Published : 30 Jun 2014 10:24 AM
Last Updated : 30 Jun 2014 10:24 AM
ஆயிரம் கிலோமீட்டருக்கு மேல் நீண்ட தமிழகக் கடற்கரைகளைப் புயல், சூறாவளிகள், பேரலைகள் போன்றவை அவ்வப்போது தாக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அந்த அலைகளும் புயல்களும் பெரும் சேதம் விளைவிக்காமல் இருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியுமா?
மணல் நிறைந்த கடற்கரைகளும் பெரும் மணல் குன்றுகளும்தான் (Sand dunes) புயல், பேரலைகளின் ஆபத்துகளிலிருந்து நம்மைக் காப்பாற்றுகின்றன. எல்லைப் பாதுகாப்பு வீரர்களைப் போல, கடற்கரைகளில் நின்று நம்மைப் பாதுகாக்கும் பாதுகாவலர்கள் இவை. வேகமாக வந்து மோதும் அலைகளையும், மூர்க்கமாக முன் னேறும் புயல்களையும் தடுத்து, தங்கள் மீது தாங்கிக் கொண்டு வீடுகளையும் வயல்களையும் இவை காப்பாற்றுகின்றன.
அத்துடன் குளங்கள், கிணறுகளில் கடலின் உப்பு நீர் புகுந்துவிடாமல் இவை தடுக்கின்றன. உப்புத்தன்மை கொண்ட கடல் காற்றின் வீரியத்தை இவை பெருமளவு குறைக்கின்றன. இந்தக் காற்று கட்டிடங்களை அரிக்கக் கூடியது, தாவரங்களைச் சிதைக்கக் கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
மணல்மேடுகளில்தான் மீனவர்களின் படகுகள், அவர்களது வீடுகள், பொருட்கள் எல்லாமே இருக்கின்றன. மீன் வியாபாரமும் நடக்கிறது. மீனவர்கள் இல்லாவிட்டால் மீனும் கருவாடும் கிடைக்காது. ஊட்டச்சத்துமிக்க உணவும் கிடைக்காது. இவை அனைத்தையும் தாங்குபவை மணல்குன்றுகளே.
எப்படி உருவாகிறது?
கடற்கரைகளுக்கு அருகே இருக்கும் பெரும் மணல் மேடுகளும் குன்றுகளும், மணல்குன்றுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை நிலப்பகுதிக்குள் நீண்டிருக்கும் கடற்கரையின் நீட்சிதான். மணல் குன்றுகளைக் காற்றே கட்டுப்படுத்துகிறது.
பெருமளவு மணல், மணல் துகள்களை நகர்த்தும் அளவு வேகம் கொண்ட காற்று, மணல் குவியலாகக் குவிவதற்கு ஏற்ற ஓர் இடம் ஆகிய மூன்றும் இருந்தால் இயற்கையாகவே மணல் குன்றுகள் உருவாகி விடும்.
கடற்கரைகளிலிருந்து நிலப்பகுதியை நோக்கி வீசும் காற்று நுண்ணிய மணலை அடித்துவந்து சேர்க்கிறது. காற்று கொண்டுவரும் இந்த மணல் தாவரங்கள், இதர தடைகளில் சிக்கிக் கொள்ளும்போது மணல் குன்று உருவாக ஆரம்பிக்கிறது. முதலில் சிறிய மணல் மேடாக உருவாகும் இவை, காலப்போக்கில் மணல் சேரச் சேரப் பெரிய குன்று போல உருவெடுக்கின்றன.
அதேநேரம், மணல் குன்றை உருவாக்கும் காற்றே அதை அழிக்கவும் கூடும். சூறாவளி, புயல்கள் ஆகியவற்றின் போது வீசும் காற்றும் பேரலைகளும் கடற்கரைகளையும், மணல் குன்றுகளின் முன் பாகத்தையும் அழிக்கக்கூடும். காற்றின் வேகம் வழக்கமான அளவுக்குத் திரும்பிய பிறகு, மீண்டும் மணல் குன்று பழையபடியே பெருக்கத் தொடங்கிவிடும்.
ஆபத்துகள்
மணல் கொள்ளை, கனிமம் தோண்டியெடுப்பு, கடல் தடுப்புச் சுவர், கான்கிரீட் கட்டிடங்கள், கடற்கரையோர நெடுஞ்சாலைகள், சுற்றுலா, சுற்றுச்சூழல் மாசுபாடு, கடல் அரிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மணல் குன்றுகள் அழிந்துவருகின்றன.
கோட்டைச்சேரிமேடு, கோட்டைமேடு, சின்னக் கோட்டைமேடு, கிளிஞ்சல்மேடு என மணல் குன்றுகளின் மேலேயே அமைந்திருக்கும் பல மீனவக் கிராமங்கள் தமிழகத்தில் உண்டு. 2004-ம் ஆண்டு டிசம்பர் 26 அன்று சுனாமி என்ற ஆழிப் பேரலை கடற்கரைகளைத் தாக்கியபோது, மணல் குன்றுகள் அமைந்திருந்த கிராமங்கள் தப்பித்தன அல்லது உயிர்ச் சேதமும் சொத்து இழப்பும் அங்கே குறைவாக இருந்தன. அந்தக் கிராமங்கள் மணல்குன்றுகளுக்குப் பின்னாலோ, மணல் குன்றின் மேலேயோ இருந்ததுதான் இதற்குக் காரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT