Published : 16 Feb 2016 12:14 PM
Last Updated : 16 Feb 2016 12:14 PM
இலங்கை போர்க்குற்ற விசாரணை குறித்து ஆய்வு செய்வதற்காக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் ஜெய்ட் ராட் அல் உசேன் 4 நாட்கள் பயணமாக பிப்ரவரி 7 அன்று இலங்கை தலைநகர் கொழும்பு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் யாழ்ப்பாணம் சென்றார். வடக்கு மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரனை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவரை சூழ்ந்த தாய்மார்கள், காணாமல் போன 4 ஆயிரம் தமிழர்களைக் கண்டுபிடித்து தர உதவுமாறு கோரினர். பின்னர் அங்குள்ள அகதிகள் முகாமுக்கு சென்று அகதிகளோடு கலந்துரையாடினார். இந்தப் பயணத்தின்போது அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா உள்ளிட்ட தலைவர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
புதிய சிறார் நீதிச் சட்டத்தில் சிறுவன் கைது
சிறார் நீதிச்சட்டம் திருத்தப்பட்ட பிறகு முதன் முறையாக 16 வயது சிறுவனை பாலியல் பலாத்கார வழக்கில் உத்தரப்பிரதேச மாநில போலீஸார் பிப். 7 அன்று கைது செய்தனர். அயிலாவ் என்ற கிராமத்தில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 16 வயது சிறுவன் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீது புதிய சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பதற்கு பதிலாக மாவட்ட சிறையில் சிறுவனை போலீஸார் அடைத்தனர். புதிய சட்டத்தின்படி பாலியல் பலாத்காரம், கொலை போன்ற கொடூர செயல்களில் ஈடுபடுவோர் 16 முதல் 18 வயதில் இருந்தால், விசாரணைக்கு பின் அவரை 18 வயதுக்கு மேற்பட்டவராக கருதி நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியும்.
தேர்தல் ஆலோசனை
தமிழகம், புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வு கூட்டம் பிப்ரவரி 11, 12 அன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது தமிழகம், புதுவையில் ஒரே நாளில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்தத் தேர்தலில் புதுச்சேரியில் முதன்முறையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வெப்காஸ்டிங் மூலம் வாக்குப்பதிவை கண்காணிக்கும் முறை அமல்படுத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தெரிவித்தார். சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஓட்டுக்கு பணம், பரிசு, மதுபானம் அளிப்பதை தடுக்க புதிய வலுவான திட்டத்தை உரிய நேரத்தில் செயல்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
கட்சிகள் பெற்ற நன்கொடை
டெல்லியில் 2013 மற்றும் 2015-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக அதிகபட்சமாக ரூ.608.21 கோடி நன்கொடை பெற்றுள்ளது என்று பிப். 10 அன்று அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் ஃபார்ம்ஸ், நேஷ்னல் எலெக்ஷன் வாட்ச் ஆகிய தன்னார்வ அமைப்புகள் தெரிவித்தன. இதன்படி, பாஜக 2013-14-ல் ரூ.170.86 கோடி நன்கொடையாக பெற்றது.
இது 2014-15-ல் 437.35 கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் 156 சதவீதம் உயர்ந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 2014-15-ல் 141.46 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இது முந்தைய நிதியாண்டை விட ரூ.81.88 கோடி அதிகம் ஆகும். ஒட்டுமொத்தமாக 5 தேசிய கட்சிகள் இந்த 2 ஆண்டுகளில் ரூ.870.15 கோடி நிதி பெற்றுள்ளன. அதாவது 2013-14-ல் ரூ. 247.77 கோடி யும் 2014-15-ல் 622.38 கோடியும் இவை நன்கொடை பெற்றுள்ளன.
ஹனுமந்தப்பா மறைவு
சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி, 35 அடி ஆழ பனியில் புதைந்திருந்து 6 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா சிகிச்சை பலனின்றி இன்று பிப்ரவரி 11 அன்று உயிரிழந்தார். சியாச்சின் பனிச்சரிவில் சிக்கிக் கொண்ட ஹனுமந்தப்பா கடந்த 8-ம் தேதி உயிருடன் மீட்கப்பட்டார். 6 நாட்களுக்குப் பிறகும் 35 அடி ஆழத்திலிருந்து உயிருடன் திரும்பி வந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. கடுமையான நிமோனியாவால் பாதிக்கப்பட்டார். டெல்லி ராணுவ மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிகிச்சை பலனின்றி ஹனுமந்தப்பா உயிரிழந்தார். ஹனுமந்தா மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
ஐ.எப்.எஸ். தேர்வு முடிவுகள்
இந்திய வனப்பணி இறுதி தேர்வு முடிவுகள் பிப். 11 அன்று வெளியிடப்பட்டன. இதில், தமிழக அளவில் கோவையைச் சேர்ந்த 25 வயது பொறியாளர் எஸ்.பரத் முதலிடத்தைப் பிடித்தார். ஐ.எப்.எஸ். எனப்படும் இந்திய வனப்பணி முதன்மை எழுத்துத் தேர்வு கடந்த நவம்பர் மாதம் முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்திய அளவில் 1,300 பேர் பங்கேற்ற இத்தேர்வில் 330 பேர் அடுத்த கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில், முடிவுகள் வெளியாகின. இதில் அதன்படி, பிரதாப் சிங் என்பவர் முதலிடத்தையும், அபிலாஷா சிங் 2-ம் இடத்தையும் பிடித்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எஸ்.பரத் அகில இந்திய அளவில் 45-வது இடத்தையும் தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்தார்.
நாட்றம்பள்ளியில் விழுந்த விண்கல்
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தனியார் கல்லூரியில் விழுந்தது எரிகல்தான் என்பதற்கான ஆதாரம் கிடைத்திருப்பதாக இந்திய புவியியல் துறை மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் பிப். 12 அன்று தெரிவித்தார். வேலூர் மாவட்டம், நாட்றம் பள்ளியை அடுத்த கே.பந்தாராப்பள்ளி பகுதியில் உள்ள பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் கடந்த 6-ம் தேதி மதியம் மர்ம பொருள் விழுந்தது. இதில், கல்லூரி பேருந்து ஓட்டுநர் காமராஜ் உயிரிழந்தார்.
கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, இஸ்ரோ விஞ்ஞானிகள் உள்பட பல்வேறு விஞ்ஞானிகள் விழுந்தது எரி கல்தானா என்பது குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் விழுந்தது எரி கல் இல்லை என்று அறிவித்தது. இந்நிலையில், இந்திய புவியி யல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் ராஜிவ் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டது. அப்போது கல்லூரி மேல்தளத்தில் சுமார் 60 கிராம் எடையுள்ள மற்றொரு கருப்பு நிறம் கொண்ட கல் கண் டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அந்த கல்லை பரிசோதனை செய்தபோது அது எரி கல் வகை யைச் சேர்ந்தது என ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT