Last Updated : 29 Mar, 2016 12:09 PM

Published : 29 Mar 2016 12:09 PM
Last Updated : 29 Mar 2016 12:09 PM

அந்தரத்தில் ஒரு அற்புதக் கட்டுமானம்

இரவு நேரத்தில் வானத்தை அண்ணாந்து பார்த்தீர்களென்றால் நகர்ந்துகொண்டே செல்லும் ஒளிப்புள்ளி ஒன்று உங்களுக்குத் தென்படலாம். அது சர்வதேச விண்வெளி மையமாகக்கூட இருக்கலாம். இரவு வானில் நிலவுக்கு அடுத்தபடியாகப் பிரகாசமான ஒளியுடன் நகர்ந்துகொண்டிருக்கும் ஒளிப்புள்ளி அது. பூமியிலிருந்து பார்ப்பதற்குப் புள்ளியாகத் தெரியலாம். ஆனால், வானில் உலவும் மிகப் பெரிய செயற்கைக் கட்டுமானம் அதுதான்.

இடைவிடாத ஆராய்ச்சி

வானியல் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமல்ல, உயிரியல், இயற்பியல், வானிலை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி செய்வதற்காகவும் வானில் 1998-ல் நிறுவப்பட்டது இந்த மையம். ஒரே சமயத்தில் 6 ஆராய்ச்சியாளர்கள் என்ற வீதத்தில் இந்த மையத்தில் பணியாற்றுகிறார்கள். இதுவரை 18 நாடுகளைச் சேர்ந்த 222 பேர் இந்த மையத்துக்கு வருகை புரிந்திருக்கிறார்கள். ஈர்ப்புவிசை மிக மிகக் குறைவாகக் காணப்படும் சூழலைக் கொண்டிருக்கும் இந்த மையத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாக இடைவிடாமல் மனிதர்கள் தங்கிவருகிறார்கள் என்பது அதிசயமான ஒன்றுதான்.

பூமியின் தாழ்வு வட்டப்பாதையில் இந்தச் செயற்கைக் கோள் சுற்றிவருகிறது. (பூமியிலிருந்து 2,000 கிலோ மீட்டர் உயரத்துக்குள் உள்ள பகுதிதான் தாழ்வு வட்டப்பாதை). இந்த விண்வெளி மையத்துக்கு சக்தியளிக்கும் சூரியத் தகடுகளின் பரப்பு மட்டும் சுமார் ஒரு ஏக்கர் என்றால் பாருங்கள்! இந்தக் கலம் ஏவப்பட்டதிலிருந்து பல முறை பராமரிப்புப் பணிகளும் கூடுதல் திறனேற்றப் பணிகளும் நடந்திருக்கின்றன. சர்வதேச உடைமையாக இருக்கும் இந்த மையம் 2010-லிருந்து வணிகரீதியிலான பணிகளையும், நாடுகளுக்கிடையிலான உறவுகள் தொடர்பான பணிகளையும், கல்வி தொடர்பான பணிகளையும் மேற்கொண்டுவருகிறது.

வீட்டிலிருந்தே பார்க்கலாம்!

சர்வதேச விண்வெளி மையத்துக்கு நாம் எல்லோராலும் போக முடியாதுதான். ஆனால், இங்கிருந்து வானத்தை இரவு நேரத்தில் அண்ணாந்து பார்த்தால் வெறுங்கண்களால்கூட அதைப் பார்க்க முடியும்; நாம் பார்க்கும் நேரத்தில் அந்தப் பகுதியின் வானத்தில் சர்வதேச விண்வெளி மையம் உலவிக்கொண்டிருந்தால் நம்மால் பார்க்க முடியும். தொலைநோக்கியோ, இருநோக்கியோ இருந்தால் இன்னும் பெரிதாகப் பார்க்கலாம்.

நம் பகுதிக்கு மேல் விண்வெளி மையம் எப்போது வருகிறது என்று தெரிந்துகொண்டால் அதைப் பார்ப்பதற்கு எளிதாக இருக்கும் அல்லவா! அதற்கும் வழி இருக்கிறது. நாஸாவின் இணையதளத்தில் இந்த இணைப்பில் (https://spotthestation.nasa.gov/) சென்று, நம் வீட்டுக்கு மேலே சர்வதேச விண்வெளி மையம் எப்போது பறக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்!

சமீபத்தில் டேவிட் நிக்ஸன் என்பவர் வெளியிட்ட ‘இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன்: ஆர்க்கிடெக்சர் பியாண்ட் எர்த்’ என்ற புத்தகத்தில் சர்வதேச விண்வெளி மையத்தின் வரலாற்றைப் பற்றி எளிமையாகவும் விரிவாகவும் விவரிக்கப்பட்டிருக்கிறது. சர்வதேச விண்வெளி மையத்தின் புகைப்படங்கள் இந்தப் புத்தகத்தின் பலம். இந்தப் புத்தகத்திலிருந்து சில புகைப்படங்கள் இங்கே உங்களுக்காகக் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x