Published : 23 Feb 2016 12:47 PM
Last Updated : 23 Feb 2016 12:47 PM
ஆ.மணிவண்ணன், மதுரை மாநகர் சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையர். காவல் துறைப் பணியில் இருந்துகொண்டே கவிஞராக, முனைவராக, கட்டுரையாளராக, பேச்சாளராகத் தன் பரிமாணங்களைக் கூட்டிக்கொண்டிருக்கிறார் இந்த அதிகாரி.
திருச்சி மைந்தரான மணிவண்ணன் 1987-ல் காவல் சார்பு ஆய்வாளராக நேரடி நியமனம் பெற்றபோது அவர் பி.எஸ்.சி. பட்டதாரி மட்டும்தான். சட்டக் கல்லூரியில் படிக்கும் வாய்ப்பும் காவல் உத்தியோகமும் ஒரே நேரத்தில் வந்து கதவைத் தட்ட, அரசு வேலையாயிற்றே என்று காவல் பணியில் சேர்ந்தார். ‘டிகிரி படிச்சிட்டு எஸ்.ஐ. வேலைக்கா? ஐ.ஏ.எஸ். எழுதலாமே’ என்று சுற்றமும் நட்பும் சுண்டிவிட, அதிலும் இறங் கினார் மணிவண்ணன்.
அப்புறம்? “வரலாறு நல்லாப் படிச்சா ஐ.ஏ.எஸ். எளிமையா இருக்கும்னு சொன்னதால அஞ்சல் வழியா எம்.ஏ. வரலாறு படிச்சேன். அப்பவே ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும் தயாராகி முதல் கட்டத் தேர்வு வரைக்கும் போனேன். ஆனா, அறிவுஜீவிகளோட நம்மாள போட்டி போட முடியல. ஐ.ஏ.எஸ். ஆசையில் எம்.ஏ. வரலாறு படிச்சதுதான் மிச்சம்” என்றுசொல்லிவிட்டு மணியாகக் கலகலக்கிறார் மணிவண்ணன்.
முதுகலை முடித்தவரை பழையபடி சட்டம் படிக்கும் ஆசை தொற்றிக்கொள்ள, மதுரை சட்டக் கல்லூரியின் மாலை நேர வகுப்பில் (அப்போது இருந்தது) சேர்ந்து அக்கறையுடன் படித்து சட்டப்புள்ளியாகவும் ஆனார். அப்படியும் அறிவுத் தேடல் நிற்கவில்லை. ‘அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் பெண் உரிமைக்கு ஆற் றிய பங்கு’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதி சமர்ப்பித்து 2011-ல் முனைவரானார்.
இதற்கு நடுவிலேயே ‘பனிச்சூடு’, ‘கனவுக் குளியல்’ என்ற கவிதை நூல்களையும் ‘பழனி பாதயாத்திரை வினைகள்’ என்ற விழிப்புணர்வு நூலையும் எழுதி முடித்த மணிவண்ணன் இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் பத்திரிகைகளுக்குத் தந்திருக்கிறார். திருப்பனந்தாள் மடம் ஆண்டுதோறும் காசியில் நடத்தும் இலக்கிய மாநாட்டில் மணிவண்ணனின் நாவுக்கரசர், மாணிக்கவாசகர் திருத்தல யாத்திரை ஆய்வுக் கட்டுரைகள் அங்கீகரிக்கப்பட்டன.
இஸ்லாமிய இலக்கியக் கழகம் 2007-ல் சென்னையில் நடத்திய மாநாட்டில் மணிவண்ணன் சமர்ப்பித்த ‘செய்குத்தம்பி பாவலரின் தமிழ்ப்பணி’ என்ற ஆய்வுக் கட்டுரை கவுரவிக்கப்பட்டது. இவரது கவிதை நூல்களை ஆய்வு செய்து மதுரை செந்தமிழ் கல்லூரி மாணவர் அருண்ராஜ் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இதே கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் நேருஜி மணிவண்ணனைப் பற்றி ஒரு நூலையே எழுதியிருக்கிறார்.
“காவல் துறை பணி கொஞ்சம் கஷ்டமான பணிதான். அதன் தாக்கம் இருக்கக் கூடாது என்பதற்காகவே இரவு 12 மணிக்கு மேல் எழுதவும் படிக்கவும் நேரத்தை ஒதுக்கி வைத்திருக்கிறேன். ‘அணுகாது அகலாது’, ‘வான் தொட்டில்’ என்ற இன்னும் இரண்டு கவிதை நூல்களையும் எழுதி முடித்துவிட்டேன். ‘நான் சந்தித்த காவல் துறை அனுபவங்கள்’ என்ற தலைப்பிலும் ஒரு நூலை எழுத ஆரம்பித்திருக்கிறேன். எழுதுவதோடு மட்டுமில்லாமல் கல்லூரிகளில் மாணவர்களுக்கு வழி காட்டும் நிகழ்வுகளில் தன்னம்பிக்கைக் கருத்துக்களையும் பேசி வருகிறேன்.
பணி ஓய்வுக்கு இன்னும் ஆறு ஆண்டுகள் இருக்கு. ஓய்வுக்குப் பிறகு மணிவண்ணன் இன்னும் நிறையச் சாதிப்பான்கிற நம்பிக்கை எனக்குள்ள இருக்கு” ராயல் சல்யூட்டுடன் நமக்கு விடை கொடுக்கிறார் மணி வண்ணன். இவரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள 9443208519 என்ற எண்ணில் அழைக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT