Published : 24 Nov 2015 12:23 PM
Last Updated : 24 Nov 2015 12:23 PM

மனசு போல வாழ்க்கை 35: மன நலம் காக்கும் மருந்து எது?

“வாழ்க்கை வெறுத்து விட்டது. வாழ்வதில் எந்தப் பயனும் தெரியவில்லை. எதுவும் மாறும் என்ற நம்பிக்கை இல்லை. எந்தப் பிடிமானமும் தெரியவில்லை. சாவதைப் பற்றி யோசிக்கிறேன்.”

இப்படி எண்ணுவோர் எண்ணிக்கை பெருகிவருவது கவலை அளிக்கிறது. வாழ்வில் நம்பிக்கை இழந்து, பிடிமானம் தெரியாமல், ஒரு விளிம்பு நிலையில் மக்கள் யோசிப்பது பெருகிவரும் நுகர்வுக் கலாச்சாரத்தின் பின்விளைவு என்றும் சொல்லலாம். பொருட்களின் மதிப்பு உயர்ந்தும் மனிதர்களின் மதிப்பு குறைந்தும் ஒரு அசுர வேகத்தில் பொருட் குவிப்பில் மக்கள் ஓடுவதில் முதலில் நசுங்கிப்போவது மனித உறவுகளே. இல்லாமையில் வாழும் மக்கள் கூட்டங்கள் மரணத்தை யோசிப்பதில்லை. சாலையில் தூங்கும் மனிதர்கள் கூட நாளையைப் பற்றிய நம்பிக்கையில்தான் ஆழ்ந்து உறங்குகிறார்கள். பொருள் வசதியும் தனிமையும் கொண்டோர்தான் அதிகம் மரணம் பற்றி யோசிக்கிறார்கள்.

துக்கமும் மனமும்

தற்கொலைக்குப் பல காரணங்கள். துக்க நோய், மனச்சிதைவு, ஆளுமைக் குறைபாடுகள் போன்ற மனநோய்கள், குடி, போதைப் பொருட்களுக்கு அடிமையாதல், குடும்பப் பிரச்சினைகள் என நிறைய உள்ளன. ஆனால் இந்த சமூகக் காரணிகளில் நகர வாழ்வின் அன்னியத்தன்மை கொண்ட வாழ்முறை முக்கியமானது.

சமூக உறவுகள் இற்றுப்போய், குடும்ப உறவுகளிலும் இடைவெளி வந்து, வேலை சார்ந்த உறவுகள் இயந்திரகதியாக இயங்கும்போது, துக்கப்படும் மனம் பிடிமானம் இன்றி தவிக்கிறது.

இருத்தலியல் தத்துவத்தின் படி வாழ்க்கைக்கு என்று பெரிய அர்த்தமில்லை. நாம்தான் அதற்கு அர்த்தம் கொடுக்கிறோம். வாழ்வில் சலிப்புத்தன்மை வரும்போது குறிக்கோள் இல்லாமல் திரியும் மனம். வாழ்க்கையின் சகலத்தையும் துப்பிவிட்டு எங்காவது போகலாம் என்று தோன்றும். இதைக் குமட்டல் என்று சொல்வார்கள் இருத்தலியல் தத்துவத்தின் ஆதரவாளர்கள்.

எழுத்தாளர் அம்பை ‘வீட்டின் மூலையில் ஒரு சமையல் அறை’ என்ற சிறுகதையில் அந்த மார்வாடிப் பெண் தான் வாழ்க்கை முழுவதும் எத்தனை ரொட்டிகள் சுட்டிருப்போம் என்று கணக்கிடுவார். அது போல நம் வாழ்க்கை கூட இயந்திர கதியாக, அர்த்தம் இல்லாமல் தோன்றும்.

கொடுப்பதுதான் மருந்து

“நான் வாழ்ந்து யாருக்கு என்ன லாபம்?” என்று கேட்போர் உண்டு. வேலை, குடும்பப் பொறுப்புகள் முடிந்துவிட்டால் அடுத்து என்ன செய்ய என்று தெரியாத பல பெரியவர்களைப் பார்க்கிறோம். எந்த வயதிலும் வாழ்க்கை அசதியாகவும் அர்த்தமில்லாததாகவும் தோன்றலாம்.

ஆனால் மனித வாழ்க்கை எவ்வளவு மகத்தானது? பல லட்சம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில் நமக்குக் கிடைத்த அற்புத வாய்ப்பு. நம் உடலும் மனமும் கொண்டுள்ள சக்தி தான் மனித இனத்தை இந்த உலகத்தின் தலைமையாக ஆக்கி உள்ளது.

நம்மால் என்ன செய்ய முடியாது? மனம் நினைக்கின்ற அனைத்தையும் செய்து முடிக்க வல்லவர்கள் நாம்.

‘‘என்னவெல்லாம் இல்லை என்னிடம்’’ என்று பட்டியல் இடுவதற்குப் பதில் ‘‘என்னவெல்லாம் என்னிடம் இருக்கிறது’’ என்று பட்டியல் போட்டால் அது வாழ்க்கையின் கண்ணோட்டத்தையே மாற்றிவிடும்.

உங்கள் வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்க ஒன்று செய்யலாம். உங்களால் பிறருக்கு என்னவெல்லாம் செய்ய முடியும் என்று யோசியுங்கள். கொடுப்பது தான் மன நலத்தைக் காக்கும் பெருமருந்து.

சோகத்தை ஒழிக்கும் வழி

என்ன கொடுக்கலாம்? ஒவ்வொருவரிடமும் கொடுக்க நிறைய உள்ளது. பெரிதாகப் பணம் இருக்க வேண்டும் என்று அவசியமே இல்லை.

பார்வையற்றவருக்குப் படித்துக் காட்டுங்கள். உங்கள் பணியாளர் குழந்தைகளுக்குப் பாடம் எடுங்கள். உறுப்பு தானம் செய்யலாம். நீங்கள் பயன்படுத்தாத பல பொருட்களை நல்ல நிலையில் இல்லாதவருக்குக் கொடுக்கலாம். ஆலயத்தைச் சுத்தப்படுத்தலாம். முதியோர் இல்லத்தில் சென்று அவர்களுடன் அன்பு பாராட்ட. தேர்வுப் பணம் கட்ட முடியாதவருக்குப் பணம் கட்டலாம். மனம் சோர்ந்தவர்களிடம் உற்சாக வார்த்தைகள் பேசலாம். ஆலோசனை சொல்லலாம்.

வசதி உள்ளவர்கள் சேவை மனப்பான்மை கொண்டவர்களுக்கு நிறைய செய்யலாம். கொடுப்பது என்பது தான் முக்கியம். யாருக்கு எதைக் கொடுப்பது என்பது அவரவர் தேர்வுகள்.

கொடுப்பது துக்க நிலையை மாற்றும். துக்கம் சுய நலமான உணர்வு. எனக்கு இது இல்லையே என்ற சுய பரிதாபம் தரும் சோகம் தான் துக்கத்தில் பிரதான பகுதி. தன் மேலுள்ள சிந்தனையை மாற்றப் பிறருக்கு உதவ ஆரம்பியுங்கள். துக்கம் விலகும். புதிய நம்பிக்கைகள் பிறக்கும். பல பிடிமானங்கள் வாழ்க்கையில் உள்ளது தெரியும்.

சொந்த வாழ்வில் சோகங்கள் இல்லாதவர்கள் யார்? ஆனால் பிறரின் சோகத்தைத் துடைக்கத் துணிகையில் சொந்த சோகம் இடம் தெரியாமல் போகும்.

எல்லா உலகத் தலைவர்களும் இதை உணர்ந்தவர்கள் தான். டால்ஸ்டாய் மோசமான தாம்பத்திய வாழ்க்கையை அனுபவித்தவர். ஆனால் இலக்கியம் அவரை இளைப்பாற்றியது. தேசத்துக்கே பிதாவான காந்திஜியின் புதல்வர் ஹரிலால். அவருக்கும் காந்திக்கும் ஒரே மோதலும் முரண்பாடும்தான். ஆனால் தேசப்பணி காந்திஜியைச் சோகத்தில் ஆழ்ந்து விடாமல் பார்த்துக் கொண்டது.

தற்கொலை தீர்வா?

படிப்பில்லை. பணமில்லை. சொந்த பந்த ஆதரவில்லை. பிள்ளைகள் சரியில்லை. நோய்கள். பணியில் பிரச்சினைகள். யாருக்குத் தான் சோகமில்லை? ஆனால் மரணம் அதற்குத் தீர்வில்லை. தற்கொலை செய்தவரின் குடும்பம் எத்தனை காலம் அந்த ரணத்தைச் சுமக்க வேண்டியிருக்கும்?

வாழ்க்கையில் நம்பிக்கைகள் முக்கியம். நமக்கேற்ற பிடிமானங்களைத் தேர்வு செய்து கொள்வது மிக முக்கியம். அது மதமோ, விளையாட்டோ, அரசியலோ, சினிமாவோ, இலக்கியமோ, சமூகச் சேவையோ, வேலையோ ..ஏதோ ஒன்று இருக்கட்டும்.

வாழ்வின் இன்பங்கள் விரைவில் திகட்டி விடும். துக்கங்கள் என்றும் தொடர்ந்து வரும். ஆனால், வாழ்வில் நாம் வைத்துள்ள குறிக்கோள் நம்மைச் சீராக இயக்கிச் செல்லும். சொந்த வாழ்வின் சோகங்களையும் புறந்தள்ள வைக்கும்.

உங்கள் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்று யோசியுங்களேன்!

தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x