Last Updated : 16 Jun, 2014 04:56 PM

 

Published : 16 Jun 2014 04:56 PM
Last Updated : 16 Jun 2014 04:56 PM

சைபர் கபே வழக்கொழிந்து போகிறதா?

இணையம் அறிமுகமான காலத்தில் பெரும்பாலானோர் தங்கள் அருகே இருக்கும் கம்ப்யூட்டர் மையங்களுக்குச் சென்று பிரௌஸ் செய்துவந்தார்கள். ஆனால் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்ததால் பெரும்பாலானோர் வீடுகளில் கம்ப்யூட்டரை வாங்கி வைத்துக்கொண்டார்கள்; அதைத் தொடர்ந்து ஸ்மார்ட்போன்களும் சாதாரண விலையில் தாராளமாகக் கிடைத்தன. இதனால் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. இப்போதெல்லாம் கல்லூரி மாணவ மாணவியர் கையில் கைரேகை இருக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக மொபைல் போன் இருக்கிறது. சந்தையில் கிடைக்கும் நவீன போன்களை எப்படியாவது பெற்றோரிடம் சொல்லிக் கைப்பற்றுகிறார்கள். பெற்றோருக்கும் தம் குழந்தை நவீனத் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வது பற்றி பெரும் மகிழ்ச்சி இருக்கிறது.

பருவ வயதினரின் இணைய பயன்பாடு தொடர்பாக கடந்த வருடம் ஜூலை முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் நிறுவனம் 12 முதல் 18 வயதினரிடையே ஓர் ஆய்வை நடத்தியிருக்கிறது. அகமதாபாத், பெங்களூரு, புவனேஷ்வர், கோயம்புத்தூர், கொச்சி உள்ளிட்ட 14 நகரங்களில் உள்ள சுமார் 19 ஆயிரம் பருவ வயதினரிடம் கேள்வி கேட்டுப் பதில்கள் பெறப்பட்டுள்ளன. இந்த ஆய்வு முடிவை டிசிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பள்ளியில் படிக்கும் மாணவர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்துவதில் சளைத்தவர்கள் அல்ல என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் எந்த நகரத்தில் பயிலும் பள்ளி மாணவர்கள், பருவ வயதினரில் யார் அதிகம் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துவார்கள் எனக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு ஏதாவது ஒரு மெட்ரோபாலிடன் நகரத்தைச் சொல்லிவிடுவோம். ஆனால் உண்மை அதுவல்ல. குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் நகரத்தில் உள்ள மாணவர்களே அதிகம் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்ல, அந்நகரத்திலுள்ள பருவ வயதினரில் 95.12 சதவீதத்தினர் கையில் மொபைல் வைத்துள்ளனர்; 94 சதவீதமானோர் ஃபேஸ்புக் கணக்கு வைத்துள்ளார்கள். தேசிய அளவில் 85.97 சதவீதமானோரும் மும்பை, டெல்லி போன்ற மகாநகரங்களில் 85.14 சதவீதமானோரும் மட்டுமே ஃபேஸ்புக் கணக்கு வைத்துள்ளனர். மொபைல் பயன்படுத்துவது தவிர எழுபது சதவீதத்தினருக்கு மேற்பட்டோர் வீடுகளில் கம்ப்யூட்டர் வைத்துள்ளனர்.

இந்தியாவில் சைபர்கபே எனப்படும் இன்டெர்நெட் மையங்களுக்குச் சென்று பிரௌஸ் பண்ணுவது முன்பு பிரபலமாக இருந்தது. இப்போது மாநகரங்களில் உள்ள இத்தகைய சைபர்கபேக்களுக்குப் பருவ வயதினரிடையே பெரிய ஆதரவு இல்லை என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலானோரிடம் மொபைலும், வீடுகளில் கணினியும் உள்ளதால் சைபர்கபேவுக்குச் செல்வது குறைந்துள்ளது, மேலும் சைபர்கபே பாதுகாப்பானதில்லை என்னும் விழிப்புணர்வும் பருவ வயதினரிடம் ஏற்பட்டிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

நகரத்துப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் நவீனத் தொழில்நுட்பங்களை எளிதில் கற்றுக்கொண்டு பயன்படுத்தத் தொடங்கிவிடுகிறார்கள் என்கிறார் டிசிஎஸ் நிறுவனத்தின் மனித வளத் துறை அதிகாரியான அஜய் முகர்ஜி.

மாணவர்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்தும் அளவுக்கு ட்விட்டரைப் பயன்படுத்துவதில்லை. மிக எளிதாக ஃபேஸ்புக்கை அணுகுகிறார்கள், ஆனால் ட்விட்டர் அவர்களுக்கு குழப்பம் தருவதாக உள்ளது. அதனால் ட்விட்டரை அவர்கள் அதிகம் உபயோகிப்பதில்லை. பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை வெறும் பொழுதுபோக்காக மட்டும் கருதுவதில்லை என்றும் நாட்டு நடப்புகளை அவற்றின் வாயிலாகவே அறிந்துகொள்வதாகவும் பருவ வயதினர் தெரிவித்துள்ளார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x