Last Updated : 05 Apr, 2016 12:38 PM

 

Published : 05 Apr 2016 12:38 PM
Last Updated : 05 Apr 2016 12:38 PM

நம்பிக்கையோடு படியுங்கள்!

“இவ்வளவு மார்க் வாங்கிட்டு எதுக்கு ஹிஸ்ட்ரி படிக்கணும்னு ஆசைப்படுற?” - இது போன்ற கேள்வியைப் பலர் எதிர்கொண்டிப்பீர்கள். 10-ம் வகுப்பிலும், +2-விலும் உயர்ந்த மதிப்பெண்களைக் குவிக்கும் மாணவர்கள் படிக்க வேண்டிய பாடப்பிரிவுகள் உயிரியல், கணிதம், கணினிதான் என்னும் மரபு காலங்காலமாக இருக்கிறது. பொறியாளர், மருத்துவர், கணினி நிபுணர் ஆகும் கனவும் விருப்பமும் உங்களுக்கு இருந்தால் சரி. அதே நீங்கள் எழுத்தாளராகவோ, பத்திரிகையாளராகவோ, சமூகச் செயல்பாட்டாளராகவோ, ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். போன்ற அரசு அதிகாரியாகும் லட்சியம் கொண்டிருந்தால் வேறு படிப்போ, வாய்ப்போ இல்லையா? நிச்சயமாக உள்ளது. பொறியியல், கணிப்பொறி, மருத்துவம் தவிர ஏகப்பட்ட பாடப்பிரிவுகள் இருக்கின்றன. அவற்றைப் படித்தால் பிரகாசமான எதிர்காலமும் காத்திருக்கிறது.

வெற்றி நிச்சயம்

எதிர்பார்த்த எந்தப் பாடப் பிரிவிலும் சீட் கிடைக்கவில்லை எனும் பட்சத்தில் வேறு வழியில்லாமல் கலை, இலக்கியப் படிப்புகளில் சேரும் காலம் போயேபோச்சு. சென்னையிலிருக்கும் லயோலா கல்லூரி, மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி முதல் டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் வரை இந்தியக் கல்வி நிறுவனங்கள் பல தலைசிறந்த கலை, இலக்கியப் பட்டப் படிப்புகளை வழங்குவதற்காகவே புகழ் பெற்றவை. வரலாறு, சமூகவியல், அரசியல்-அறிவியல், தத்துவம், பொருளாதாரம், மானுடவியல், இலக்கியம், நிகழ்த்து கலை இப்படி ஏகப்பட்ட பாடப் பிரிவுகள் இருக்கின்றன. இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளை இந்தப் பாடங்களில் படித்தால் வேலை வாய்ப்பும், தொழில்முறை சார்ந்த வளர்ச்சியும் உங்களுக்காகக் காத்திருக்கின்றன.

ஒருவேளை +1, +2வில் அறிவியல் பிரிவைத்தான் தேர்ந்தெடுத்தீர்கள். ஆனால் இப்போது இதுபோன்ற படிப்புகளைப் படிக்க ஆசையாக இருக்கிறதா? கவலையே வேண்டாம். பெரும்பாலான கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் கலை, இலக்கியப் பாடப் பிரிவுகளை எல்லாப் பாடப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களையும் படிக்க அனுமதிக்கின்றன. நீங்கள் +2-வில் எந்தக் குரூப் எடுத்திருந்தாலும், இப்போது உங்களுக்குப் பிடித்த மனிதவியல் (humanities) படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம். அதேபோல இளநிலையில் அறிவியல் படித்திருந்தால்கூட முதுநிலையில் தாராளமாக மனிதவியலில் எந்தப் படிப்பை வேண்டுமானால் தேர்ந்தெடுக்கலாம்.

“எனக்கு அரசியல்-பொருளாதாரம்- சமூகவியல் போன்ற பாடங்களைப் படிக்க ஆசைதான், ஆனால் வீட்டில் ஒத்துக்க மாட்டாங்களே!” என்னும் ஏக்கமா? இது முக்கியமான சிக்கல்தான். பெரும்பாலான பெற்றோர், உறவினர், சுற்றத்தார், அவ்வளவு ஏன் பள்ளி-கல்லூரி ஆசிரியர்கள்கூட மனிதவியல் படிக்க ஊக்கம் தருவதில்லை. காரணம், இவற்றைப் படித்தால் வேலைக்கு உத்தரவாதம் உண்டா என்னும் அச்சம் மேலோங்குகிறது. ஆனால் நிதர்சன உலகை விசாலமான பார்வையோடு பார்த்தால் பயம் பறந்துபோகும். பெற்றோரும் இதை உணர வேண்டும். இந்தத் துறையில் இருக்கும் வாய்ப்புகளைப் பற்றிய விழிப்புணர்வுதான் இந்தப் பிரச்சினையைப் போக்க ஒரே வழி.

ஐ.ஏ.எஸ். ஆகலாம்

சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்குத் தானாகப் பயிற்சி எடுப்பதைவிடவும் மனிதவியல் பட்டப்படிப்புகளைக் கல்லூரியில் முறையாகப் படித்தால் கூடுதல் அனுகூலம் உண்டு. ஏனெனில் பொருளாதாரம், தர்க்கவியல், சட்டம், கணிதம், புள்ளியியல், அரசியல், தத்துவம் உள்ளிட்ட பாடங்களில் ஆழமான புரிதல் கிடைக்கும். மொழி அறிவும் விரிவடைவதால் யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வான சிசாட் தேர்விலும் எளிதில் தேர்ச்சி பெறலாம்.

எழுத்தின் வலிமை

அரசியல் தத்துவம், பொருளாதாரம், ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம் ஆகிய படிப்புகளைத் தேர்ந்தெடுத்தால் கட்டாயம் விமர்சனப் பார்வையும், மொழி வளமும், படைப்பாற்றலும் வளம் பெறும். கட்டுரை எழுதுவது, சமூக அரசியல் பிரச்சினைகளை அலசி ஆராய்வது படிப்பின் ஒரு அங்கமாகவே இருப்பதால் உங்களுக்குள் இருக்கும் பத்திரிகையாளர் பட்டை தீட்டப்படுவார்.

சமூகச் செயல்பாட்டாளர்

சூழலியல், சர்வதேச வளர்ச்சி, சுற்றுச்சூழல், மனித உரிமை, ஊரக வளர்ச்சி, சமூக வளர்ச்சி, பொது நிர்வாகம், பெண்ணிய ஆய்வுகள், பொருளாதார வளர்ச்சி இப்படி ஏகப்பட்ட பாடங்கள் டெவலப்மெண்டல் ஸ்டடீஸ் (Developmental Studies - வளர்ச்சி குறித்த பாடங்கள்) பட்டப்படிப்பில் கற்றுத் தரப்படுகின்றன. திண்டுக்கல் காந்தி கிராம ஊரக நிறுவனம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், குவஹாத்தி ஐ.ஐ.டி., பெங்களூரு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் இப்படிப் பல நிறுவனங்களில் இதைப் படிக்கலாம். அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அர்ப்பணிப்போடு உழைக்க விரும்பினால் இந்தப் படிப்பு அதற்கான கதவுகளைத் திறக்கும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும் நிச்சயம் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். ஆக, நீங்கள் இஷ்டப்பட்டதை வேலையாகவே செய்யலாம்.

மேலும் மேலும்…

தொழில்நுட்பக் கல்விக்கு உயர் மதிப்பு பெற்ற ஐ.ஐ.டி.யிலும் மனிதவியல் துறை இருப்பது பலருக்கும் தெரியாது. ஐ.ஐ.டி., டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சைன்சஸ் ஆகிய நிறுவனங்களில் 5 ஆண்டுகள் முதுகலை ஹுயூமானிட்டீஸ் பட்டப்படிப்பு அளிக்கப்படுகிறது. இதைப் படிக்கும்போது உங்களுக்குப் புதிய கலவையில் பாடங்கள் கொடுக்கப்படும். உலக மொழிகளைக் கற்றுக்கொள்ளவும், ஆய்வுத் திறனைக் கூர்மைப்படுத்தவும், கணித ஆற்றலை மேம்படுத்தவும் இந்தப் படிப்பு உதவும்.

இந்தியாவுக்குப் புகழ் சேர்க்கும் இன்னொரு நிறுவனமான பிட்ஸ் பிலானியிலும் (BITS Pilani, Rajasthan) M.S.Consciousness Studies என்னும் வித்தியாசமான பட்டப்படிப்பு அளிக்கப்படுகிறது. இன்னும் கிரிமினாலஜி, டூரிசம் மேனேஜ்மெண்ட், கவுன்சலிங் இப்படி ஏகப்பட்ட பாடப் பிரிவுகள் உங்கள் வரவை எதிர்பார்த்திருக்கின்றன. நீங்கள் இப்போது செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான். நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள் என்பதை முதலில் கண்டுபிடியுங்கள்!



அறிவியல், வணிகவியல், கணினி படிப்புகள் தவிர வரலாறு, சமூகவியல், இலக்கியம், மானுடவியல் ஆகிய படிப்புகள் அனைத்தும் ஆங்கிலத்தில் ஹ்யுமானிட்டீஸ் என அழைக்கப்படுகின்றன. ‘மனிதவியல்’ இதற்கு நிகரான தமிழ்ச் சொல் எனலாம். மானுடவியல் என்பது ஆந்த்ரபாலஜி (Anthropology) என்னும் பாடத்துக்கான ஆகிவந்த தமிழாக்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x