Published : 20 Oct 2015 10:59 AM
Last Updated : 20 Oct 2015 10:59 AM
டொக் டொக் டொக் டொக்... சீரான இடைவெளியில் சத்தமாக யாரோ கதவைத் தட்டுவதைப் போலவும், இசைப்பது போலவும் கேட்கிறதா? மரங்கொத்தி மரத்தைக் கொத்தும் இனிய ஓசைதான் அது.
பறவை உலகின் தச்சர் என்று மரங்கொத்திகளைச் சொல்லலாம். மற்றப் பறவைகள் புல், குச்சி போன்றவற்றை வைத்துக் கூட்டைக் கட்டும்போது, மரங்கொத்திகள் மட்டும் அடர்த்தியான மரத்தில் துளையிட்டு, கூட்டை அமைத்துக்கொள்கின்றன. இந்தத் துளைகளைக் கிளி போன்ற பறவைகளும் கூடாக்கிக்கொள்கின்றன. இப்படித் துளையிடும்போது கிடைக்கும் புழு, பூச்சிகளைப் பிடித்து மரங்கொத்திகள் சாப்பிடுகின்றன.
மோதுவதன் ரகசியம்
அதெல்லாம் சரி. மரங்கொத்தி மரத்தைத் துளையிடும்போது, அவற்றின் தலைக்கோ, மூளைக்கோ எதுவும் ஆகாதா? தலையை வலிக்காதா?
அதிவேகமாக மரத்தைத் துளையிடும்போது ஏற்படும் அதிர்ச்சியோ, மரத்துகள்களோ அதன் மூளையையோ, கண்களையோ பாதிப்பதில்லை. மூளை பாதுகாப்புக்கும், பார்வையைப் பாதுகாக்கவும் அவை விநோதமான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன.
ஆச்சரிய வேகம்
ஒரு மனிதன் அதிவேகமாக ஓடி ஒரு மரத்தில் மோதுவது போல, ஒரு மரங்கொத்தி 24 கி.மீ. வேகத்தில் ஒரு நிமிடத்துக்கு 100 முறை மரங்களில் மோதுகிறது. முதல் மோதலுக்கே ஒரு மனிதன் மருத்துவமனைக்குப் போய்விடுவான்.
ஆனால் மரங்கொத்தியோ, எந்தச் சேதாரமும் இல்லாமல் அடுத்த துளையிடலுக்குத் தயாராகிறது. மரங்கொத்தி, ஒரு நாளைக்குச் சராசரியாக 12,000 முறை மரத்தில் மோதுகிறது, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு வாழ்கிறது என்றால், அது ஆச்சரியமான பறவை என்பதில் சந்தேகமில்லை.
மூன்று அம்சங்கள்
மரங்கொத்தி மரத்தில் துளையிடும்போது அதன் கழுத்து, எலும்புக்கூடு, முகம் போன்ற பகுதிகள் கடுமையான அதிர்வைச் சந்திக்கின்றன. அவற்றுக்கு வலுவான மண்டையோடு இருப்பது மட்டுமில்லாமல், மேலும் மூன்று முக்கிய அம்சங்கள் பாதுகாப்பாக அமைகின்றன.
அவை, வலுவான கழுத்துத் தசைகள், நெகிழ்வான முதுகெலும்பு, மரங்கொத்தியின் மண்டையோட்டைச் சூழ்ந்து இருக்கும் நீண்ட நாக்கு அமைப்பு.
ஹாங்காங் பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மரங்கொத்திகள் மரத்தைக் கொத்தும்போது, அவற்றின் மண்டையோடுகள் என்ன ஆகின்றன என்று ஆராய்ந்தார்கள்.
ஹயாய்ட் எலும்பு
மண்டையோட்டைச் சுற்றி ஹயாய்ட் (hyoid) எலும்பு ஒரு பாதுகாப்புப் பட்டை போலச் செயல்பட்டு மூளைச் சேதத்தைத் தவிர்க்கிறது. இந்த ஹயாய்ட் எலும்பு, மரங்கொத்தியின் நாக்குடன் இணைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் மரங்கொத்தியின் மேல், கீழ் அலகுகள் மாறுபட்ட அளவில் இருப்பதால், மரத்தை கொத்துவதால் ஏற்படும் விசை அதே அளவுக்கு தலைக்குள் செலுத்தப்படுவதில்லை.
அது மட்டுமில்லாமல், மண்டையோட்டின் சில எலும்புகள் மென்மையாகவும், தட்டுகளைப் போலவும் இருப்பதால், உள்ளே அதிவேகமாக வரும் விசை பகிர்ந்து கடத்தப்படுகிறது. இதனால் மூளைக்கு அழுத்தம் கடத்தப்படுவது தவிர்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக மரங்கொத்தியின் தலையும் கழுத்தும் ஒருங்கிணைந்து செயல்பட்டு மரங்கொத்தியை வித்தியாசமான பறவை ஆக்குகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT