Last Updated : 16 Jun, 2014 06:20 PM

 

Published : 16 Jun 2014 06:20 PM
Last Updated : 16 Jun 2014 06:20 PM

தமிழுக்கு வெற்றி தேடித் தந்தவர்

மத்திய அரசின் ஆட்சிப் பணிக்குச் சென்ற ஆண்டு நடந்த தேர்வின் முடிவுகள் தற்போது வெளியாகிப் பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளாக வலம்வந்துகொண்டுள்ளன. இந்தச் செய்திகளில் தேனி மாவட்டம் கொங்குவார்பட்டி கல்லுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன் தனியிடம் பிடித்துள்ளார். இவர் தமிழ்நாடு அளவில் தேர்வான 100க்கும் மேற்பட்டவர்களில் முதலிடம் பிடித்துள்ளார். அகில இந்திய அளவில் 45-ம் இடம் இவருக்கு. இவை எல்லாவற்றையும்விட ஜெயசீலனுக்குப் பெருமை தேடித் தந்துள்ள மற்றொரு விஷயம் தமிழ் வழியில் அவர் தேர்வில் வெற்றிபெற்றிருப்பதுதான். இந்த வெற்றி புற்றீசல்போலப் பெருகியிருக்கும் கல்விச் சந்தைகளை விமர்சனத்திற்கும் உள்ளாக்குகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 12-ம் தேதி வெளிவந்த ‘தி இந்து இளமை புதுமை’இணைப்பிதழில் ‘இளம் சாதனையாளர்’ பகுதியில் இவரின் வெற்றிக்கு கட்டியம் கூறியிருந்தோம்.

ஜெயசீலன், ஏற்கனவே 2012-ம் ஆண்டு நடந்த இந்திய ஆட்சிப் பணித் துறைத் தேர்வில் வெற்றிபெற்றார். அதில் அவர் 600-ம் இடத்தைப் பெற்றவர். அந்த வெற்றி மூலம் இந்திய வருவாய்த் துறை அதிகாரியாகத் (ஐ.ஆர்.எஸ்.) தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது நாக்பூரில் ஐ.ஆர்.எஸ். பணிக்கான பயிற்சியில் உள்ளார். ஜெயசீலனின் பள்ளிக் கல்வியும் பத்தாம் வகுப்பு வரை ஊரில் உள்ள அரசுப் பள்ளியில்தான் அமைந்தது. மேல்நிலைப் பள்ளிப் படிப்பை அவர் கிராமத்திற்கு அருகில் உள்ள ராயப்பன்பட்டி என்னும் சிறு நகரத்தில் உள்ள புனித அலோசியஸ் பள்ளியில் முடித்தார். ஐ.ஏ.எஸ். கனவு என்பது அவரது பள்ளிக் காலத்திலேயே தொடங்கிவிட்டது. அவரது பெற்றோரும் சிறு பிராயத்திலேயே அதற்கான விதையை அவர் மனத்தில் தூவிவிட்டனர். “என்னுடைய பெற்றோர் இருவருக்கும் மேல்நிலைப் பள்ளிப் படிப்புகூட படிக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் நான் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என உற்சாகப்படுத்தினர். என்னுடைய பெற்றோரின் ஆதரவு இந்த வெற்றிக்கு மிக முக்கியமான ஆதாரம்” என்கிறார் ஜெயசீலன். அவர் கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு, முழு நேரமாக ஐ.ஏ.எஸ். தேர்வுக்காகத் தன்னை அர்ப்பணித்துவிட்டார். அதற்கான பொருளாதார உதவிகளை அவரின் பெற்றோர் அவருக்கு ஏற்படுத்தித் தந்துள்ளனர்.

தமிழ் வழிப் படிப்புகள் அருகி வரும் இன்றைய சூழலில் தமிழ்ப் பாடத்தை உயர்கல்வியிலும் எடுத்துப் படிக்க விருப்பம் கொண்ட ஜெயசீலனுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. இவர் தமிழில் சிறப்பாக எழுதும் ஆற்றல் கொண்டவர். இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளை மிக எளிமையான முறையில் விளக்கும் இவரது கட்டுரைகள் பிரபல இதழ்களில் வெளியாகியுள்ளன. கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் உள்ள சில நுட்பங்களைக் கட்டுரைகளாகத் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது அவரது குறிக்கோள்களில் ஒன்று. எனக்குக் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பின் மூலம் எளிய மக்களின் சுகாதாரம், கல்வி மேம்படப் பாடுபடுவேன் எனச் சொல்லும் ஜெயசீலனின் வெற்றி, தமிழுக்கும் தமிழ் வழிக் கல்விக்கும் கிடைத்த வெற்றி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x