Published : 01 Dec 2015 12:30 PM
Last Updated : 01 Dec 2015 12:30 PM
தாளவாடியில் நாங்கள் சந்தித்த ஓட்டுநர் நாகராஜன் “தொட்டகஜனூரைத் தாண்டி ’திப்புசுல்தான் பாதை’ இருக்கிறது. அந்த மலைப் பாதையில் நடந்தால் ஈரோடு மாவட்டத்தின் மலை அடிவாரத்தில் உள்ள புஞ்சை புளியம்பட்டியை அடைந்து விடலாம்’’ என்றார். இருள் கவ்விக் கொண்டிருந்த வேளையில் யானைகள் நடமாட்டம் உள்ள அந்தப் பகுதிக்குச் செல்வது சரியாக இருக்காது.
அதனால் விவரங்களை குறித்துக் கொண்டு மைசூரை நோக்கி புறப்படுகிறோம். “சோழர்கள் தங்கள் படைகளை திப்பு பாதை வழியாக வழி நடத்திச் சென்றிருக்க முடி யாது. அதேசமயம், படைகளுக்குத் தேவையான கருவிகளை எடுத்துச்செல்ல இந்த வழியைப் பயன்படுத்தி இருக்கலாம்’’ என்கிறார் சிவராம கிருஷ்ணன்.
குருவுக்கு கல்வெட்டு
இரண்டாம் நாள் காலையில் மைசூர் நகரத்திலிருந்து பயணம் தொடர்கிறது. ராஜேந்திர சோழனுக்கு குருவாக இருந்தவர் மவுன குரு. அவரது இறப்புக்குப் பிறகு, பெங்களூரு அருகே உள்ள சோழதேவன ஹள்ளியில் அவருக்காக பரோக் ஷ வினயம் என்ற பள்ளிப்படை கோயில் ராஜேந்திரனால் எழுப்பப்படுகிறது. அதன் பராமரிப்புக்காக கோயிலை ஒட்டியுள்ள பானபுரம் ஏரியின் கீழ் கரையில் ஏராளமான நிலங்களும் அவரால் தானமாக எழுதி வைக்கப்பட்டுள்ளன. அது பற்றிய விவரங்களைக் கொண்ட கல்வெட்டு தற்போது மைசூர் பல்கலைக்கழகத்தின் கீழ்த்திசை சுவடிகள் நூலகத்தின் பராமரிப்பில் உள்ளது.
யாதவ கிரி என்ற இடத்தில் இந்திய - ஐரோப்பிய கட்டிடக் கலையம்சத்தில் பிரம்மாண்டம் காட்டுகிறது அந்த நூலகக் கட்டிடம். இதன் முகப்பிலேயே கல் வெட்டுப் பூங்கா. இங்குதான் ராஜேந்திரன் தனது குருவுக்காக வைத்த கல்வெட்டையும் இன்னும் பிற கல்வெட்டுகளையும் பார்க்கிறோம்.
வயலில் வீரக் கற்கள்
மலைப் பகுதிகளிலும் மேலிருந்து கீழாக மூன்று அடுக்கு, நான்கு அடுக்குகளாகத் தண்ணீரைப் பாய வைத்து, சொட்டு தண்ணீரைக்கூட வீணாக்காமல் மூன்று போகம் விவசாயம் செய்கிறார்கள் மாண்டியா மற்றும் மைசூர் மாவட்ட விவசாயிகள். பூமிக்கு வெளியில் செல்லும் ராட்சதக் குழாய்கள் மூலமாகவும் தொட்டிப் பாலங்கள் மூலமாகவும் தண்ணீரை வீணடிக்காமல் எடுத்துச் செல்லும் அவர்களின் தண்ணீர் மேலாண்மை வியக்க வைக்கிறது. இதனால், விரித்துப் போட்ட பச்சைக் கம்பளத்தைப் போலப் பசுமைப் பிரதேசமாய் காட்சியளிக்கின்றன விவசாய நிலங்கள்.
பெலகொலா - கங்கர்கள் ஆட்சி செய்த கங்கபாடி நாட்டிலிருந்து குடமலை (குடகு) நாட்டுக்குள் செல்லும் முகத்துவாரப் பகுதி. இந்த இடத்தில்தான் இளவரசர் ராஜேந்திர சோழன் தலைமையில் கங்கர்களோடு கடும் போர் நடத்தி இருக்கிறது சோழப்படை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வயலாகக் காட்சியளிக்கும் அந்த இடத்தில்தான் ஆங்காங்கே வீரர்களின் நடுகற்கள் தலை தூக்கி நிற்கின்றன. இவையனைத்துமே, போரில் இறந்த சோழத் தளபதிகளின் நினைவாக நடப்பட்டவை.
வலம் திரும்பும் பல்முறி
பெலகொலாவிற்குக் கூப்பிடு தொலைவில் பல்முறி என்ற இடம் வருகிறது. காவிரி, இடமிருந்து வலம் திரும்பும் இவ்விடத்தில் அகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது. கங்கர்களை மகன் வீழ்த்திய சந்தோஷத்தால் இந்தக் கோயிலில் தினமும் நந்தா விளக்கு ஏற்றுவதற்காக மன்னர் ராஜராஜன் ஆடுகளை தானமாக வழங்கியுள்ளார். கோயில் பிரகாரத்தில் தென்படும் கல்வெட்டின் கன்னட வரிகள் இதை நமக்குச் சொல்கின்றன.
கோயிலின் பின்பகுதியைத் தழுவியபடி காவிரி ஓடுகிறது. காவிரி வலம் திரும்புவதால் இந்த இடத்தில் காவிரிக்கு வலம்பு தீர்த்தம் (இப்போது பலம்பு) என்று பெயர். “இது புனித தீர்த்தம். எல்லாரும் இறங்கி காலை நனைச்சுக்குங்க’’ என்று சொன்ன வெங்கடேசன், விரும்பியவர்கள் கால் நனைத்துக் கரை ஏறியதும், “இங்க முதலைகள் நடமாட்டம் இருக்கும்’’ என்று அமைதியாய் பீதியைக் கிளப்புகிறார்.
ராஜராஜபுரமாக மாறிய தழைக்காடு
கங்கபாடியை ஆட்சி செய்த கங்கர்களின் தலைநகரங்களில் ஒன்று தழைக்காடு. காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இந்தச் சிறு நகரத்தில் சோழர், கங்கர் மற்றும் ஹொய்சாளர் கட்டிடக்கலைகளின் கலவையாகக் கட்டப்பட்ட மூன்று சிவாலயங்கள் உள்ளன. கிழக்கு நோக்கி எழுப்பப்பட்டுள்ள வைத்தீஸ்வரஸ்வாமி கோயிலுக்குள் நிறைய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. “இந்தக் கோயில் ஹொய்சாளர்கள் காலத்தில் கட் டப்பட்டிருக்கலாம்’’ என்கிறார் கண்ணன். தொட்டகஜனூர் வீரக் கல் சிற்பங்களும் இங்கே நாங்கள் பார்த்த சிற்பங்களும் ஒரே சாயலில் இருந்தன.
இங்கிருந்து தெற்காக நடந்தால் சற்று தொலையில் பாதாள ஈஸ்வரர் கோயில். இந்தத் கோயிலை ராஜராஜ சோழன் கட்டியதாக கோயில் சுவற்றில் கல்வெட்டு உள்ளது. தழைக்காட்டை வென்ற பிறகு அதை ராஜராஜபுரமாக மாற்றிய ராஜேந்திரன், ஆற்றின் தென்கரையில் தனது மனைவி பெயரில் சுத்த மல்லீஸ்வரம் என்ற ஒரு நகரத்தையும் புதிதாக நிர்மாணித்திருக்கிறார்.
குந்தவை நாச்சியாரின் கடன்
காவிரியில் இருபது நிமிட பரிசல் பயணத்துக்குப் பிறகு சுத்தமல்லீஸ்வரம் வருகிறது. ஆற்றின் வட கரையில் தழைக்காட்டை தகர்த்ததை சமன் செய்வதற்காகவே இந்த நகரத்தை உருவாக்கி இருக்கிறார்கள் சோழர்கள். இந்த ஊரின் வட கிழக்கில் சுத்தமல்லீஸ்வரர் கோயிலை எழுப்பிய ராஜேந்திரன், தென் மேற்கில் ‘ரவிகுல மாணிக்க விண்ணகர ஆழ்வார்’ என்ற பெருமாள் கோயிலையும் எழுப்பி இருக்கிறார். சுத்தமல்லீஸ்வரர் கோயில் இப்போது மாலிங்கேஸ்வரர் கோயிலாக மாறி விட்டது. அதேபோல், சுத்தமல்லீஸ்வரமும் தடிமாலிங் எனும் பெயரிலான பகுதியாக மாறிவிட்டது.
சுத்தமல்லீஸ்வரம் பெருமாள் கோயில் சுவரில் சோழர்காலக் கல்வெட்டுகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. ‘ரவிகுல மாணிக்க விண்ணகர ஆழ்வார்’ கோயிலை கட்டுவதற்காக ராஜராஜனின் தமக்கை பெயரில் செயல்பட்டு வந்த ‘குந்தவை நாச்சியார் ஸ்ரீ பண்டாரம்’ என்ற கஜானாவிலிருந்து கடன் வழங்கப்பட்டதற்கான தகவலையும் இங்கே கல்வெட்டில் பார்க்கமுடிகிறது. கோயிலின் வெளிமண்டபத்தை ராஜேந்திர சோழன் கட்டி இருக்கிறார். இவருக்காக சுத்தமல்லீஸ்வரத்தைச் சேர்ந்த ஊர்த் தலைவர் காமுண்டன் என்பவர் திருப்பணி வேலைகளை செய்திருக்கிறார்.
“ஆழ்வார் கோயிலில் ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழனின் கல்வெட்டுகள் ஏராளம் உள்ளன. இந்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயில் முழுக்க சிதிலமடைந்து போயுள்ளது. இதை பராமரித்துப் பாதுகாக்க இந்திய தொல்லியல் துறையின் இயக்குநருக்கு கடிதம் எழுதி இருக்கிறோம்’’ என்கிறார் வெங்கடேசன்.
தொடர் வெற்றிகளைக் குவித்த சோழப் படைகளே நிலைகுலைந்து நின்ற இடம் கலியூர். அதைக் காணும் ஆவலுடன் அடுத்தகட்டப் பயணத்தைத் தொடர்கிறோம்.
பல்முறி கோயில் ராஜராஜன் கல்வெட்டு
பாதாள லிங்கேஸ்வரர் கோயில் கல்வெட்டு
மவுன குருவுக்கு கல்வெட்டு
(பயணம் தொடரும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT