Published : 25 Aug 2015 11:56 AM
Last Updated : 25 Aug 2015 11:56 AM
சுதந்திரக் கொண்டாட்டம்
இந்தியாவின் 69-வது சுதந்திர தின விழா கோலாகலமாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டை யில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். 125 கோடி இந்தியர்களும் ஓரணியாகச் செயல்பட்டு நாட்டை மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு மோடி அழைப்பு விடுத்தார்.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) திட்ட இயக்குநர் என்.வளர்மதிக்கு இவ்வாண்டு புதிதாக அறிவிக்கப்பட்ட டாக்டர் அப்துல் கலாம் விருதினை ஜெயலலிதா வழங்கினார்.
சரித்திரம் படைத்த சாய்னா
உலகப் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் வெள்ளிப் பதக்கம் பெற்றுப் புதிய சரித்திரம் படைத்தார். இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்று வந்த இந்தப் போட்டியில், ஆகஸ்ட் 16 அன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில், உலகின் 2-ம் நிலை வீராங்கனையான சாய்னாவும், உலகின் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கரோலினா மரினும் சந்தித்தனர். இந்தப் போட்டியில் 16-21, 19-21 என்ற நேர் செட்களில் கரோலினாவிடம் சாய்னா தோல்வி கண்டார். வெற்றி பெற்ற கரோலினா சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்தார். உலகப் பாட்மிண்டன் போட்டியில் சாய்னாவின் மூலம் இந்தியாவுக்கு 5-வது பதக்கம் கிடைத்துள்ளது. உலகப் பாட்மிண்டன் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் பிரகாஷ் படுகோன் ஆவார். அவர் 1983-ல் வெண்கலம் வென்றார்.
மீண்டும் பிரதமரான ரணில்
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் ஆகஸ்ட் 17 அன்று அமைதியாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 70 சதவீதம் வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன. இதில் ரணில் விக்கிரமசிங்கே தலையிலான நல்லாட்சிக்கான ஐக்கியத் தேசிய முன்னணி 106 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், அறுதிப் பெரும்பான்மை பெறத் தவறியது.
அதிபர் மைத்ரிபால சிறிசேனா தலைமையினான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 95 இடங்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களையும் கைப்பற்றின. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ரணில் விக்கிரமசிங்கேவும், மைத்ரிபால சிறிசேனாவும் இணைந்து தேசிய அரசை அமைக்க முன்வந்தனர். இதையடுத்து ரணில் விக்கிரமசிங்கே ஆகஸ்ட் 21 அன்று பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றுப் பிரதமராக முயற்சி செய்த முன்னாள் அதிபர் ராஜபக்சவின் எண்ணம் நிறைவேறாமல் போனது.
மங்கள்யான் தந்த பரிசு
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இருந்து 3டி எனப்படும் முப்பரிமாணப் படங்களை ஆகஸ்ட் 18 அன்று அனுப்பியது. அந்தப் படங்களை இஸ்ரோ வெளியிட்டுத் தன் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்டது. மங்கள்யான் விண்கலத்தால் இப்படங்கள் கடந்த ஜூலை 19-ம் தேதி எடுக்கப்பட்டவை. படங்களில் செவ்வாய் கிரகத்தில் பள்ளத்தாக்கு இருப்பது தெரிய வந்தது. செவ்வாய் கிரகத்திலிருந்து சுமார் 1,857 கி.மீ. உயரத்தில் நின்று இந்தப் படத்தை மங்கள்யான் படம்பிடித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பரில் செவ்வாய் கிரகத்துக்கு மங்கள்யானை இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
புதிய தலைவர்
ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக அஷ்வணி லொஹாணி ஆகஸ்ட் 20 அன்று நியமிக்கப் பட்டார். இதற்கு முன் தலைவராக இருந்த ரோகி நந்தனின் பதவிக்காலம் ஆகஸ்ட் 21-ம் தேதியுடன் முடிந்ததையடுத்து இப்பொறுப்புக்கு அவர் நியமிக்கப்பட்டார். மத்திய அமைச்ச ரவையின் பணியாளர் நியமனக் குழு இந்த நியமனத்துக்கு ஒப்புதல் அளித்தது. இந்தப் புதிய பொறுப்பில் அஷ்வணி லொஹாணி மூன்று ஆண்டுகாலம் நீடிப்பார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT