Published : 19 Apr 2016 11:30 AM
Last Updated : 19 Apr 2016 11:30 AM
மனைவி ஜோன்னாவுடன் லண்டனில் நடைபெறும் மாரத்தான் போட்டியை டிவியில் பார்க்கிறார் ராபர்ட். “உங்களால் மாரத்தானில் ஓட முடியாது. குறைந்தது அந்த முயற்சியில்கூட இறங்க முடியாது” என்று விளையாட்டாக ராபர்ட்டைச் சீண்டினார் ஜோன்னா. சட்டென துள்ளி குதித்து 20 பென்ஸ் பந்தயம் வைத்துக்கொள்ளலாமா என்று கேட்ட ராபர்ட், மாரத்தானைவிட அதிக தூரம், அதாவது 50 கி.மீ. ஓடுவதாகச் சொன்னார்.
அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து, ரிச்மண்ட் மாரத்தான் மேப்பை எடுத்துக்கொண்டு கிளம்பினார். மாரத்தான் முழுமையாக அவரை ஆட்கொண்டது. தன்னுடைய வேலையை உதறினார். தினம் ஒரு மாரத்தான் என்று 365 மாரத்தான் ஓட்டங்களை ஓராண்டில் நிகழ்த்த முடிவு செய்தார். ஓராண்டு நிறைவில் 370 மாரத்தான் ஓட்டங்களை ஓடி முடித்து, உலக சாதனை நிகழ்த்தினார். பல நாட்கள் 50 கி.மீ. தூரத்தைக் கடந்திருப்பதால் மொத்தம் 422 மாரத்தான் தூரங்களை ஓராண்டில் கடந்திருக்கிறார் ராபர்ட்!
எதற்காக இந்த ஓட்டம்?
இன்றும் ராபர்ட் தன் ஓட்டத்தை நிறுத்தவில்லை. பல்வேறு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்கிறார். பெரும்பாலான போட்டிகளில் வாகை சூடியிருக்கிறார்! குழந்தைகளுக்கான நிதி திரட்டுவதற்காக அதிக அளவில் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இதுவரை சுமார் 2 கோடி ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்திருக்கிறார். கஷ்டப்படும் குழந்தைகளுக்கு இன்னும் மகிழ்ச்சியான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதற்காக மேலும் மேலும் ஓடிக்கொண்டிருக்கிறார்.
ஒரு மனிதரால் இந்தச் சாதனையை எப்படி நிகழ்த்த முடிந்தது?
“என் மன பலத்தால்தான் இதைச் சாதிக்க முடிந்தது. அந்த மன பலம் என் வாழ்க்கையின் இருட்டான பகுதியில் இருந்து எனக்குக் கிடைத்தது” என்கிறார் ராபர்ட்.
குடிகார அப்பா. தினமும் வீட்டில் ரகளை. மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அம்மா, சகோதரி, ராபர்ட் என அனைவரும் பாதிக்கப்பட்டனர். அப்பாவிடமிருந்து அனைவரும் தப்பிச் சென்றனர். 6 வயது ராபர்ட்டை ஒரு காப்பகத்தில் சேர்த்துவிட்டார் அம்மா. வன்முறையைப் பார்த்துப் பழகிய ராபர்ட், ஒரு வன்முறையாளராகவே இருந்தார். பின்னர் தன் அப்பாவைப்போல இருக்கக்கூடாது என முடிவெடுத்துத் தன்னை மாற்றிக்கொண்டார்.
படிப்பும் விளையாட்டும் பள்ளியின் உதவி தலைமையாசிரியராக இருந்த பீட்டர் வெல்ஸ், 12 வயது ராபர்ட்டை அரவணைத்து ராணுவப் பள்ளியில் சேர்த்துவிட்டார். அனைத்து விளையாட்டுகளிலும் பங்கேற்க வைத்தார். உடல் வலிமையோடு மன வலிமையையும் உருவாக்கினார். தன் இருட்டு வாழ்க்கையை கிட்டத்தட்ட மறந்தே போனார் ராபர்ட். பீட்டர் வெல்ஸ் வளர்ப்புத் தந்தையாக மாறியிருந்தார்.
பள்ளி, கல்லூரி படிப்பு முடித்து, ஒரு நிறுவனத்தில் மேனேஜராக வேலையில் சேர்ந்தார். மனைவி, குழந்தைகள் என்று அமைதியான வாழ்க்கை வாழ்ந்துவந்தார் ராபர்ட்.
இவருடைய சாதனைகளைக் கண்டு வியந்து ஆராய்ந்தார்கள் நிபுணர்கள். “வலி அதிகமாகத்தான் இருக்கும். ஆனால் தன்னால் எதையும் செய்ய முடியும்” என்று நம்புவதால் மட்டுமே ராபர்ட் இத்தனை உயரத்துக்குச் சென்றிருக்கிறார் என்கிறார்கள். ஒருமுறை கால் உடைந்துவிட்டது. 3 மாதங்கள் படுக்கையில் இருக்கும்படி மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். ஆனால் மூன்றே வாரங்களில் காலை சரி செய்துகொண்டு ஓடிய ராபர்ட்டைப் பார்த்து உலகமே வியந்தது.
கடந்த ஆண்டு ஏராளமான சாதனைகளையும் சவால்களையும் தன்வசமாக்கியிருக்கிறார் ராபர்ட். டிரான்ஸ்-அமெரிக்கன் ஓட்டப் பந்தயம், 482 மணி நேரத் தொடர் ஓட்டம் போன்றவற்றில் வெற்றி வாகை சூடினார். 373.75 மைல் தூரத்தை 88 மணி நேரம், 17 நிமிடங்களில் தூங்காமல் கடந்து, உலக சாதனையை உடைத்து, புதிய சாதனை படைத்தார் ராபர்ட்!
எதற்கு இத்தனை வலி?
“இது வெறும் ஓட்டம் அல்ல. எங்கெல்லாம் குழந்தைகள் தவறாக நடத்தப்படுகிறார்களோ, எங்கெல்லாம் குழந்தைகள் கஷ்டப்படுகிறார்களோ, அந்தக் குழந்தைகளின் வாழ்க்கை மேன்மையடைய வேண்டும் என்பதற்காகவே நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். ஏராளமான பள்ளிகளுக்குச் செல்கிறேன். குழந்தைகளைச் சந்திக்கிறேன். அவர்களின் கதைகளைக் கேட்கிறேன். என் கதையைப் பகிர்ந்துகொள்கிறேன். அவர்களைக் கஷ்டத்தில் இருந்து மீட்டு, நல்ல வாழ்க்கை அமைக்க நடவடிக்கைகள் எடுத்து வருகிறேன்.
அதற்கு இதுவரை சம்பாதித்த பணம் போதுமானதாக இல்லை. உலக அமைதிக்காகவும் குழந்தைகளுக்காகவும் எந்தச் சவாலையும் ஏற்கத் தயாராக இருக்கிறேன். அடுத்தது என் இலக்கு ஆர்டிக் பகுதியில் ஓட வேண்டும் என்பது. எல்லோரும் முடியாது என்கிறார்கள். ஆனால் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. முடியாததைச் செய்து பார்ப்பதில்தான் சுவாரசியமே அடங்கியிருக்கிறது. அதில்தான் நல்ல விஷயங்களுக்கு அதிகமான வருமானமும் கிடைக்கிறது” என்கிறார் கடந்த ஆண்டு அமைதி மற்றும் விளையாட்டுக்கு வழங்கப்படும் ‘இன்டர்நேஷனல் சாம்பியன் ஆஃப் த இயர்’ விருதை வென்ற ராபர்ட் யங்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT