Published : 09 Feb 2016 11:54 AM
Last Updated : 09 Feb 2016 11:54 AM
கடந்த ஆண்டின் இறுதியில் கொட்டித் தீர்த்த கன மழையும் அடித்துப் புரண்ட கடும் வெள்ளமும் மக்களுக்கு நல்ல பாடங்களைப் போதித்துவிட்டன. அந்தப் பாடங்களை மதுரையிலுள்ள ஸ்ரீ சாதனா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஓம் சாதனா மத்தியப்பள்ளிகள் தனது மாணவர்களுக்கும் கொண்டுசென்றுள்ளன.
“சென்னையில்தானே மழை; மதுரையில் நமக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது. துன்பங்கள் எங்கே நடந்தாலும் அதைக் கேட்டு நாம் துடிக்க வேண்டும். இதை மாணவர்களுக்கு உணர்த்தவே இந்தத் திட்டத்தை நாங்கள் அறிவித்தோம்” என்கிறார் சாதனா குழுமப் பள்ளிகளின் இயக்குநர் நடன குருநாதன்.
மாணவர்களைக் கொண்டே வெள்ள நிவாரண நிதியைத் திரட்ட முடிவுசெய்திருக்கிறார்கள். “இதற்காக சேமிப்பு, உழைப்பு, கவனிப்பு என மூன்று ‘பூ’ க்களை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் தெரிவித்தோம்” என்கிறார் நடன குருநாதன்.
பிறந்த நாளுக்குப் புதுத் துணி எடுக்கும் செலவில் 25 சதவீதத்தை மிச்சப்படுத்துதல், வீட்டில் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்தி அந்தத் தொகையை சேமிப்பில் வைத்தல், கார், பைக் பயன்படுத்துவதைக் குறைத்து எரிபொருளுக்கான பணத்தைச் சேமித்தல், என்று சேமிப்பதற்கான வழிகளைப் பட்டியல் போட்டுக்கொடுத்திருக்கிறார்கள். அடுத்தது உழைப்பு. “எங்கள் மாணவர்களுக்கு ஷு பாலீஷ் போடத் தெரியும். அப்பா, அண்ணன் ஷூக்களுக்கு பாலீஷ் போட்டார்கள். வீட்டிலுள்ள வாகனங்களைக் கழுவித் துடைத்தார்கள். தோட்டத்துச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினார்கள். இவற்றின் மூலம் வருமானம் ஈட்டினார்கள்” என்றும் அவர் தெரிவிக்கிறார். மாணவர்கள் செய்யும் ஒவ்வொரு வேலைக்கும் குறைந்தபட்சம் பத்து ரூபாய் ஊதியம் கொடுக்க வேண்டும் என்றும் பெற்றோரிடம் வலியுறுத்தப்பட்டது.
மூன்றாவதாக கவனிப்பு. வீட்டில் உள்ள தாத்தா, பாட்டிக்கு மருந்து, மாத்திரை எடுத்துக் கொடுப்பது, இரவில் படுக்கை தட்டிப் போடுவது, சாப்பிடும்போது பக்கத்திலிருந்து கவனித்துக்கொள்வது போன்றவை ‘கவனிப்பு’ என்பதன் கீழ் பட்டியலிடப்பட்டன.
நிவாரண நிதி திரட்ட ஒரு மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. “மொத்தம் ஒரு லட்ச ரூபாய் திரண்டது. அதை மாணவர்களே மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வழங்கினார்கள். அத்துடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைக்குச் சென்றார்கள். மணலி பகுதியில் மக்களிடம் ஆடைகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை மாணவர்கள் வழங்கிவிட்டு வந்தார்கள்’’ எனப் பெருமிதத்தோடு சொல்கிறார்.
அரிச்சந்திரா தேர்வுக்கூடம்
காப்பி அடிக்காமல் நேர்மையாகத் தேர்வு எழுத வேண்டும் என்பதற்காகவே ‘அரிச்சந்திரா ஹால்’ வைத்திருக்கிறார்கள். இங்கே தேர்வு நடக்கும்போது கண்காணிப்பாளர்கள் இருக்க மாட்டார்கள். ‘மின் சக்தியைச் சிக்கனப்படுத்துவோம்’ எனும் திட்டத்தின்படி வியாழக்கிழமைகளில் இந்தப் பள்ளியில் மின்சாரம் பயன்படுத்தப்படுவதில்லை. அன்றைய தினம் மரத்தடி வகுப்புகள்தான். வியாழன்தோறும் மாணவர்களின் வீடுகளிலும் குறைந்தது ஐந்து மணி நேரத்துக்காவது மின் சாதனங்களை நிறுத்திவைக்க வேண்டும். சொந்த வாகனங்களில் பள்ளிக்கு வருபவர்கள் வியாழக்கிழமைகளில் சைக்கிளில்தான் வர வேண்டும். இப்படி இன்னும் பல நல்ல விஷயங்களை மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் சொல்லிக் கொடுத்து சாதிக்கிறது சாதனா பள்ளி.
மேட்டிலிருந்து பாய்ந்த அன்பு வெள்ளம்
தொடர்மழையும் வெள்ளமும் சென்னையைத் தாக்கியபோது சென்னை அயனாவரத்தின் குன்னூர் நெடுஞ் சாலையில் இருக்கும் சன்னிவேல் அடுக்கு மாடி குடியிருப்பு மேடான பகுதியில் இருந்ததால் அதன் 400 குடும்பங்கள் பாதிக்கப்படவில்லை. ஆனால், அதன் சுற்றுப்புறங்களில் உள்ள பகுதி மக்கள் மோசமான முறையில் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பணிகளில் இந்த குடியிருப்புவாசிகள் ஈடுபட்டனர்.
வெள்ளத்தின் காரணமாக பள்ளிகள் மூடிக் கிடந்ததால் உணவு தயாரித்தல், பொட்டலம் போடுதல், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்தினர். அத்தகைய பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்ட சிறார்களுக்குச் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி அபார்ட்மெண்ட் வளாகத்தில் ஜனவரி 3 1 அன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அரசு மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர். அமலோற்பவநாதன், டாக்டர் மணிவேலன், நடிகர் ஜெயப்பிரகாஷ், சமூக சேவகர் ஆர்.கீதா, தி இந்து தமிழ் நாளிதழின் இணையதள ஆசிரியர் பாரதி தமிழன் உள்ளிட்டோர் பங்கேற்று சிறார்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள்.
- நீதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT