Last Updated : 25 Oct, 2016 11:23 AM

 

Published : 25 Oct 2016 11:23 AM
Last Updated : 25 Oct 2016 11:23 AM

கேள்வி மூலை 05: ஆறு ஆறிவு மட்டும்தான் நமக்கு இருக்கிறதா?

மனிதர்களுக்கு ஐந்து புலனறிவுகள் மட்டுமே உண்டு. ஆறாவது பகுத்தறிவு என்பது மரபான நம்பிக்கை.

மரத்துக்கு ஓரறிவு தொடுதல்; நத்தைகளுக்கு இரண்டறிவு - தொடுதல், சுவை; எறும்புகளுக்கு மூன்றறிவு - தொடுதல், சுவை, முகர்தல்; தேனீக்களுக்கு நான்கறிவு -தொடுதல், சுவை, முகர்தல், பார்வை; பாலூட்டிகளுக்கு ஐந்தறிவு - தொடுதல், சுவை, முகர்தல், பார்வை, கேட்டல் போன்றவை உண்டு. இவற்றைத் தாண்டி மனிதர்களுக்கு ஆறாவது அறிவான பகுத்தறிவு உண்டு.

இந்த இடத்தில் சில உயிரினங்களுக்குக் குறிப்பிட்ட ஒரு அறிவு-உணர்திறன் அதிகமாக இருப்பதையும் குறிப்பிட்டாக வேண்டும். எடுத்துக்காட்டாக, பல பாலூட்டிகளுக்குப் பார்வையைவிட மோப்பத்திறன் அதிகம். ஆனால், மனிதர்களுக்கோ முகரும் திறன் ஒப்பீட்டளவில் குறைவு. மனித மூதாதைகளின் வாழ்க்கை முறை காரணமாக, இந்த இழப்பு ஏற்பட்டிருக்கலாம்.

ஐந்துக்கு மேல்

பகுத்தறிவை விடுத்து, நமக்கு உள்ள மற்ற புலனறிவுகள் ஐந்து என்பது மரபான நம்பிக்கை. ஆனால், நம்முடைய புலனறிவுகள் ஐந்தோடு நின்றுவிடவில்லை என்று நவீன கால விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். நம்முடைய அறிவு அதாவது உணர்ச்சிகளை அறியும் திறனை எப்படி வகைப்படுத்தினாலும், ஐந்து அறிவுகளைவிட அதிகமாகவே நமக்கு உண்டு என்பதுதான் அறிவியல்பூர்வ உண்மை.

இப்படிப்பட்ட மரபு சாராமல் நமக்கு உள்ள உணர்திறன்கள் என்று எடுத்துக்கொண்டால் வலியை உணரும் தன்மை (nociception), வெப்பத்தை உணரும் தன்மை (thermoception), நகரும்போதும்-நடக்கும்போதும் உடலைச் சமநிலையில் வைத்திருக்கும் தன்மை (equilibrioception)… இப்படி நமக்குள்ள கூடுதல் அறிவுத் துறைகளைப் பட்டியலிடலாம்.

மனிதர்களுக்கு இல்லாதது

மனிதர்களைப் போலவே உயிரினங்களுக்கும், மரபாக வகுக்கப்பட்ட அறிவுத் துறைகளைக் காட்டிலும் கூடுதல் அறிவுகள் உண்டு. பல உயிரினங்களால் மின்காந்தப்புலம் (பறவைகள்), நீர் அழுத்தம், நீரோட்டம் (கடல் வாழ் உயிரினங்கள்) போன்றவற்றை உணரும் அறிவு உண்டு. இந்த அறிவு எதுவும் மனிதர்களுக்குக் கிடையாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x