Last Updated : 02 Feb, 2016 11:57 AM

1  

Published : 02 Feb 2016 11:57 AM
Last Updated : 02 Feb 2016 11:57 AM

சிறப்பாகப் படிக்கச் சில வழிமுறைகள்

ஒரு வகுப்பில் படிக்கிற மாணவர்கள் எல்லோருக்கும் ஒரே பாடம்தான். எல்லோருக்கும் ஒரு நாளில் 24 மணி நேரம்தான். ஆனால் சிலரால் மட்டும் எப்படி நன்றாகப் படிக்க முடிகிறது? ஒரு சிலர் இயல்பாகவே கவனத்தைக் குவித்துப் படித்து சிறந்து விளங்குவார்கள். படித்த விஷயங்களை எளிதில் கிரகித்துக்கொள்வார்கள். நினைவிலும் வைத்துக்கொள்வார்கள்.

ஆனால், எல்லோருக்குமே இந்தத் திறமைகள் இயல்பாக அமைந்துவிடுவதில்லை. அதற்காக இது நமக்கு வராது என்று விட்டுவிடமுடியாது.

கீழே காணப்படும் சில விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் படிக்கும் விதத்திலும் புரிந்துகொள்ளும் விதத்திலும் பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

நேரம், படிக்கும் சூழல் ஆகிய இரண்டையும் ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியம். இதை எப்படிச் செய்வது?

# உங்கள் இலக்குகள் என்ன என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். அது காலாண்டுத் தேர்வில் நான் இவ்வளவு மதிப்பெண் வாங்குவேன் என்றோ அரையாண்டுத் தேர்வில் வகுப்பிலேயே முதல் மாணவனாக வருவேன் என்றோ இருக்கலாம்.

# ஒரு பாடத்தைத் தொடங்கும் முன் திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள். அதில் முழு கவனத்தையும் செலுத்தும் வகையில்அதற்கான நேரத்தைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

# படிப்பதையும் செயல்முறைப் பயிற்சிகள் செய்வதையும் அவ்வப்போதே செய்து முடித்துவிடுங்கள். அப்புறம் செய்யலாம் என்று ஒத்திப் போடாதீர்கள்.

# படிக்கிற எது ஒன்றையும் நினைவில் படமாக்கி ஞாபகம் வைக்க முயலுங்கள். போட்டோகிராபிக் மைண்ட் என்று அதை சொல்வார்கள்.

# படிக்கிற எதையும் அன்றாட வாழ்வோடு இணைத்துப் புரிந்துகொள்ள முயலுங்கள். நீங்கள் படிக்கிற ஒரு பாடம் தொடர்பான ஏதேனும் ஒன்று உங்கள் மனதில் ஏற்கெனவே இருந்தால்தான் அதோடு தொடர்புபடுத்தி உங்களால் புரிந்துகொள்ள முடியும்.

# அப்படி முற்றிலும் புதிதான விஷயங்களை மனதில் இறுத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவற்றை இணைத்து ஒரு குறியீட்டுத் தொடரை பாஸ்வேர்ட் போல உருவாக்கிக்கொள்ளுங்கள். அதை நினைவுபடுத்திக் கொண்டதும் படித்த பாடத்தின் வினாவிடைகள் எல்லாம் நினைவுக்கு வருவதுபோல பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்.

# ஒரு நோட்டில் குறிப்புகள் எடுத்துக்கொண்டே படிப்பது என்பது மிகவும் பயனுள்ள ஒரு பயிற்சி. படித்த பாடம் முழுவதுமே சிறு சிறு குறிப்புகளாக பாயிண்ட் பாயிண்டாக உங்கள் முன் நோட்டுப்புத்தகத்தில் காட்சிதரும். ஒரு பாரா முழுவதும் படித்ததை ஒரு வரியில் சுருக்கி குறிப்பு எழுதுவது என்பது மாணவர்களுக்கு மிகச்சிறந்த பயிற்சி.

# பாடத்தின் பொருள் புரிந்து படிப்பது மிகவும் பயன் தரும். ஒவ்வொரு வரியையும் புரிந்தபிறகு அடுத்த வரிக்கு போவது என்பது ஆரம்பத்தில் சிறிது சிரமம்போல காட்சியளிக்கும். ஆனால் அது விவேகானந்தர் போல பாரா பாராவாக படுபயங்கர வேகத்தில் வாசிக்கும் திறமையை நோக்கி நீங்கள் எடுத்து வைக்கும் ஆரம்ப காலடித்தடங்கள் அவை. அதனால் புரிந்து படிங்கள். புயல்வேக வாசிப்புக்கு தயார் ஆகுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x