இதில் எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. ஜோசியத்தைப் போலவே, இதுவும் ஒரு மூடநம்பிக்கை அவ்வளவுதான்.

நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதற்காக ஜப்பானில் முன்பெல்லாம் இரண்டு கைகளில் எழுதுவதற்குக் குழந்தைகளைப் பழக்குவார்களாம். கணினி வந்துவிட்ட பிறகு எல்லோருமே ஜப்பானியர்களைப் போல மாறிவிட்டோம். ஏனென்றால், கணினியில் இரண்டு கைகளாலும் தட்டச்சு செய்கிறோமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x