Last Updated : 22 Sep, 2015 12:20 PM

 

Published : 22 Sep 2015 12:20 PM
Last Updated : 22 Sep 2015 12:20 PM

அந்த நாள்: சிந்து சமவெளி - தலைவன் இல்லாமல் தழைத்த நாகரிகம்

வரலாறு பலருக்கு வேப்பங்காய். 'அசோகர் மரம் நட்டார், குளம் வெட்டினார்'னு மன்னர்களைப் பத்தியும், வருஷங்களையும் தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ணப் போறோம் என்பதுதான் பலருடைய கேள்வி. நமக்குத் திரும்பத் திரும்பச் சொல்லப்படும் வரலாற்று தகவல்கள் சற்றே புளித்துப்போனவையாக இருக்கலாம். ஆனால், அத்துடன் எல்லா வரலாறும் முடிந்து போவதில்லை. நம்முடைய முன்கதை மிகுந்த சுவாரசியமானது.

சிந்து சமவெளி நாகரிகத்தின் அதிகம் பிரபலமில்லாத சில விஷயங்களை இந்த முறை பார்ப்போம்:

l உலகின் மிக முக்கியமான பண்டைய நதிக்கரை நாகரிகங்களில் சிறப்புகள் பல கொண்டது சிந்து சமவெளி நாகரிகம். சிந்து சமவெளியின் முக்கிய நகரம் மொகஞ்சதாரோ. உள்ளூர் மக்கள் வைத்த இந்தப் பெயருக்கு, ‘மரணக் குவியல்' என்று அர்த்தம்.

l பிரிட்டன் ராணுவப் பணியைவிட்டு ஓடிவந்தவர் சார்லஸ் மேசன். 1844-ல் இவர் எழுதிய Narrative of Various Journeys in Balochistan, Afghanistan, and the Punjab என்ற புத்தகத்தில் ஹரப்பா நகரச் சிதிலங்கள் பற்றி முதலில் விவரித்திருந்தார். உள்ளூர் மக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் மண்ணுக்கு அடியில் இருக்கும் ‘40 கி.மீ. தொலைவுள்ள' பண்டைய நகரமான ஹரப்பா பற்றி அவர் எழுதியிருந்தார். இவருடைய உண்மை பெயர் ஜேம்ஸ் லூயி என்பது கொசுறு செய்தி.

l ஆனால், கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்குப் பிறகே முறைப்படியான அகழ்வாராய்ச்சி அப்பகுதியில் நடைபெற்றது. இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராக இருந்த சர் ஜான் ஹியூபர்ட் மார்ஷல் தலைமையில் 1921-ம் ஆண்டில் சிந்து பகுதியில் அகழ்வாராய்ச்சி தொடங்கியது. மொகஞ்சதாரோ, ஹரப்பா பண்டைய நகரங்கள் அப்போதுதான் உலகின் வெளிச்சத்துக்கு வந்தன.

l சிந்து நதி பாய்ந்த சமவெளியை ஒட்டி ஆயிரக்கணக்கான ஊர்களில் நாகரிகம் தழைத்திருந்தது. முக்கிய நகரங்கள்: மொகஞ்சதாரோ, ஹரப்பா (இரண்டும் பாகிஸ்தானில் உள்ளன), தோலாவிரா, லோத்தல் (இரண்டும் குஜராத் மாநிலத்தில் உள்ளன).

l நைல் நதி நாகரிகமும், மெசபடோமிய நாகரிகமும் சிந்து சமவெளி நாகரிகத்தின் சமகாலத்தவை. மூன்றும் நதிக்கரை நாகரிகங்கள். இவற்றுக்கிடையே வாணிபமும் நடைபெற்றிருக்கிறது.

l அதேநேரம், நைல் நதி நாகரிகத்தைவிடவும் சிந்து சமவெளி நாகரிகம் பெரிது.

l சிந்து சமவெளி நாகரிகத்தின் காலம், வெண்கலக் காலம். சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன். அது கி.மு. 3300-லிருந்து கி.மு. 1700 வரையானதாக இருக்கலாம்.

l இந்த நாகரிகத்தின் மொத்தப் பரப்பு சுமார் 10 லட்சம் சதுர கி.மீ.

l சிந்து சமவெளியில் இருந்த மக்களின் எண்ணிக்கை தோராயமாக 10 முதல் 50 லட்சம்.

l இந்தப் பகுதியை அரசர் ஒருவர் ஆண்டது போலத் தெரியவில்லை. பொது மக்கள் சபை ஆட்சி செய்திருக்கலாம்.

l இங்கே நாணயமுறை எதுவும் கண்டறியப்படாததால், ‘பண்ட மாற்று முறை' பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்.

l நட்சத்திரங்களைத் திசை காட்டும் கருவியாகப் பயன்படுத்தி, இந்த நாகரிக மக்கள் திசைகளைக் கண்டறிந்தனர்.

l மொகஞ்சதாரோவில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்கூட இருந்துள்ளது.

l இந்த நாகரிகத்தின் சில ஊர்கள் வெள்ளத்தில் மூழ்கியோ, பஞ்சத்தாலோ அழிந்திருக்கலாம். ஆரியர்கள் எனப்படுகிற இனக்குழுவின் படையெடுப்பால் அழிந்திருக்கலாம் என்கிறது பிரிட்டன் தொல்லியல் ஆராய்ச்சியாளர் சர் மார்டைமர் வீலரின் ஆய்வு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x