Last Updated : 29 Nov, 2016 10:48 AM

 

Published : 29 Nov 2016 10:48 AM
Last Updated : 29 Nov 2016 10:48 AM

வெற்றி முகம்: விஞ்ஞானி கனவு எட்டாக் கனியல்ல!

விஞ்ஞானியாக வேண்டுமென்ற கனவில் இருப்பவர்கள் எல்லோருக்கும் அதை நனவாக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒருவர் விஞ்ஞானி ஆவது அவ்வளவு சுலபமானதல்ல. அறிவியல் பாதையைப் பணிவாழ்க்கையாகத் தேர்ந்தெடுப்பதில் இருக்கும் கடினமான சவால்கள் தெரிந்திருந்தாலும், அதைத் துணிந்து தேர்ந்தெடுத்திருக்கிறார் சஹானா ஸ்ரீநிவாசன். இவர் தற்போது பெல்ஜியத்தில் இருக்கும் கெண்ட் (Ghent) பல்கலைக்கழகத்தில் அல்ஸைமர் நோய் பற்றி முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுவருகிறார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும், பெற்றோரைச் சந்திக்கவும் சென்னைக்கு வந்திருந்த சஹானா, அறிவியல் துறையில் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஆர்வத்துக்குத் தடை இல்லை!

சஹானா பிறந்து வளர்ந்தது கொல்கத்தாவாக இருந்தாலும் பூர்வீகம் சென்னைதான். வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் (விஐடி) உயிரித் தொழில்நுட்பத்தில் (Bio Technology) இளநிலை பட்டப் படிப்பும் ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் நரம்பியல் அறிவியலில் (Neuro Science) முதுநிலைப் பட்டப்படிப்பும் முடித்திருக்கிறார். கெண்ட், ஆம்ஸ்டர்டம், குயிம்ப்ரா ஆகிய ஐரோப்பாவின் மூன்று முக்கியமான பல்கலைக்கழகங்களில் அறிவியல் மேற்படிப்பைப் படித்திருக்கிறார். “பள்ளிப் பருவத்திலிருந்தே உயிரியல்தான் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் எட்டு ஆண்டுகளாக அதை ஆர்வமாகப் படித்துவருகிறேன்.

என்னுடைய பெற்றோர் அளிக்கும் ஊக்கமும் முக்கியக் காரணம். அவர்கள் எனக்கு எந்தக் கட்டுப்பாடும் இதுவரை விதித்ததில்லை. அறிவியல் போன்ற ஒரு தீவிரமான படிப்பைப் படிக்கும்போது பெற்றோர்களின் இந்தப் புரிதல் அவசியமானது. அவர்கள் என்னைத் தனித்து இயங்க அனுமதித்தார்கள். அதுதான் இப்போது என்னை முனைவர் பட்ட ஆராய்ச்சிவரை கொண்டுவந்திருக்கிறது” என்கிறார் இருபத்தைந்து வயதாகும் இளம் விஞ்ஞானி சஹானா.

அறிவியல் படிப்பது என்பது கடுமையான விஷயம்தான் என்பதை ஒப்புக்கொள்ளும் சஹானா, “உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் தினமும் நீங்கள் பணிக்குச் சென்றுதான் ஆக வேண்டும். எப்போதும் புதிய கருத்துகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால், உங்களுடைய கருத்துகளை மறுப்பதற்கும் எதிர்ப்பதற்கும் எப்போதும் உங்களைச் சுற்றி நபர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். அதனால், நீங்கள் ஒரு பணியை மேற்கொள்ளும்போது அதை முழு உறுதியுடனும் நம்பிக்கையுடனும் செய்ய வேண்டியிருக்கும்.

அதே நேரத்தில், இந்தப் பணியில் இடறி விழுவதற்கான எல்லாச் சாத்தியங்களும் இருக்கவே செய்கின்றன. அதனால், நம்முடைய தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது அதை உடனடியாகத் திருத்திக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். ஒருவகையில், இது நம்முடைய திறமையையும் முட்டாள்தனத்தையும் ஒரு விசித்திரமான சமநிலையில் கையாள்வதைப் போலத்தான். மற்ற வகைகளில் இதுவும் எல்லாப் பணிகளைப் போல ஒரு இயல்பான பணிதான்” என்று சிரிக்கிறார்.

பாலினப் பாகுபாடு?

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் அறிவியல் ஆய்வில் ஈடுபட உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என தன் அனுபவத்திலிருந்து சொல்கிறார் சஹானா. “என்னுடைய மேற்படிப்பை இந்தியாவிலேயே படிக்க முடிந்திருந்தால் இன்னும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். ஆனால், ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் அறிவியல் மாணவர்களுக்கு இருக்கும் வசதிகளும் வாய்ப்புகளும் இந்தியப் பல்கலைக்கழகங்களில் இல்லையே! அதிலும் இங்கே என்னோடு முனைவர் பட்டப்படிப்பைப் படிப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்.

இதுவரை, பெண் என்பதால் எந்த விதமான பாலினப் பாகுபாட்டையும் இங்கு நாங்கள் சந்தித்ததில்லை. ஆனால், இந்தியாவில் அந்த நிலைமை இன்னும் சாத்தியப்படவில்லையே! ஒரு பெண் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் படிப்புக்காகச் செலவிடுவது இந்தியாவைப் பொறுத்தவரை பெரிதாகக் கேள்விக்குள்ளாகிறது. இத்தனை ஆண்டுகள் படித்துக்கொண்டிருந்தால் எப்போது கல்யாணம் என்கிற கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இப்போது பெற்றோர்களைச் சந்திக்க வந்திருக்கும் இந்த நேரத்தில் இதே கேள்வியை நானும் பலரிடமிருந்து எதிர்கொள்கிறேன். இந்த நிலை மாற வேண்டும்” என்கிறார்.

பொதுவாக, அறிவியல் துறையில் தீவிரமாகச் செயல்படுபவர்களால் வழக்கமான வாழ்க்கையை வாழ முடியாது என்கிற கருத்து நிலவுகிறது. “இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால், நான் என்ன செய்துகொண்டிருக்கிறேனோ அதுதான் என் வாழ்க்கை. நண்பர்களை நீண்ட காலம் சந்திக்காமல் இருப்பது, சமூக வாழ்க்கையை விட்டு விலகியிருப்பது போன்றவை இந்தத் துறையில் இயல்பான விஷயம்தான். பல நேரம் அழுத்தங்களைச் சந்திக்கும்போது இந்தத் துறையைவிட்டுப் போய்விடலாமா என்றுகூட யோசித்திருக்கிறேன்.

ஆனால், அந்த நேரங்களில் இதை விட்டுவிட்டு மனதுக்குப் பிடித்த வேறு எதை செய்யப்போகிறேன் என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன். அறிவியல் பாதையைத் தேர்ந்தெடுப்பவர்களிடம் எப்போதும் இருக்க வேண்டியது பொறுமை. அதை எந்தக் கட்டத்திலும் இழக்காமல் இருந்தால் நிச்சயம் இந்தத் துறையில் சாதிக்கலாம்” என்றார் சாதனைகள் படைக்கப் புறப்பட்டுவிட்ட சஹானா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x