Published : 03 May 2016 12:23 PM
Last Updated : 03 May 2016 12:23 PM
அது, 6.50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள். விண்ணிலிருந்து சர் என்று நெருப்புக் கோளமாகப் பாய்ந்து வந்தது அந்தக் கல். சுமார் 10 கி.மீ. பருமன் கொண்ட அந்தக் கல் தெற்கு மெக்ஸிகோவில் உள்ள யுகடான் தீபகற்பத்தில் சிக்சலூப் (Chicxulub) பகுதியில் வந்து விழுந்து சுமார் 180 கி.மீ. விட்டம் உடைய பள்ளத்தை ஏற்படுத்தியது. விழுந்த வேகத்தில் அப்போது ஹிரோஷிமா அணுகுண்டைப் போலப் பத்துக் கோடி அணுகுண்டுகளின் ஆற்றல் ஒரு கணத்தில் வெளிப்பட்டது. அந்தப் பிரம்மாண்டமான மோதல் உலககெங்கும் பிரளயத்தை உண்டாக்கிப் பேரழிவை ஏற்படுத்தியது.
இடிபோல வந்து தாக்கிய அந்த மோதலில் எழுந்த தூசு பல ஆண்டுகள் சூரிய ஒளியை மறைத்தது. சூரிய ஒளி இல்லாததால் மரம், செடிகொடிகள் மடிந்துபோயின. செடிகொடிகள் இல்லாது போனதால் உணவுச் சங்கிலி அறுந்து பல உயிர்கள் உணவின்றி மடிந்துபோயின.
சூரிய ஒளியை மறைத்த தூசி
விண்கல் மோதல் ஏற்படுத்திய அதிர்வால் உலகெங்கும் எரிமலைகள் வெடித்துச் சீறின. தக்காணப் பீடபூமியை உருவாக்கிய தக்காண எரிமலைப் பிரளயமும் அந்த சமயத்தில்தான் ஏற்பட்டது. சுமார் 50,000 ஆண்டுகள் விடாமல் வெடித்துச் சிதறிய எரிமலைகளும் பூமியின் வளிமண்டலத்தில் தூசைப் பரப்பி சூரிய ஒளியைத் தடுத்ததால் பல உயிரினங்கள் அழிந்துபோயின. கந்தகம் போன்ற பொருட்கள் வளிமண்டலத்தில் தூவப்பட்டதால் வளிமண்டலம் நச்சுப்படுத்தப்பட்டது.
சுமார் 6.50 கோடி ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்தப் பேரழிவுதான் கிரீத்தேசியக் காலத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. டைனசார்களை அழித்து நாசம் செய்ததும் இந்தப் பேரழிவுதான். டைனசார்கள் மட்டுமின்றி முதுகெலும்பற்ற பல்வேறு உயிரினங்கள், ஊர்வன வகைகள் முதற்கொண்டு நுண்ணுயிரிகள் வரை பல உயிரினங்கள் அழிந்துபோயின. அப்போது பூமியில் இருந்த மொத்த உயிரினங்களில் மூன்றில் இரண்டு பகுதி அழிந்துபோயின என்பது அறிவியலாளர்களின் மதிப்பீடு.
கடலில் அபரிமிதமாக அதுவரை காணப்பட்ட அம்மோனைட் போன்ற ஆழ்கடல் விலங்குகள் உட்பட உலகின் உயிரினங்கள் அந்த விண்கல் மோதலால் பெருமளவு அழிந்துபோனாலும் வேறு பல ஆழ்கடல் விலங்குகள் அழிந்துபோகாமல் தப்பிப் பிழைத்தன. விண்கல் மோதலால் கடலின் ஆழத்தில் நேரடி பாதிப்பு இருக்காதுதான். ஆயினும் மோதிய விண்கல்லின் விளைவாக வளிமண்டலத்தில் சல்பர் ட்ரை ஆக்ஸ்சைடு நிரம்பி, பல நாட்கள் கந்தக அமில மழை பொழிந்து கடல் அமிலமாகியிருக்கும். கடலின் மேலே காணப்பட்ட பாக்ட்ரியா போன்ற உயிரிகள் இந்த அமிலச் சூழலில் அழிந்துபோயிருக்கும். அதன் காரணமாக கடலின் உணவுச் சங்கிலி அறுந்து கடல் உயிரினங்கள் எல்லாம் மடிந்துபோயிருக்கும். இதன் தொடர்ச்சியாக, கடலின் அடிப் பகுதிக்கு உணவு செல்வது தடைபட்டு ஆழ்கடல் விலங்குகளும் அழிந்துபோயிருக்க வேண்டும். ஆனாலும் மடியவில்லை என்பதுதான் பெரும் புதிர்.
ஆழ்கடலில் மட்டுமே வாழ முடியும்
கார்டிஃப் பல்கலைக்கழக அறிவியலாளர்கள் கடலுக்கு அடியில் துளையிட்டுத் தொல்படிவங்களை ஆராய்ந்து பார்த்தார்கள். குறிப்பிட்ட இந்த விண்கல் மோதலிலும் ஒருசில பாக்டீரியா மற்றும் பாசி வகை உயிரினங்கள் தப்பிப் பிழைத்துக் கடலின் மேலே மறுபடி துளிர்த்து வளர்ந்தன எனவும், இந்த உயிரினங்கள் இயல்பாக இறக்கும்போது அவற்றின் உடலம் உள்ளிட்ட கழிவுகள் கடலின் அடியில் கீழே விழும்போது அவற்றை உணவாகக் கொண்டு வாழும் ஆழ்கடல் உயிரிகள் தப்பின என்றும் அவர்கள் நிறுவினார்கள்.
ஆழ்கடலில் வாழும் உயிரிகள் அங்குள்ள மிகுந்த அழுத்தத்துக்கு ஏற்ப தகவமைப்பு கொண்டவை. அந்த உயிரிகள் கடலின் மேற்புறத்துக்கு வந்தால் கடலின் மேலே உள்ள குறைந்த அழுத்தத்தில் உடல் பெருத்து வெடித்துவிடும்.
கடலடியில் பெருமளவு முதன்மை உணவு உற்பத்தி கிடையாது. சூரிய ஒளியைக் கொண்டு உணவு தயாரித்துக்கொள்வதும், கடலின் மேற்புறத்தில் வாழ்வதுமான நுண்ணுயிரிகள்தான் கடலின் உயிரிச் சூழலுக்கு முதன்மைக் கண்ணி. இந்த பாக்டீரியாவை உண்டு வாழும் சிறு மீன், அதை உண்டு வாழும் பெரிய மீன் என்று கடலின் உணவுச் சங்கிலி விரியும். இறுதியில், கடலின் மேலே உள்ள பிராணிகள் வெளியிடும் கழிவு, இறந்த பிறகு அவற்றின் உடல் முதலியவை கடலின் அடிப் பாகத்துக்குச் செல்லும். இவைதான் ஆழ்கடல் உணவுச் சங்கிலியின் முதல் கண்ணி. அந்த உணவை உண்ணும் உயிரிகள், அந்த உயிரிகளை வேட்டையாடும் உயிரிகள் என அங்கேயும் உணவுச் சங்கிலி இருக்கும்.
பிரளயத்தைத் தாகுபிடித்த பாசி
அட்லாண்டிக் கடலின் அடியில் தோண்டி அந்தக் காலப் புதைபடிவங்களை அந்த அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். ஆக்ஸிஜன் ஐசோடோப்புகளை அளவிட்டதன் மூலம், கடலின் மேலிருந்து வந்து விழுந்த உயிர்ப் பொருட்கள் குறித்து அனுமானிக்க முடிந்தது. மேலும், பிரளய மோதல் நிகழ்வுக்குப் பிறகு வெறும் 17 லட்சம் ஆண்டுகளில் கடல் தன்னை மறுபடியும் சீராக்கிக்கொண்டது என்ற வியப்பான செய்தியையும் இந்த ஆய்வு சுட்டுகிறது.
சில வகை கடல் பாசிகள் அதீத வெப்பம், அதீதக் குளிர் அல்லது ஆழ்ந்த இருட்டு போன்ற மோசமான சூழ்நிலைகளுக்குள் மாட்டிக்கொண்டால் அவை தம்மைக் காப்புக்கூட்டுக்குள் புதைத்துக்கொண்டு தப்பும். இவ்வாறான பாசி வகைகள் அந்தப் பிரளய நிகழ்வையும் தாங்கி நிலைத்தன என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இந்த ஆய்வு அந்தக் காலப் பகுதி தொடர்பானது மட்டுமல்ல. வளிமண்டல கார்பனை கடல் எப்படி உறிஞ்சித் தன்னுள் பொதிந்து வைத்துக்கொள்கிறது என்பதையும் இந்த ஆய்வு சுட்டுகிறது. வளிமண்டலத்தில் கடந்த நூறு வருடங்களாக நாம் செலுத்தும் கார்பன் மாசை அகற்றித் தன்னுள் பொதிந்து வைத்து நம்மைக் காத்துவருகிறது கடல். கடலில் ஏற்படும் கார்பன் சுழற்சி குறித்து அறிந்துகொள்வதன் மூலம் இன்று நம்மால் உருவாகும் கார்பன் மாசு எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT