Published : 22 Dec 2015 12:41 PM
Last Updated : 22 Dec 2015 12:41 PM

என்னைச் செதுக்கிய மாணவர்கள்: கலை ஆசிரியை லோகியா

குழந்தைகளின் கலைத் திறன் உள்ளிட்ட திறன்களிடமிருந்து ஒரு ஆசிரியர் தன்னை அந்நியப்படுத்திக்கொண்டு ‘பாடத்திட்டமே தனது இலக்கு’ என இருப்பது, பல வளர் இளம் கலைஞர்களை முளையிலேயே கொன்றுபோடும் அபாயமாக நம் கல்வியை மாற்றிவிடுகிறது.

- ஓவியர் எம்.எஃப் ஹுசைன்
( பிபிசி தொலைக்காட்சி நேர்காணலில்)

ஓவியத்தில் எம்.எஃப். ஹுசைன், இசையில் எம். எஸ். சுப்புலட்சுமி எனும் வகையிலான ஆளுமைகளை நமது இன்றைய கல்வியால் பெரிய அளவுக்கு உருவாக்க முடியவில்லை என்பதே யதார்த்தம். நாதஸ்வர மேதைகள் ஷேக் சின்ன மவுலானா, காருக்குறிச்சி அருணாசலம், சாக்சபோன் இசைக் கலைஞர் கதிரி கோபால்நாத் போன்ற ஜாம்பவான்கள் கலையில் மிளிர்ந்தது கல்விமுறைக்கு வெளியேதான் நடந்தது.

முரட்டுக்கல்வி

இவர்களில் பலரை நமது கல்வி ‘எதற்கும் லாயக்கு இல்லாதவர்கள்’ என்று இரக்கமில்லாமல் கைவிட்டுவிட்டது. இன்றும் ‘சூப்பர் சிங்கர்’ அசத்தல்கள் பள்ளிக்கல்விக்கு வெளியே மட்டுமே நடப்பதைப் பார்க்கிறோம். நமது வகுப்பறைகளில் சினிமா ரசனையையும், தொலைக்காட்சி நடனத்தையும் விவாதிப்பதைக்கூடப் பெரிய தவறு என்றே நம் கல்வி அணுகுகிறது என்பது கல்வியாளர்களின் குற்றச்சாட்டு.

குழந்தைகளிடம் உள்ள அடிப்படைத் திறன்களுக்கும் கிரேடு வழங்க வேண்டும் என்பதே தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையின் (CCE) நோக்கம். ஆனால் பதிவேடுகளில் தரப்பட்டியல்களை ஆசிரியர்கள் சம்பிரதாயமாக நிரப்புவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அக மதிப்பீடு (Formative Assesment) எனும் பகுதி முழுவதையுமே நாம், வகுப்பறையின் அன்றாட தேர்வுகளின் மூலம் மதிப்பிடுகிறோம்.இது குழந்தைகளின் திறன்களைப் பள்ளி தனது உள்ளடக்கமாகக் கருதவில்லை என்பதையே காட்டுகிறது. இந்த முரட்டுக் கல்வியைக் கடந்தும் கலையில் ஜொலிக்க முடியும் என எனக்குக் காட்டியவர்தான் மாணவி லோகியா.

எலியட் எய்ஸ்னரின் கலைக்கல்வி

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு (Continuous and Comprehensive Evaluation) எனும் வார்த்தையை அமெரிக்காவின் கல்வியாளர் எலியட் எய்ஸ்னர் கல்வியில் அறிமுகம் செய்தார். வகுப்பறையைக் கலைத்திறன் மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தும் துறைசார்ந்த கலை கல்வி (Discipline Based Art Education ) எனும் புதிய கல்விமுறையை அவரது பள்ளியில் அறிமுகம் செய்தார். தையல் முதல் இசை வரை உள்ள திறன்களில் பெரும்பாலானவை எய்ஸ்னரின் கலைக் கல்வி பாடத்திட்டத்தில் இருந்தன.

சுவீடன், பின்லாந்து, ரஷ்யா, ஜப்பான் உட்பட பல நாடுகளில் ஆரம்பக் கல்வியில் வாசிப்பது, எழுதுவது, கணக்கிடுவதோடு இசைக்கருவி வாசித்தல், நடனம் என்று கலைக்கல்வியும் அதிக அளவில் இடம்பெறுகிறது. இது எய்ஸ்னரின் கலை கல்வி முறைக்கு கிடைத்த அங்கீகாரம். எய்ஸ்னரின் கலை கல்விமுறை குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்கிறது. தற்கொலை எண்ணம், வீட்டை விட்டே ஓடுவது. அச்சத்தோடு பள்ளிக்குச் செல்வது என்னும் பிரச்சினைகளை அது நிறுத்தியது. அனைத்து வகையிலும் தன்னம்பிக்கை யாளர்களாக அவர்கள் மாறுவதையும் கல்வியாளர்கள் கண்டார்கள்.

ஒருகாலத்தில் இறுக்கமானதாக இருந்த கல்விக் கூடங்கள் தற்போது மதிய நேரத்தில் ‘எய்ஸ்னர் தடையரண் அட்டவணை (Block schedule )’ என பெயரிட்ட 95 நிமிட கலை ரசனை பாடவேளை ஒன்றை அறிமுகம் செய்துள்ளன. சுதந்திரப் பாடவேளையாக அறிவிக்கப்பட்டுள்ள அதைக் காணப் பெற்றோர்களும் கூடுகிறார்கள். தங்கள் வீட்டில் முதல் நாள் மாலையில் ரசித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி, நாடகம், விளையாட்டு என எதையும் திறந்த மனதோடு பேசி விவாதிக்கும் ‘எஸ்கலேட்டர்’ எனும் வகுப்பு மிகப் பிரபலம். கூடவே, இசை, நடனம், பாரம்பரியக் கலைகள் என்று பள்ளி முழுவதும் தனக்கு விருப்பமான துறைகளில் பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். உடற்பயிற்சி, சாகச விளையாட்டு, நீச்சல் போன்ற பயிற்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இளம் வயது நோய்களை இந்தக் கலை கல்வி முறை விரட்டியுள்ளது.

நமது கல்விச் சூழலில் கலை-கல்வியின் இடம் என்ன என்று எனக்குக் காட்டியவர்தான் மாணவி லோகியா.

லோகியாவின் தூக்கமும் விழிப்பும்

லோகியாவை நான் முதலில் பார்க்கும்போது அவர் எட்டாம் வகுப்பு மாணவி. கல்வியில் மிகவும் பின்தங்கியவர். ஒருநாள் கூட வீட்டுப்பாடங்கள் எழுதிவர மாட்டார். பல நாட்கள் பட்டப்பகலில் வகுப்பில் தூங்குவார். பள்ளிக்கு நாள்கணக்கில் விடுப்பு எடுப்பார். படிப்பில் இப்படி இருப்பவர்களுக்கு யாரும் பரிந்துபேச மாட்டார்கள்.

ஆனால், லோகியாவுக்கு நான் முழு ஆதரவாளன் ஆனேன். அதற்குக் காரணமான ஒரு சம்பவம் எங்கள் ஊர் மாரியம்மன் கோயில் திருவிழாவில் நடந்தது. மனைவிக்குத் துணையாக அந்தக் கோயிலுக்கு நான் போனேன். அங்கே அலகு குத்துதல், தீச்சட்டி, காவடி நிகழ்ச்சிகளைவிட வேறு ஒரு விஷயம் எங்களைக் கவர்ந்தது. ஒருவகை கரகாட்டக் கூத்து நடந்துகொண்டிருந்தது. ஏழு பேர் குழுவில் ஒரு சிறுமி ஆடிய ஆட்டம்தான் மக்களை அதிகமாகக் கவர்ந்தது. தலையில் கரகத்தோடு அவர் லாவகமாய் காட்டிய வித்தைகள் பல. விரிக்கப்பட்ட சேலையை ஆடியபடியே கட்டினார். கண்களைத் துணியால் இறுகக் கட்டியபடி கத்திகளுடன் வித்தைகாட்டினார். சுழன்று சுழன்று பாம்பு நடனம் ஆடினார்.

அந்தச் சிறுமியின் நடனத்தில் மிகவும் கவரப்பட்ட எனது துணைவியார் ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டினார். அந்தச் சிறுமியோ ‘‘வணக்கம் சார்… என்னைத் தெரியலயா? நான்தான் சார் லோகியா’’ என்றார். இன்றுவரை நான் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.

லோகியாவின் அம்மா, அப்பா இரண்டு பேருமே கரகாட்டக் கலைஞர்கள். அரசு விழாக்கள் முதல் ஊர்த் திருவிழா வரை பல நாட்கள் இரவுகளில் இளம் கலைஞராக அந்தக் குழந்தை மேடையில் களம் இறங்கியிருக்கிறது. அந்தக் களைப்புதான் பின்தங்கிய மாணவி போன்ற தோற்றத்தை அவருக்கு ஏற்படுத்திவிட்டது. நம் கல்விமுறையின் வேண்டா விருந்தாளியாக அவர் ஆகிவிட்டார். அது நமது கல்வியின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது.

கலை ஆசிரியை

பள்ளியில் ஆண்டுவிழா வந்தபோது லோகியாவின் கரகாட்டத்தை நான் இடம்பெறவைத்தேன். லோகியாவும் தானாக முன்வந்து நாலைந்து மாணவர் குழுக்களுக்கு நடனம் கற்றுக்கொடுத்தார். அவர் கலை ஆசிரியையாக மாறி எங்களையெல்லாம் மாணவராக்கிவிட்டார்.

முதல்முறையாக சினிமாப் பாடலே இல்லாத மாணவர் கலைநிகழ்ச்சி நடந்தது. ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம் என்று கலக்கி எடுத்துவிட்டார் லோகியா. அந்தச் சின்ன வயதில் தானே பொறுப்பேற்று இவற்றை அரங்கேற்றினார் லோகியா.

நமது பள்ளியில் கலை-கல்வியை எப்படி இடம்பெறச் செய்ய முடியும் என்று எனக்கு வழிகாட்டினார் லோகியா. பாரம்பரியக் கலைகள் பாடத்தில் அவர் முதுகலை முடித்தார். தற்போது மத்திய அரசின் கலைக்குழுக்களுக்குப் பயிற்றுநராக இருக்கிறார். பாரம்பரியக் கலைகள் பாடத்தில் இளங்கலை, முதுகலை இரண்டிலும் பல்கலைக்கழக அளவில் அவர் தங்கப் பதக்கம் பெற்றார் என்பதையும் நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். இல்லையென்றால் கோபித்துக்கொள்வார்.

தொடர்புக்கு: eranatarasan@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x