Published : 23 Jun 2014 10:18 AM
Last Updated : 23 Jun 2014 10:18 AM
நீங்கள் ஒரு குறிப்பிட்ட பல்கலைக்கழகம், கல்லூரியில் (கலை அறிவியல்) சேரக் காத்திருக்கிறீர்களா? அந்தக் கல்வி நிறுவனத்தின் முழு விவரங்களையும் அறிந்துகொண்டு விட்டீர்களா? இந்தக் கேள்விகளுக்குப் பலரிடம் விசாரித்துவிட்டதாகப் பதில் வரும். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கென நாக் எனப்படும் தேசிய தர மதிப்பீட்டு கவுன்சில் ( National Assessment and Accreditation Council) வழங்கும் தர மதிப்பீட்டு அங்கீகாரப் பட்டியலில் நீங்கள் சேர விரும்பும் கல்லூரிக்கு எந்த இடம் தரப்பட்டிருக்கிறது என்பதை முழுமையாக அறிந்திருக்கிறீர்களா? இல்லையென்றால் இனியாவது இணையதளத்தைப் பாருங்கள். அதற்கு முன்பாக நாக் அமைப்பை பற்றி அறிந்துகொள்வோமா?
‘நாக்’ அமைப்பானது பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி) நிதி உதவியுடன் செயல்படும் ஓர் அமைப்பு. 1986-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கையின்படி கல்வியின் தரக் குறைபாடுகளைக் களைய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. இதன்படி பல்கலைக்கழங்கள், கல்லூரிகளைத் தர வரிசைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. இதற்காக 1994-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட அமைப்புதான் ‘நாக்’. இதன் தலைமை அலுவலகம் பெங்களூரில் உள்ளது.
இந்தியாவில் உயர் கல்வி நிறுவனங்களுக்குத் தர வரிசை பெறுவது என்பது 2010-ம் ஆண்டுக்கு முன்புவரை தானாக முன் வந்து பெறும் நிலையிலேயே இருந்தது. ஆனால், 2010-ம் ஆண்டில் இது கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. இதன்படி இந்தியாவில் உள்ள ஒவ்வொரு உயர் கல்வி நிறுவனமும் நாக் மதிப்பீட்டுக்குத் தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது.
‘நாக்’ அமைப்பிடம் விண்ணப்பிக்கும் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நிர்வாகம், பாடத் திட்டம், கற்பித்தல் மற்றும் கற்றலின் நிலை, பணியாற்றும் பேராசிரியர்கள், மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, உள்கட்டமைப்பு வசதிகள் என பல்வேறு நிலைகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும். இதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்களுக்கு ‘ஏ’ கிரேடு, ‘பி’ கிரேடு எனத் தர மதிப்பீடு வழங்கப்படும்.
www.naac.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்றால், எந்தெந்தப் பல்கலைக்கழங்கள், கல்லூரிகள் தேசிய தர மதிப்பீடு அங்கீகாரம் பெற்றுள்ளன என்ற விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழங்களிலோ, கல்லூரிகளிலோ சேர விரும்பும் மாணவர்களுக்கு இது நிச்சயம் பயன் அளிக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT