Published : 08 Sep 2015 12:17 PM
Last Updated : 08 Sep 2015 12:17 PM
தோல்விகள் நமக்கான பாடங்கள் என்று தெரிந்தும் தோல்விகளைப் பற்றி நாம் அதிகம் நினைப்பதில்லை. வெற்றியைக் கொண்டாட நினைக்கிறோம். தோல்வியை மறக்க நினைக்கிறோம். தோல்வி தரும் வலிதான் காரணம். தோல்வியை நினைக்கையில் நம்மையும் அறியாமல் சிறுமைப்பட்டுப் போகிறோம். வெளியில் சொல்லாவிட்டாலும் குறுகிப்போகிறோம். இது எனக்கு நடந்திருக்க வேண்டாம் என்று நினைக்கிறோம்.
மூடி மறைத்தல்
காரணம் இல்லாமல் காரியம் இல்லை. தோல்வி வருவது நமக்கு ஒரு பாடம் புகட்டத்தான். அந்தப் பாடத்தை வலிமையாகக் கற்றுத்தரத் தோல்வியால் தான் முடியும். வெற்றியால் வரும் பாடங்கள் அகந்தையை வளர்க்கும். தோல்வி தரும் பாடங்கள் அகந்தையை அழிக்கும்.
நம் அகந்தை அழிய அவ்வளவு சீக்கிரம் நாம் அனுமதிப்போமா?
பொய்யான காரணங்களை அகந்தை உற்பத்தி செய்யும். ஒரு தற்காலிக அமைதியை உருவாக்கி அதில் தோல்வி அனுபவத்தை மூடி வைக்கும். அந்த மூடி மறைத்தலில் தோல்வி நமக்குக் கற்பிக்கும் பாடங்களும் மனதில் ஏறாமல் போய்விடும்.
தோல்வி நிலையானதா?
வெற்றியாளர்களின் சாகசங்களைக் கேட்பதில் 100- ல் ஒரு பங்கு கூடத் தோல்வியாளர்களின் அனுபவங்களை நாம் கேட்பதில்லை. வெற்றி பெற்றவர்களின் பழைய தோல்வி அனுபவங்கள்கூட சாகசங்களாகத்தான் பார்க்கப்படும். நிறைய தோல்விகளைச் சந்தித்தவர்களின் அனுபவங்கள் வளமான வாழ்க்கைப் பாடங்கள். அனைத்துத் தோல்விகளையும் நாமே பெற்றுக் கற்றுக்கொள்வதைவிடப் பிறர் தோல்விகளில் பாடம் கற்பது புத்திசாலித்தனம்.
தோல்வியடைந்தவர்களை உடனே உதாசீனப்படுத்துவது போன்ற மடத்தனம் எதுவுமில்லை. முதலில், வெற்றி, தோல்வியை வைத்து மனிதர்களை மதிப்பிடுவது மலிவான செயல். இரண்டாவது, தோல்வி என்பது நிரந்தர நிலையில்லை. ஒரு வெற்றி கூடச் சமயத்தில் வாழ்க்கையின் உச்சத்துக்கு இட்டுச் செல்லலாம். மூன்று, தோல்வியாளர்கள் தங்கள் பாடங்களைப் பகிரத் தயாராக இருப்பார்கள். ஆறுதல் கிடைக்கக் கூடப் பகிரலாம். ஆனால், வெற்றி பெற்றவர்கள் பலர் தங்கள் தோல்வி அனுபவங்களைப் பகிர மாட்டார்கள். ஆதலால் தோல்விகள் பாடங்கள் என்றால் தோல்வி அடைந்தவர்கள் ஆசிரியர்கள்.
நாம் ஏன் தோல்வி களைக் கண்டு இப்படிப் பயந்து நடுங்குகிறோம்? சிறு வயது முதலே தவறுகளையும் தோல்விகளையும் ஒதுக்கத்தான் சொல்லித் தந்திருக்கிறார்கள்.
வெற்றியின் மீதான வெறி
சரியும் தவறும் கலந்ததுதான் வாழ்க்கை. வெற்றியும் தோல்வியும் இணைந்திருப்பது தான் இயல்பு. ஒன்றை மட்டும் கொண்டவர்கள் யாரும் இல்லை. நம் தெய்வங்கள் கூட இதற்கு விதி விலக்கல்ல.
வாழ்க்கையில் வெற்றியை மட்டும் தனியாகப் பிரித்து முழுமையாக உரிமை கொண்டாடிவிடலாம் என்று நினைப்பதினால் தான் இன்று வெற்றியை விற்கும் சந்தைகள் பெருகி விட்டன. இதைப் படி, இதைக் குடி, இதைச் செய், இதை வாங்கு, இங்கு செல், இவரிடம் போ என்றெல்லாம் பிரித்துப் பிரித்துச் சந்தையைப் பிடித்துக் கொண்டதன் காரணம் நமக்கு வெற்றியின் மீது இருக்கிற வெறி தான்.
வாழ்க்கையில் வெற்றியை மட்டும் தனியாகப் பிரித்து முழுமையாக உரிமை கொண்டாடிவிடலாம் என்று நினைப்பதினால் தான் இன்று வெற்றியை விற்கும் சந்தைகள் பெருகி விட்டன. இதைப் படி, இதைக் குடி, இதைச் செய், இதை வாங்கு, இங்கு செல், இவரிடம் போ என்றெல்லாம் பிரித்துப் பிரித்துச் சந்தையைப் பிடித்துக் கொண்டதன் காரணம் நமக்கு வெற்றியின் மீது இருக்கிற வெறி தான்.
படிக்காதவர்கள், நல்ல மதிப்பெண்கள் வாங்காதவர்கள், நல்ல வேலை கிடைக்காதவர்கள், பணம் சம்பாதிக்காதவர்கள், சொத்து சேர்க்காதவர்கள் இவர்கள் எல்லாம் தோல்வியடைந்தவர்கள் என்று நம்ப ஆரம்பித்து விட்டோம். அப்படி என்றால் படிப்பு, வேலை, சொத்து சேர்த்தவர்கள் முழுமையான வெற்றியாளர்களா? பின் ஏன் இவர்களில் பலரிடம் இத்தனை வியாதிகள், விவாகரத்துகள், விவகாரங்கள்? இவையெல்லாம் தோல்விகள் இல்லையா?
நம்பிக்கையே மருந்து
யோசித்துப் பார்த்தால், வெற்றியும் தோல்வியும் அவரவர் மதிப்பீடு சார்ந்தவை. வாழ்க்கையில் எதை நோக்குகிறோமோ அது கிடைத்தால் வெற்றி. அது தவறினாலோ அல்லது தாமதமானாலோ அதைத் தோல்வி என்று சொல்கிறோம். அவ்வளவு தான்.
எந்தத் தோல்வியும் பெரிதல்ல. அதைப் பூதாகரமாக ஆக்கி விடுவது நம் எண்ணங்கள் தான். அந்தந்தப் பருவத்தில் பெரிதாகத் தெரியும் தோல்விகள் காலமும் தூரமும் கடந்து நோக்குகையில் அற்ப விஷயமாகத் தெரியும்.
மதிப்பெண்கள் குறைவதும், காதல் கை கூடாததும் அந்தந்தக் காலத்தில் வாழ்க்கையே ஸ்தம்பிக்க வைப்பவை. ஆனால் அதைக் கடந்தும் வாழ்க்கை ஓடும். அதை விடச் சிறப்பான நிகழ்வுகளும் வாய்ப்புகளும் வாய்க்கும். நாளை பற்றிய நம்பிக்கைதான் நேற்றைய காயங்களுக்கு மருந்து.
தோல்விகளுக்கு நன்றி
மரணம் நிகழ்ந்த வீட்டிலும் காபி குடிக்கிறார்கள். விபத்து நடந்த இடத்தில் சில நிமிடங்களில் போக்குவரத்து சகஜமாகிறது. இயற்கை சீற்றம் நிகழ்ந்த இடம் சுற்றுலா மையம் ஆகிறது. எல்லா இழப்புகளும் ஏதோ ஒரு விதத்தில் ஈடு செய்யப்படுகின்றன.
உங்களுக்கு முன்பாக மலையேறுபவர் தடுக்கி விழும் போது, “அங்கு வழுக்கல் அதிகம். பார்த்துப் போ!” என்று சொல்லாமல் சொல்கிறார். உங்கள் விபத்தைத் தடுக்கிறார்.
உங்களுக்குக் கிடைத்த அனைத்துத் தோல்விகளுக்கும் நன்றி செலுத்துங்கள். உங்கள் தோல்விக்குக் காரணமான அனைவரையும் மனதாரப் பாராட்டி நன்றி சொல்லுங்கள். நீங்கள் செல்லும் பாதையில் உங்களுக்கு முன்பாக சென்று தோற்றவர்கள் அனைவரையும் நினைவு கூறுங்கள்.
வெற்றியைத் தலைக்கு மேலே எடுத்துக் கொள்ள வேண்டாம். தோல்வியை மனதுக்குள் எடுத்துக் கொள்ள வேண்டாம். இரவும் பகலும் போல வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக்கொள்வோம்!
தொடர்புக்கு: gemba.karthikeyan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...