Published : 15 Mar 2016 12:07 PM
Last Updated : 15 Mar 2016 12:07 PM

விரல் நுனியில் உலக நூலகங்கள்

மாணவர்களுக்கும், படித்துவிட்டு வேலை தேடுபவர்களுக்கும், நூலகத்தின் பக்கமே திரும்பிப் பார்க்கத் தயங்கும் இளைஞர்களுக்கும் ஒரு இணையதளத்தை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கினார் செந்தில் குமார். இந்த இணையதளத்தில் பள்ளி - கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான தகவல்கள் ஏராளமாய் கொட்டிக்கிடக்கின்றன. பொள்ளாச்சி அருகிலுள்ள அரசம்பாளையம் எஸ்.வி.எஸ். பொறியியல் கல்லூரியின் நூலகர் இவர். தஞ்சை மாநகராட்சியின் அம்மா நூலகத்தின் இணையதளப் பிரிவின் தலைமைப் பொறுப்பிலும் இருக்கிறார்.

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்ற வள்ளலாரின் வரிகளோடு தொடங்குகிறது இந்த இணையதளம். அதன் கீழே நம்மை முதலில் ஈர்க்கும் சுட்டி, திருக்குறள். திருக்குறளுக்கு எளிமையான விளக்கம் தமிழிலும் ஆங்கிலத்திலும் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு.

அடுத்து, பொறியியல் மாணவர்களுக்கான மாதிரி கேள்வித்தாள்கள், விவசாய குடும்பத்து மாணவர்களுக்கும் இதர பிரிவு மாணவர்களுக்கும் அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பற்றிய விவரங்கள் அனைத்தையும் கொடுக்கப்பட்டுள்ளன. வெவ்வேறு படிப்பு துறைகள் தொடர்பான முக்கிய பத்திரிகைகளின் இணைய முகவரிகளும் உள்ளன. உலகம் முழுவதும் வெளிவரும் ஆயிரக்கணக்கான பத்திரிகைகளை நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே இலவசமாகவே புரட்டிப்பார்த்து விடமுடியும்.

எனக்கு கிடைக்காதது பிறருக்கு

இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளின் கிளைகள், விமான சேவைகள், கூரியர் சர்வீஸ்கள், டோல் ஃப்ரீ நம்பர்கள், இந்திய அரசின் ஆன் லைன் சர்வீஸ்கள், இந்திய அளவிலான டெலிபோன் டைரக்டரி உள்ளிட்ட உபயோகமான தகவல்களை தனது இணையத்தில் தந்திருக்கும் செந்தில் குமார், “நாங்கள் படிக்கும் காலத்தில் இந்தத் தகவல்களை எல்லாம் பெறுவதற்கு எங்கெங்கோ தேடவேண்டியிருந்தது. அப்படி இல்லாமல், மாணவர்களுக்கும் படித்த இளைஞர்களுக்கும் தேவையான அத்தனை தகவல்களையும் ஒரே இடத்தில் தரவேண்டும் என்பதற்காகத்தான் இந்த இணையத்தைத் தொடங்கினேன்’’ என்கிறார்.

வேலைக்காக ரெஸ்யூம் எழுதுவதில் தொடங்கி நமது ஆங்கில அறிவை சோதிப்பது வரை அனைத்திற்கும் இந்த இணையம் வழிகாட்டுகிறது. நூலகங்கள் இல்லாத பள்ளிகளுக்காக ‘ரிசோர்ஸ் ஃபார் ஸ்கூல் லைப்ரரி’ என்ற தலைப்பில் டிஜிட்டல் லைப்ரரியை ஏற்படுத்தியிருக்கிறார். அத்துடன் உலகத் தரம்வாய்ந்த பல நூலகங்களின் சுட்டிகளையும் கொடுத்திருக்கிறார்.

என்ன வேண்டும் உங்களுக்கு?

பயனுள்ள மென்பொருள்கள், அவற்றை இலவசமாகப் பதிவிறக்கம் செய்யும் வசதிகள், எப்படிப் படித்தால் அதிக மதிப்பெண்களை அள்ளித் தட்டலாம் என்பதற்கான வழிகாட்டல்கள், நமது திட்டமிடல்களை முன்கூட்டியே உரிய நேரத்தில் நினைவூட்டும் இ-டைரி, நூலக தகவல் மற்றும் அறிவியல் துறையின் பணி வாய்ப்புகள் குறித்த அப்டேட் நிலவரங்கள், இ-புக்ஸ், பி.ஹெச்.டி. மாணவர்களின் தேசிய தகுதித் தேர்வுக்கான யு.ஜி.சி. மெட்டீரியல்ஸ் என தகவல்களை விரித்துக்கொண்டே போகும் செந்தில் குமாரின் இந்த இணையம் நிச்சயம் இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

செந்தில் குமாரின் இணைய நூலகத்தின் மின்முகவரி: >https://sites.google.com/site/alagusenthil/

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x