Published : 15 Sep 2015 12:22 PM
Last Updated : 15 Sep 2015 12:22 PM
ஒரு வாசகர் “Lead என்பது உலோகமா அல்லது வழிநடத்துவதா அல்லது பென்சிலில் இருப்பதா? led என்பது என்ன?’’ என்கிறார்.
முதலில் ஒரு சின்ன விளக்கம். பென்சிலில் இருப்பதை நாம் lead என்று வழக்கத்தில் குறிப்பிட்டாலும் அது கார்பனின் ஒரு வடிவமான கிராபைட். எனவே, அதை விடுத்து மீதியைப் பார்க்கலாம்.
Lead என்பது ஒரு உலோகத்தைக் குறிக்கிறது. ஈகாரீயம். அந்த விதத்தில் lead என்பது nounஆகப் பயன்படுத்தப்படுகிறது.
Lead என்பது verb-ஆகப் பயன்படும் போது அதன் அர்த்தம் வேறு. வழி நடத்துவது. He leads the team. ஆக lead இங்கு present tense- ல் பயன்படுத்தப்படுகிறது.
Lead என்ற verb- ன் past tense தான் led. (உச்சரிக்கும்போது ‘லீட்’ (lead) என்று present tense-லும், ‘லெட்’ (led) என்று past tense- லும் குறிப்பிடுவோம்).
உலோகத்தைப் பொறுத்தவரை அதை லெட் (lead) என்றே உச்சரிக்கிறோம்.
வாசகருக்கு ஏன் இந்தக் குழப்பம் உண்டாகியிருக்கக் கூடும் என்று யோசித்தேன். read நினைவுக்கு வந்தது. இதன் Present tense- ஐ ‘ரீட்’ என்றும் Past tense- ஐ ‘ரெட்’ என்றும் உச்சரித்தாலும் இரண்டின் எழுத்துகளும் ஒன்றுதான் read. ஆனால், இந்த அடிப்படை lead- க்குப் பொருந்துவதில்லை.
ஹோமோகிராப்ஸ்
இந்த இடத்தில் homographs பற்றி சொல்லத் தோன்றுகிறது.
இரண்டு (அல்லது அதற்கும் மேற்பட்ட) வார்த்தைகள். இரண்டின் எழுத்துகளும் ஒன்றேதான். ஆனால், இரண்டின் அர்த்தங்களும் வெவ்வேறு. இப்படிப்பட்ட வார்த்தைகளை ஹோமோகிராப்ஸ் (Homographs) என்கிறார்கள். இதோ, எடுத்துக்காட்டாக சில வார்த்தைகள்:-
Back என்ற வார்த்தை ‘பின்னால்’ என்பதைக் குறிக்கிறது. முதுகு என்பதையும் குறிக்கிறது. எனவே, இந்த இருவேறு அர்த்தங்களைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் Back, Back ஆகியன Homographs.
Bank என்பது வங்கி, கரை. Bar என்பது வழக்கறிஞர்களின் அமைப்பு அல்லது மது விடுதி. Novel என்பது ‘புதினம்’ மற்றும் ‘புதியது’. Compound என்பது சுற்றுச் சுவர் மற்றும் கலவை. இவற்றில் சில வார்த்தைகளுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு அர்த்தங்களையும் தவிர பிற அர்த்தங்களும் உண்டு.
இந்த வாக்கியங்கள் எப்படி?
Don't desert me here in the desert!
How can I intimate this to my most intimate friend?
ஒரு சாரார் Homographs என்பவை இவை மட்டுமல்ல. அதாவது ஒரே எழுத்துகள் கொண்ட, ஆனால் இருவேறு அர்த்தங்கள் கொண்டவை மட்டுமல்ல, அந்த இரண்டு வார்த்தைகளும் இருவேறு விதங்களில் உச்சரிக்கப்படுவதாகவும் இருக்க வேண்டும் என்கிறார்கள். இந்தக் கோணத்தில் பார்த்தால் கீழே உள்ள வார்த்தைகளை Homographs எனலாம்.
Minute என்ற வார்த்தை நொடி என்பதையும், மிகச் சிறிய என்பதையும் குறிக்கிறது. ஆனால், இந்த இரண்டு அர்த்தங்களிலும் பயன்படுத்தப்படும்போது உச்சரிப்புகளும் மாறுபடுகின்றன. ‘மினிட்’ என உச்சரித்தால் நொடி. ‘மைன்யூட்’ என்று உச்சரித்தால் மிகச் சிறிய என்று அர்த்தம்.
Object என்ற வார்த்தையை ‘அப்ஜெக்ட்’ என்று உச்சரித்தால் மறுத்தல் என்று பொருள். ‘ஆப்ஜெக்ட்’ என்று உச்சரித்தால் பொருள் என்று அர்த்தம்.
Resent என்ற வார்த்தையை ‘ரீ-ஸென்ட்’ என்று உச்சரித்தால் மீண்டும் அனுப்பப்பட்டது என்று பொருள். ‘ரிஸென்ட்’ என்று உச்சரித்தால் மறுப்பு அல்லது கோபம் கலந்த மனவருத்தம் என்று அர்த்தம்.
Converse என்ற வார்த்தையை ‘கன்வர்ஸ்’ என்று உச்சரித்தால் உரையாடுதல் என்று பொருள். ‘கான்வர்ஸ்’ என்று உச்சரித்தால் நேரெதிராக என்று அர்த்தம்.
இந்த வாக்கியங்களில் உள்ள குறிப்பிட்ட (object, wound) வார்த்தை வித்தியாசமான உச்சரிப்புகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
I did not object to the object.
The bandage was wound around the wound.
* * * * *
“Politicians bemuse me. They act like clowns” என்றார் ஒரு நண்பர். அவர் தவறான அர்த்தத்தில் bemused என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறாரோ என்று சந்தேகம் வந்தது. கேட்டேன். என் சந்தேகம் உண்மைதான். Bemused என்றால் உற்சாகப்படுத்துவது அல்லது களிக்க வைப்பது என்ற அர்த்தம் இல்லை. புதிராக அல்லது குழப்பமாக இருக்கிறது என்றுதான் அர்த்தம். Puzzle, bewilder, confuse எனலாம். This situation bemuses me என்றால் இந்தச் சூழல் உங்களுக்குத் திகைப்பை அளிக்கிறது என்றுதான் அர்த்தம்.
SQUARE
Square என்றால் சதுரம் என்பது தெரியும். Squarely என்றால்? ‘சதுர வடிவில் உள்ள’ என்பது மட்டுமே இதற்கு அர்த்தம் அல்ல. வேறு சில கோணங்களிலும் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.
The policeman walked squarely towards the culprit and arrested him. இந்த வாக்கியத்தில் squarely என்பது ‘நேரே’ என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
‘நேரடியான’ என்ற அர்த்தமும் இந்த வார்த்தைக்கு உண்டு. Instead of deviating he spoke squarely on the topic.
Square meals என்றால் திருப்தி தரும் உணவு. He was very poor. He could not eat two square a meals a day.
* * * * *
A)Either of the trainee is suitable.
B) Either of the trainees is suitable.
C)Either of the trainee are suitable.
D)Either of the trainees are suitable.
இவற்றில் எது சரி என்று கேட்கிறார் ஒரு வாசகர். இருவரில் ஒருவர் என்கிற அர்த்தத்தில்தான் either பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே are வராது. இருவரில் ஒருவர் என்பதால் either of the trainees என்பதுதான் சரியானது. (one of the pens, one of the students என்றுதான் குறிப்பிட வேண்டும்).
எனவே, Either of the trainees is suitable என்பதுதான் சரியான வாக்கியம்.
இதற்குப் பதிலாக neither என்று அந்த வாக்கியம் அமைந்திருந்தால்? Neither of the them are suitable எனலாமா? கூடாது. Neither என்பதுகூட ஒருமை அல்ல. (ஜீரோ என்பது பன்மை அல்ல என்கிற அர்த்தத்தில்). எனவே Neither of the trainees is suitable என்பதுதான் சரியானது.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT