Published : 29 Sep 2015 12:11 PM
Last Updated : 29 Sep 2015 12:11 PM
நாளந்தா, விக்கிரமஷிலா பல்கலைக்கழகங்களைப் பழங்காலத்தில் அமைத்து அறிவு வெளிச்சம் பரவச்செய்த தேசம் பிஹார். புராணங்கள், இதிகாசங்கள் இதைக் கொண்டாடுகின்றன. கவுதம புத்தர் ஞானம் பெற்ற இடமும் இதுவே. சமண மதத்தை ஸ்தாபித்த மகாவீரர் பிறந்த இடமும் இதுவே.
ராமரின் மாமியார் வீடு
ராமன் மணந்த சீதையின் அப்பாவான ஜனகர் ஆண்ட விதேகம் எனும் நாடு இங்கேதான் இருக்கிறது. ராமாயணத்தை எழுதிய வால்மீகி வாழ்ந்ததும் இங்கேதான் எனக் கூறப்படுகிறது.
கி.மு.7 மற்றும் 8-ம் நூற்றாண்டில் மகத மற்றும் லிச்சாவி அரசுகள் நிர்வாகத் திறன் மிக்க முன்னோடி அரசாகத் திகழ்ந்தன. முதல் பொருளாதார அறிவியல் நூலான அர்த்த சாஸ்திரத்தை எழுதிய கவுடில்யர், அலெக்சாண்டரின் தூதுவர் மெகஸ்தனிஸ், அஜாதசத்ரு பாடலிபுத்திரத்தைக் கட்டமைத்தது குறித்த வரலாற்றைப் பதிவு செய்த வெளிநாட்டு பயணி செல்யூக்கஸ் நிகேட்டர், அசோகர், சீக்கியர்களின் 10-வது குருவான குரு கோவிந்த் சிங் ஆகியோரால் பிஹாரின் பழங்காலப் பெருமைகள் நிலைத்து நிற்கின்றன.
நேற்றும் இன்றும்
மகத நாடு, மிதிலை, அங்கதேசம் மற்றும் வைசாலி எனப் பல பெயர்களில் இன்றைய பிஹார் அழைக்கப்பட்டது. புத்தரின் சமகாலத்தவராக ஹர்யான்கா வம்சத்தைச் சேர்ந்த மன்னர் அஜாதசத்ரு உருவாக்கியதுதான் பாடலிபுத்திரம் (இன்றைய பாட்னா). பின்னர் சிசுநாகா வம்சம், நந்தா வம்சம், மவுரியர்கள் அதிகாரத்துக்கு வந்தனர்.
11-ம் நூற்றாண்டில் பிஹாரையும் வங்கத்தையும் முதலாம் ராஜேந்திர சோழன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். அதன் பிறகு மீண்டும் மொகலாயர்கள் ஆட்சி. அவர்களுக்குப் பிறகு வங்காள நவாப்கள் என பிஹார் பலர் கைக்கு மாறியது.
1764-ல் பக்ஸார் போர் மூலம் காலடி எடுத்து வைத்த ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி, பிஹார், வங்கம் ஒரிஸ்ஸாவில் ஆதிக்கம் பெற்றது. வங்க மாகாணத்தின் ஒரு பகுதியாக பிஹார் 1912- வரை இருந்தது. 1935-ல் பிஹாரிலிருந்து ஒடிசா மாநிலம் உருவாக்கிப் பிரிக்கப்பட்டது.
2000-ம் ஆண்டில் பிஹார் மீண்டும் பிரிக்கப்பட்டுப் புதிய ஜார்கண்ட் மாநிலம் உருவானது.
சம்பரன் சத்தியாகிரகம்
பிஹாரில் ஆங்கிலேயர்கள் விதித்த கட்டுப்பாடுகள் விவசாயிகளைக் கடுமையாகப் பாதித்தன. இதைக் கண்டித்து காந்தி களமிறங்கினார். போராட்டம் நடத்தினார். கைது செய்யப்பட்டார். இதையடுத்து விவசாயிகளின் தேவைகளை அறிய விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டது. நவீன இந்தியாவில் அஹிம்சை வழி போராட்டம் வெற்றி பெற்ற முதல் நிகழ்வு இதுதான்.
முதல் குடியரசுத் தலைவர்
1946 ஏப்ரல் 2-ம் தேதி முதல் பிஹார் மாநில அரசு அமைந்தது. இருப்பினும் முதல் அமைச்சரவை செயல்படத் தொடங்கியது 1947 சுதந்திர இந்தியாவில்தான். பிஹாரின் ராஜேந்திர பிரசாத் முதல் குடியரசு தலைவரானார்.
மக்கள் தொகை 10.38 கோடி. எழுத்தறிவு பெற்றோர் 63.82 சதவீதம். ஆயிரம் ஆண்களுக்கு 916 பெண்கள் என்ற பாலின விகிதாச்சாரம் நிலவுகிறது.
இந்தியும் உருதுவும் அலுவல் மொழி. இது தவிரகள் போஜ்புரி, மைதிலி, மகாஹி, பாஜிக்கா, அங்கிகா ஆகிய மொழிகள் புழக்கத்தில் உள்ளன. இதில் மைதிலி மொழியை மட்டும் இந்திய அரசு அங்கீகரித்துள்ளது.
முதுகெலும்பு
விவசாயம் மாநிலத்தின் முதுகெலும்பு. நாட்டிலேயே அதிக அளவாக, அதாவது 81 சதவீதம் பேர் வேளாண்மையைச் சார்ந்துள்ளனர். மாநில உள்நாட்டு உற்பத்தியில் 42 சதவீதத்தை வேளாண்மையே நிரப்புகிறது. நெல், கோதுமை முதன்மை பயிர்களாக உள்ளன. சோளம், எண்ணை வித்துகள், கரும்பு, உருளை மற்றும் வெங்காய விளைச்சலும் அமோகமாக இருக்கிறது. இதுதவிர மைக்கா, சுண்ணாம்புக்கல், இரும்பு, பைரைட்ஸ் உள்ளிட்ட தாது வளங்களைக் கொண்டது பிஹார்.
பிஹாரின் முக்கியமான நதி கங்கைதான். சரயு, காங்டாக், பூதி காங்கடாக், பாக்மாதி, காம்லா-பாலன், மகாநந்தா, சோன், உத்தாரி கோயல், புன்புன், பன்சானே மற்றும் கார்மனஷா ஆகிய 10-க்கும் மேற்பட்ட நதிகள் கங்கையில் கலக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT