Last Updated : 10 Nov, 2015 02:28 PM

 

Published : 10 Nov 2015 02:28 PM
Last Updated : 10 Nov 2015 02:28 PM

அந்த நாள்: சிந்து சமவெளி- சிந்து மக்களின் சித்திர மொழி

சிந்து சமவெளி நாகரிகத்தின் பெருமையை இன்றைக்கும் உலகுக்கு எடுத்துச் சொல்பவையாக அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பல்வேறு முத்திரைகள் அமைந்துள்ளன. சிந்து சமவெளி நாகரிகத்தில் புழங்கிய மொழியைப் புரிந்துகொள்வதில் சிக்கல் நிலவினாலும், அங்கு வாழ்ந்த மக்கள், உயிரினங்கள், பண்பாடு, கலைத் திறமை போன்றவற்றைப் பற்றிப் பல தகவல்களை இந்த முத்திரைகள் பேசுகின்றன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்:

முத்திரைகள்

மனித, உயிரின உருவங்கள் பொறிக்கப்பட்ட சுடுமண், செம்பு முத்திரைகள் சிந்து சமவெளியில் 2000-க்கும் மேல் கிடைத்துள்ளன. இவை ஓர் அங்குல நீளமே கொண்டவை. கழுத்தில் தொங்கவிட வசதியாகவும், அடையாள முத்திரையாகவும் இவை பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

சிந்து சமவெளி மக்களின் எழுத்துகளை வாசித்து அறிவதற்கான முழுமையான தெளிவு ஆராய்ச்சியாளர்களிடம் இன்னமும் ஏற்படவில்லை. அவை, பெரும்பாலும் சித்திர எழுத்துகளை ஒத்திருக்கின்றன.

சிந்து சமவெளி முத்திரைகளின் சமகால மெசபடோமிய முத்திரைகளில் போர், சண்டை சித்திரிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிந்து சமவெளி முத்திரைகளில் அப்படியில்லை. போர்க் கருவிகள் செய்வதற்கான செம்பு, தாமிரம் போன்றவை புழக்கத்தில் இருந்தும்கூட, அகழ் வாராய்ச்சியில் ஆயுதங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதனால், இந்த நாகரிகம் அமைதி வழியிலான நாகரிகமாகக் கருதப்படுகிறது.

சிந்து சமவெளி முத்திரைகள் 10 வகையான வடிவங்களில் கிடைத்துள்ளன.

அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மிகவும் பெரிதாக எழுதப்பட்டுள்ள எழுத்தின் நீளம் 37 செ.மீ. அது அறிவிப்புப் பலகையாக இருந்திருக்கலாம்.

மொகஞ்சதாரோவில் படகுகள் கொண்ட இரண்டு முத்திரைகள் கிடைத்துள்ளன.

ஒரு சிந்து சமவெளி முத்திரை பார்ப்பதற்கு மீன் அல்லது நட்சத்திரத்தைப் போலிருக்கிறது.

ஒரு முத்திரையில் ஒரு மனிதன் எருமையுடன் ஈட்டியை வைத்துக் கொண்டு சண்டையிடுகிறான்.

மற்றொரு முத்திரை ஒன்றில் காட்டு விலங்குகளுடன் ஒரு பெண் சண்டையிடுகிறார்.

ஒரு முத்திரையில் செயற்கைக் கொம்புகளைப் பொருத்திக்கொண்ட ஒரு மனிதன், புலிகளுடன் சண்டையிடுகிறான்.

மேற்கண்ட முத்திரைகளில் இருந்து பல்வேறு உயிரினங்களுடன் சிந்து சமவெளி மக்கள் கொண்டிருந்த உறவு புலப்படுகிறது.

அளவையும் கணிதமும்

அளவைகள் பற்றியும் சிந்துவெளி மக்களுக்குத் தெரிந்திருந்ததால், அவர்களுக்குக் கணித அறிவு இருந்துள்ளது என்ற முடிவுக்கு வரலாம்.

ஹரப்பாவில் வெண்கல அளவு கோல் கண்டறியப்பட்டுள்ளது.

வெண்கலம் மட்டுமில்லாமல் கிளிஞ்சல், தந்தம் போன்றவற்றாலும் அளப்பதற்கான அளவுகோல்கள் செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், ஒவ்வொன்றும் வித்தியாசமான அளவைகளைக் கொண்டிருந்தன.

அவர்களுடைய கணித முறைப்படி 10 என்பதற்கான குறியீடு அரை வட்டம், மற்ற எண்கள் கோடுகளால் சுட்டப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x