Published : 01 Mar 2016 11:21 AM
Last Updated : 01 Mar 2016 11:21 AM
லீப் நாள் நேற்று வந்து போய்விட்டது. ஆனால், அதை மையமாக வைத்து வேறு பல விஷயங்களும் நிகழ்ந்துள்ளன. அவற்றில் இரண்டை மட்டும் பார்ப்போம்.
ஓர் ஆண்டின் மற்ற 11 மாதங்களுக்கு 30 அல்லது 31 நாட்கள் இருக்கும்போது, பிப்ரவரி மட்டும் என்ன பாவம் செய்தது? சாதாரண ஆண்டுகளில் அதற்கு 28 நாட்கள், லீப் ஆண்டில் போனால் போகிறதென்று 29 நாட்கள். ஏன் பிப்ரவரிக்கு 30 + 1 லீப் நாள் என்று இருந்திருக்கலாமே.
இந்த இடத்தில் நாம் வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்க வேண்டியிருக்கிறது. நாட்காட்டி வரலாற்றை நோக்கும்போது பண்டைய ரோமில் ஏற்கெனவே பின்பற்றப்பட்டு வந்த நாட்காட்டியில், அன்றைய ரோமானிய அரசர் ஜூலியஸ் சீசர் பெயரில் ஜூலை மாதமும், அவருக்குப் பின் வந்த அகஸ்டஸ் சீசர் பெயரில் ஆகஸ்ட் மாதமும் நாட்காட்டியில் சேர்க்கப்பட்டன. இங்கேதான் நடந்தது அந்த மாற்றம்.
ஆகஸ்ட்டுக்கு 29
ஜூலியஸ் சீசர் காலம் முடியும்வரை பிப்ரவரி மாதமும் 30 நாட்களைக் கொண்டிருந்தது. புதிதாகச் சேர்க்கப்பட்டிருந்த ஆகஸ்ட் 29 நாட்களைக் கொண்டிருந்தது. ஆனால், அகஸ்டஸ் சீசர் ஆட்சிக்கு வந்த பிறகு, ஜூலை மாதத்தில் 31 நாட்கள் இருப்பதைப் போலவே, தன்னுடைய பெயரிலிருக்கும் ஆகஸ்ட்டுக்கும் 2 நாட்கள் கூடுதலாக இருக்க வேண்டுமென்று நாட்காட்டியை மாற்றிவிட்டார்.
பண்டைய ரோமானிய நாட்காட்டி
ஓர் ஆண்டில் ஒரு மாதம் விட்டு அடுத்த மாதம் 31 நாட்கள் வருவது மாறி, ஜூலை, ஆகஸ்ட் என அடுத்தடுத்த மாதங்களில் 31 நாட்கள் வருகின்றன அல்லவா? அதற்கு இதுதான் காரணம். அகஸ்டஸ் சீசர் இப்படி 2 நாட்களை எடுத்துக்கொண்டதால், அன்றைக்கு ரோமானிய நாட்காட்டியில் கடைசி மாதமாக இருந்த பிப்ரவரியிலிருந்து 2 நாட்கள் கழற்றிவிடப்பட்டன. ‘அதை மாற்று' என்று பேரரசர் சொல்லும்போது நாட்காட்டி உருவாக்குபவர்கள் முடியாதென்று சொல்ல முடியுமா?
உயிர் தப்பிய கொலம்பஸ்
அமெரிக்காவுக்குக் கடல் வழி கண்டறிந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் லீப் நாளில் உயிர் தப்பியிருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? 1504 ஒரு லீப் ஆண்டு. அந்த ஆண்டு லீப் நாளில் சந்திர கிரகணம் வந்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்குக் கொலம்பஸ் மேற்கொண்ட கடைசிப் பயணத்தின்போது சந்திர கிரகணம் வருவதை முன்கூட்டியே கணித்து, அதைத் தனக்கு வசதியாகப் பயன்படுத்திக்கொண்டார்.
அப்போது ஜமைக்கா தீவில் அவரும் அவருடைய குழுவினரும் பல மாதங்களுக்குத் தத்தளித்துக்கொண்டிருந்தனர். காரணம், அதுவரை உள்ளூர் மக்கள் அவர்களுக்கு அளித்துவந்த உணவுப் பொருட்கள், மற்ற உதவிகளை நிறுத்திக்கொண்டுவிட்டதுதான். இதனால் சிக்கலில் மாட்டிக்கொண்ட கொலம்பஸ், இன்னும் ஒரு சந்திர கிரகணம் மீதம் இருப்பதை உணர்ந்து, தனது வானியல் புத்தகத்தில் தேடினார். அது பிப்ரவரி 29-ம் தேதி லீப் நாளில் வருவது உறுதியானது.
பிப்ரவரி 29-ம் தேதி மாலை வருமாறு உள்ளூர் தலைவர்களை ஒரு கூட்டத்துக்கு அழைத்தார். அதில் ‘எனக்கும் எங்கள் குழுவினருக்கும் நீங்கள் உதவவில்லை என்றால், அதற்கான தண்டனையாகக் கடவுள் நிலவைச் சிவப்பாக்கப் போகிறார்' என்று கொலம்பஸ் எச்சரித்தார். அந்த நேரத்தில் கிரகணம் வர நிலவு சிவப்பானது. அப்போது, 'நீங்கள் என்னுடன் ஒத்துழைக்க ஆரம்பித்தால், தண்டனையைக் கடவுள் திரும்பப் பெற்றுக்கொள்வார்' என்று கொலம்பஸ் ஆசை வார்த்தை கூறினார். நிலவு சிவப்பானதால் அஞ்சிய உள்ளூர் தலைவர்கள், கொலம்பஸுக்கு உதவ ஒப்புக்கொண்டனர். அப்போது சூரிய வெளிச்சத்தை மறைப்பதிலிருந்து பூமி விலகிக்கொள்ள, நிலவின் மீதான சிவப்பு நிறம் குறைய ஆரம்பித்து மீண்டும் அது வெள்ளிபோல மின்ன ஆரம்பித்தது.
சந்திர கிரகணம் மட்டும் வரவில்லை என்றால், கொலம்பஸ் நாடு திரும்பியிருப்பது சந்தேகம்தான்.
அகஸ்டஸ் சீசர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT