Last Updated : 01 Dec, 2015 12:40 PM

 

Published : 01 Dec 2015 12:40 PM
Last Updated : 01 Dec 2015 12:40 PM

சேதி தெரியுமா? - வெள்ள நிவாரணம் அறிவிப்பு

தமிழகத்தின் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக மத்திய அரசு முதல் கட்டமாக நவம்பர் 23-ம் தேதி ரூ.939.63 கோடியை ஒதுக்கியது. சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.8,481 கோடி வழங்க வேண்டும் என்றும், உடனடியாக ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இதனைத்தொடர்ந்து மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்தது. தமிழகத்தில் வெள்ள பாதிப்புகளை கணக்கிட மத்திய குழு ஒன்று அனுப்பப்படும். அந்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கை அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

ஆசியான் மாநாட்டில் மோடி

பத்தாவது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிலும், 13-வது ஆசியான் உச்சி மாநாட்டிலும் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி மலேசியா நவம்பர் 21-ம் தேதி மலேசியா சென்றார். ஆசியான் மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “21 ம் நூற்றாண்டு ஆசியாவுக்கு சொந்தமானதாக இருக்கும்” என்றார். இந்தியாவில் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதே எங்கள் லட்சியம் என்று மா நாட்டில் மோடி பேசினார். பின்னர் நவம்பர் 24-ம் தேதி மோடி சிங்கப்பூர் சென்றார். அங்கு இரு நாடுகளுக்கும் இடையே பத்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

வானிலை மாற்றத்தால் பேரழிவு

இயற்கைப் பேரிடர்களில் 90% வானிலை மாற்றங்கள் சார்ந்ததே என்று நவம்பர் 24-ம் தேதி வெளியிடப்பட்ட ஐ. நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்கா, சீனா, இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய 5 நாடுகள் இயற்கைப் பேரழிவுகளுக்கு அதிகம் ஆளாகி வருவதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் வெள்ளம், புயல்கள், வெப்ப அலைகள், வறட்சி, மற்றும் பிற வானிலை சார்ந்த பேரழிவுகளே அதிகம் என்கிறது அந்த அறிக்கை. அதிக கரியமில வாயுவை வெளியேற்றி வரும் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளும் பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

வெள்ளம்: மத்தியக்குழு ஆய்வு

சென்ன, காஞ்சிபுரம், கடலூரில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை ஆய்வு செய்தற்காக மத்தியக்குழு நவம்பர் 26-ம் தேதி சென்னை வந்தது. உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையிலான 8 உறுப்பினர்கள் அடங்கிய மத்திய குழு முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து வெள்ளச் சேத விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் தாம்பரம், முடிச்சூர், சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய இடங்களில் மத்தியக்குழு ஆய்வு மேற்கொண்டது. பின்னர் 27-ம் தேதி கடலூருக்கு மத்தியக்குழு சென்றது. அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டது. பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளையும் குழு கேட்டறிந்தது.

பிரித்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுத்திறன் கொண்ட பிரித்வி-2 ஏவுகணை நவம்பர் 26 அன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இது 350 கிமீ வரை சென்று இலக்குகளைத் தாக்கவல்லது.

ஒடிஷாவின் சந்திபூர் ஒருங்கிணைந்த ஏவுதளத்திலிருந்து நண்பகல் 12.10 மணியளவில் இந்த ஏவுகணை வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. தரை இலக்குகளை தாக்கவல்ல பிரித்வி-2 ரக ஏவுகணை 500 முதல் 1000 கிலோ எடையுள்ள வெடிபொருள் ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது.

ஏவுகணை செல்லும் பாதை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்மாட்டு அமைப்பான டிஆர்டிஓ ராடார்களால் கண்காணிக்கப்பட்டது. 2003-ம் ஆண்டு பிரித்வி-2 ரக ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x