Last Updated : 07 Jul, 2014 04:02 PM

 

Published : 07 Jul 2014 04:02 PM
Last Updated : 07 Jul 2014 04:02 PM

புத்தகப் படிப்பு போதுமா?

வங்கிக்கான நேர்முகத் தேர்வு அது. நேர்முகத் தேர்வுக்காக அழைப்பதற்கு ஒரு நிமிடம் முன்புவரை தான் கொண்டு வந்திருந்த நுழைவுத் தேர்வுப் புத்தகத்திலிருந்து எதையோ படித்துக் கொண்டிருக்கிறான் திருஞானம். பிறகு அவன் அழைக்கப்பட, அறைக்குள் செல்கிறான். நேர்முகத் தேர்வு தொடங்குகிறது.

தேர்வாளர்1 : நீங்க எதுக்காக வங்கியிலே வேலை செய்யணும்ணு நினைக்கிறீங்க?

திரு : பொது மக்களுக்கு நல்லது செய்யணும்கிற எண்ணம், கை நிறைய சம்பளம் கிடைக்கும் என்கிற யதார்த்தம் இரண்டுமேதான் சார்.

தேர்வாளர் 2 : இந்தியாவின் எந்தக் கிளையில் உங்களை நியமனம் செய்தாலும் ஏத்துக்குவீங்களா?

திரு : நிச்சயமாக. ஆனால் சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்திருக்கும் என் அப்பாவோடு ஒரு வருடம் இருக்க முடிந்தால் இப்போதைக்கு நன்றாக இருக்கும். எனவே இந்த விஷயத்தில் எனக்கு உங்கள் கருணை தேவை.

தேர்வாளர் : 3 வங்கிகள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

திரு : இத்தாலிய வார்த்தையான பாங்கா என்பதிலிருந்துதான் பேங்க் என்ற வார்த்தை உருவானது. யூதர்கள் இங்கிலாந்து கடைத் தெருவில் ஒரு நீளமான பெஞ்சில் உட்கார்ந்து தங்கள் வணிகத்தை நடத்தினார்கள். அந்த இருக்கையைத்தான் இத்தாலிய மொழியில் பாங்கா என்பார்கள்.

(தேர்வாளர்கள் ஒருவரை யொருவர் புன்னகையுடன் பார்த்துக்கொள்கிறார்கள்)

தேர்வாளர் 1 : நம் நாட்டில் பொதுத்துறை வங்கிகளும் இருக்கின்றன, தனியார் வங்கிகளும் இருக்கின்றன. இந்த இரண்டுக்கும் முக்கிய வித்தியாசம் என்ன?

திரு : சார், வெளிநாட்டு வங்கிகளையும், வட்டார வங்கிகளையும், கிராம வங்கிகளையும் விட்டுட்டீங்களே?

தேர்வாளர் 2 : கேட்ட கேள்விக்கு நீங்கள் முதலில் பதில் சொல்லலாமே?

திரு: நம் நாட்டிலே 27 பொதுத்துறை வங்கிகள் இருக்கின்றன. தனியார் வங்கிகளின் எண்ணிக்கை 30. வெளிநாட்டு வங்கிகளின் எண் ணிக்கை 40.

தேர்வாளர் 3 : (புன்னகையுடன்) : ரமணா திரைப்படத்தைப் பல முறை பார்த்திருக்கீங்களா?

திரு : ஆமாம் சார். அதிலே நேர்மையாகவும், தவறுகளைத் தட்டிக் கேட்கும் துணிவோடும் விஜயகாந்த் நடித்தது எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அந்தக் கேரக்டர் எனக்கும் ஒரு விதத்தில் ரோல் மாடல்தான்.

தேர்வாளர் 2 : வங்கிகளைப் பொறுத்தவரை ஆம்புட்ஸ்மேன் என்பவர் யார்?

திரு : வாடிக்கையாளருக்கு உதவுவதற்காக அரசு நி யமித்திருப்பவர். 1995-ல் ‘பேங்கிங் ஆம்புட்ஸ்மேன் திட்டம்’ என்பதை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

தேர்வாளர் 3 : ஏ.டி.எம். என்பதன் விரிவாக்கம் என்ன?

திரு : ஆடொமேடேட் டெல்லர் மெஷின்.

தேர்வாளர் 1 : ஒரு காசோலையை வேறொருவர் நிரப்பி, கையெழுத்தை மட்டும் அந்த வங்கிக் கணக்கை வைத்திருப்பவர் போடலாமா?

திரு : அதெப்படி சார்? காசோலை என்பதை ஒருவரேதான் நிரப்பி அவரேதான் கையெழுத்திட வேண்டும்.

தேர்வாளர் 1: எந்த வகை இங்க் பேனாவைக் காசோலை எழுதப் பயன்படுத்த வேண்டும்?

திரு : (குழப்பத்துடன்) : நீல நிறம். கறுப்பு நிறத்தையும் அனுமதிப்பாங்கன்னு நினைக்கிறேன்.

தேர்வாளர் 3 : உங்க வீட்டிலே தொலைபேசிக் க ட்டணம், மின்சாரக் கட்டணமெல்லாம் மாசா மாசம் செலுத்திடுவீங்க இல்லே?

திரு : நிச்சயமா சார். (பிறகு சட்டென்று விழித்துக் கொண்டவனாய்) அதெல்லாம் இர ண்டு மாசத்துக்கு ஒருமுறைதானே கட்ட வேண்டியிருக்கும்.

(பேட்டி தொடர்கிறது)

திருஞானம் நேர்முகத் தேர்வில் கூறிய விடைகளையும், அவன் நடந்து கொண்ட முறையையும் வைத்துக் கொண்டு அவன் வெற்றி பெறும் வாய்ப்பு எந்த அளவு உள்ளது என்பதைப் பார்க்கலாம்.

முதல் கேள்விக்குத் திருஞானம் கூறிய பதில் திருப்திகரமானது. சம்பளம் ஒரு முக்கியத் தூண்டில் என்பதோடு பொதுநல எண்ணமும் தனக்கு இருப்பதைக் காட்டிக் கொள்கிறான்.

திருஞானத்தின் தந்தை உடல் நலமின்றி இருக்கலாம். ஆனால் அதை நேர்முகத் தேர்வில் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. ஏனென்றால் அவர் எந்தக் கிளையில் வேலை செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நேர்முகத் தேர்வாளர்களுக்கு இருக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. ஆனால் ‘இப்பவே கண்டிஷனெல்லாம் போடுறாரே’ என்பதுபோல் அவர்கள் நினைக்க வாய்ப்பு உண்டு. எனவே இறுதிச் சுற்றில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டவுடன் அவர் தன் கோரிக்கையை முன் வைக்கலாம். மாறாகத் தேர்ந்தெடுக்கப்படுவதையே கேள்விக்குறியாக மாற்றிவிடக் கூடிய ஒரு பதிலை திருஞானம் கூறியிருக்கக் கூடாது.

தேர்வாளர் இரண்டு பிரிவு வங்கிகளைப் பற்றிக் கேட்டபோது, திருஞானம் தனக்குத் தெரிந்த (ஒருவேளை நேர்முகத் தேர்வு அறைக்குள் நுழைவதற்குச் சற்று முன்பு அதைப் படித்தாரோ, என்னவோ) வேறு மூன்று பிரிவுகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். அவரது நோக்கம் தேர்வாளரைச் சிறுமைப்படுத்துவது அல்ல. என்றாலும் தனக்குத் தெரிந்ததையெல்லாம் வெளிக்காட்ட வேண்டும் என்ற துடிப்பு இருக்கக் கூடாது. அப்படி இருப்பது இயல்புதான் என்றாலும் அதைச் சாமர்த்தியமாக, சரியான சமயத்தில் நுட்பமாக வெளிப்படுத்த வேண்டும்.

தவிர, வங்கிகளைப் பற்றிய கேள்விக்குத் திருஞானம் வங்கிகளின் தொடக்க கால சரித்திரத்தைக் குறிப்பிடுகிறார். இருவகை வங்கிகளுக்கிடையே உள்ள வேறுபாட்டைக் கேட்டால், புள்ளி விவரத்தைத் தருகிறார். (நல்ல வேளையாக ரமணாவின் புள் ளிவிவர விஜயகாந்தைத் தேர்வாளர் குறிப்பிடும்போது, அதைப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், தன்னுடைய நேர்மையை த் திருஞானம் வெளிப்படு த்துகிறார்).

வங்கிகளைப் பற்றிய பல தகவல்களை அவர் தெரிந்து கொண்டிருப்பது சந்தேகமில்லாமல் ஒரு ப்ளஸ்தான். ஆனால், நடைமுறைக் கோணத்தில் (காசோலை தொடர்பான கேள்விகள்) அவர் கவனம் செலுத்தவில்லை. இந்த எண்ணம் தேர்வாளர்களுக்கு வருவதால்தான், தொலைபேசிக் கட்டணம், மின்சாரக் கட்டணம் தொடர்பான கேள்விகளைக் கேட்டு அதிலாவது நடைமுறை ஞானம் கொண்டவராக இருக்கிறாரா என்பதைப் பார்க்கிறார்கள்.

மொத்தத்தில் திருஞானம் தனது அப்பாவித்தனத்தையும், அதிக விவரங்களை முயற்சி எடுத்து அறிந்துகொண்டதையும் வெளிப்படுத்துகிறார். எனவே அவரது சிறுதவறுகளை மன்னித்து, ‘வாய்ப்பளித்தால் ப்ராக்டிகலான விஷயங்களையும் நிச்சயம் அறிந்துகொள்வார்’ என்ற நம்பிக்கையுடன் அவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு அதிகம்.

ஆனால் திருஞானம் செய்த தவறுகளை நீங்கள் தவிர்த்து விட்டால் உங்கள் வெற்றி வாய்ப்பை உறுதியானதாகவே ஆக்கிக்கொள்ளலாமே?

ஜி.எஸ்.எஸ்- தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x