Published : 24 Nov 2015 12:28 PM
Last Updated : 24 Nov 2015 12:28 PM
தமிழக வட மாவட்டங்களில் நவம்பர் 14, 15, 16 ஆகிய தேதிகளில் கொட்டித் தீர்த்த கன மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல பகுதிகள் வெள்ளக்காடாயின. இந்த மாவட்டங்களில் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உடைப்பு ஏற்பட்டதால் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. வெள்ளம் காரணமாக வீடுகளைவிட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்தனர்.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். தமிழகத்தில் மழை, வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 110-ஐ தாண்டியது. வெள்ள நிவாரணப் பணிகளுக்காகத் தமிழக அரசு ரூ.. 500 கோடியை ஒதுக்கியது. வெள்ளச் சேதத்தை மதிப்பிட மத்தியக் குழுவை அனுப்ப முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசைக் கேட்டுக் கொண்டார்.
மீண்டும் முதல்வரானார் நிதிஷ்
பீகாரின் 23-வது முதலமைச்சராக நிதிஷ்குமார் நவம்பர் 20-ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். தலைநகர் பாட்னாவில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ராம் நா கோவிந்த் நிதிஷ்குமாருக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நிதிஷ்குமாருடன் 36 அமைச்சர்களும் பதவியேற்றனர். பீகாரில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணி 178 இடங்களைப் பிடித்து ஆட்சியைப் பிடித்தது. இந்தக் கூட்டணியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் நிதிஷ்குமார் 5-வது முறையாகப் பீகார் முதல்வராகியிருக்கிறார்.
மானிய சிலிண்டருக்கு கட்டுப்பாடு
ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு மானிய விலை எல்பிஜி சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு நவம்பர் 15-ம் தேதி சூசகமாகத் தெரிவித்தார். ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய வெங்கய்ய நாயுடு, சட்டவிரோத எல்பிஜி சிலிண்டர் இணைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் குடும்பங்களுக்கு மானிய விலை எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை நிறுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார். அந்தத் தொகையை ஏழைகளுக்குச் செலவிட அரசு முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
உலக நாடுகளுக்கு அழைப்பு
அரசியல் சார்புகள் இன்றி பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒருமித்தக் குரலில் பேச வேண்டும், இணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 16 அன்று தெரிவித்தார். துருக்கியில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பங்கேற்றுப் பேசியபோது இந்த அழைப்பை அவர் விடுத்தார். மேலும் மதத்தலைவர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் கருத்தாளர்கள் ஆகியோரை ஈடுபடுத்திப் பயங்கரவாதத்துக்கு எதிராகச் சமூக இயக்கம் ஒன்றை உருவாக்க வேண்டும். அது இளைஞர்களை மையப்படுத்திச் செயல்பட வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.
புதிய தலைமை நீதிபதி
உச்ச நீதிமன்றப் புதிய தலைமை நீதிபதியாகத் தீரச் சிங் தாக்கூரை நியமித்துக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நவம்பர் 18 அன்று நியமித்து அறிவிப்பு வெளியிட்டார். இவர் டிசம்பர் 3-ம் தேதி பதவியேற்க உள்ளார். 2017-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி வரை இந்தப் பதவியில் இருப்பார். தற்போது தலைமை நீதிபதியாக உள்ள எச்.எல்.தத்து டிசம்பர் 2-ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இந்தியாவின் 43-வது தலைமை நீதிபதியாகப் பதவியேற்க உள்ள தாக்கூர் காஷ்மீரைச் சேர்ந்தவர் ஆவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT