Published : 05 May 2014 01:32 PM
Last Updated : 05 May 2014 01:32 PM
பிரெஞ்சில் வெளிவந்து இப்போது ஐரோப்பா முழுவதுமே கவனம்பெற்று வரும் படம் சோன் ஈபூஸ் (Son Epouse). குறிப்பாக இதில் முக்கியப் பாத்திரம் ஏற்றிருக்கும் ஜானகி என்னும் தமிழ்ப் பெண்ணின் நடிப்பு திரை விமர்சகர்கள் பலராலும் பாராட்டப்பட்டுவருகிறது. ‘தமிழ்ப் புதுமுக நடிகை ஜானகியின் நடிப்பாற்றால் வலுவானதாகவும் உணர்ச்சிபூர்வமானதாகவும் வெளிப்பட்டுள்ளது’ என ஹாலிவுட் ரிப்போர்ட்டர் பத்திரிகை பாராட்டியுள்ளது. பிரெஞ்சு ரசிகர்களும் வரவேற்புகளைத் தந்துள்ளனர். கலைகளின் தலைநகரான பாரீசில் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் வெளிவந்து விமர்சகர்களின் கவனம் பெற்ற ‘மாலினி 22 பாளையங்கோட்டை” படத்திலும் ஜானகியின் நடிப்பு, பாராட்டை வாங்கிக் குவித்தது. மட்டுமல்ல, இவர் தில்லி தேசிய நாடகப் பள்ளியில் பயின்ற அனுபவம் உள்ளவர். பிரளயன், மங்கை போன்ற நவீன நாடக ஆளுமைகளுடன் இணைந்து பணியாற்றிவருபவர்.
இத்துணை புகழுக்குரிய ஜானகி, இந்தியாவின் தென்கோடி முனையில் உள்ள தேவசகாயம் மெளண்ட் என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர். நாகர்கோயிலுக்கு அருகில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ள இந்தக் கிராம மக்களின் முக்கிய வாழ்வாதாரம் விவசாயம். ஆனால் ஜானகியின் குடும்பம் விவசாயத்தைச் சார்ந்ததல்ல. அப்பா, அருகில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் கூலியாகப் பணியாற்றி வந்தார். அம்மாவுக்கு அருகில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் சத்துணவு சமைக்கும் பணி. மிகக் குறைந்த வருவாயில்தான் குடும்ப ஜீவிதம். ஜானகியின் பெற்றோருக்கு ஜானகியோடு மூன்று மகள்கள் ஒரு மகன். நால்வரும் ஜானகிக்கு மூத்தவர்கள். பள்ளிக் கல்வியை மட்டும் தரக் கூடிய பொருளாதாரச் சூழலில் ஜானகியைத் தவிர மற்ற நால்வரும் பள்ளிக் கல்வியை மட்டுமே முடித்துள்ளனர்.
ஜானகியும் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு வருமானம் கருதி வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். திருமணமாகிவிட்ட மூத்த சகோதரி ஒருவரின் பிரசவச் செலவுக்குப் பணம் தேவைப்பட்டது.
தெளிவான முடிவு
அக்காக்களைப் போல அருகில் உள்ள தறி ஒன்றில் நெசவுப் பணிக்குச் செல்ல பெற்றோர் பணித்தனர். “எனக்கு எல்லோரையும் போல நெசவுப் பணிக்குப் போக விருப்பமில்லை. அதே சமயம் அப்போதைக்குப் பணம் அவசியத் தேவையாக இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் நான் வேறொரு முடிவை எடுத்தேன்” என்கிறார் ஜானகி. அவர் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினர் நடத்தி வந்த நாட்டுப்புறக் கலைக் குழுவில் சேர்ந்தார். இந்தக் கலைக் குழுவில் பணியாற்ற ஊதியம் கிடைக்கும் என்பதால் வீட்டுக்குத் தேவையான பணமும் கிடைத்தது. பள்ளிப் பருவத்திலேயே ஜானகிக்குள் இருந்த தனித்த ஆளுமையாலும் கலைத் திறனாலும் அவர் இந்த முடிவை எடுத்தார்.
அங்கு அவர் கும்மி, கரகம், ஒயிலாட்டம் உட்பட கிட்டதட்ட 25 நாட்டார் கலைகளைக் கற்றுத் தேர்ந்தார். இந்தக் கலைக் குழுவில் ஜானகி 3 வருடம் இருந்தார். பிறகு நாகர்கோயிலில் இயங்கிவந்த சமூக கலைக் குழுவான முரசில் இணைந்தார். முன்பிருந்த கலைக்குழுவில் இருந்து இது முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. ஆனால் இந்தக் குழுவில் யாருக்கும் ஊதியம் இல்லை.
தேசிய நாடகப்பள்ளி வாய்ப்பு
பொதுவுடைமைச் சமூகம்போல் எல்லோரும் கூடி வாழ்ந்துள்ளனர். ஒரே இடத்தில் தங்கி, கிடைக்கும் வருமானத்தைச் சரியாகப் பங்கிட்டுத் தங்கள் தேவைகளை நிறைவேற்றியுள்ளனர். முரசுக் கலைக் குழுவில் இருந்தபடியே தொலைதூரக் கல்வி மூலமாகப் பட்டப் படிப்பையும் முடித்தார். இங்குதான் ஜானகி நாடகம் என்னும் ஊடகத்தின் ஆற்றலை முழுமையாக உணர்ந்துள்ளார். நவீன நாடகப் பரிச்சயமும் அவரைக் கூர்மையாக்கியது. பழைய நாடக பாணிகளில் நவீன நாடகத்தின் கூறுகளைப் புகுத்திப் பார்த்தார், “என்னுடைய நாடக அனுபவத்தில் எளிமையான நாடகங்களையே மக்கள் விரும்புகிறார்கள். அதனால் முற்றிலும் நவீன பாணி நாடகங்கள் ஏற்புடையவை அல்ல என்றே நினைக்கிறேன். ஆனால் நவீன நாடகத்தின் கூறுகளை எடுத்துக்கொள்ளலாம். இதுதான் என் பாணி” என்கிறார் ஜானகி.
இந்தச் சமயத்தில் தேசிய நாடகப் பள்ளி, மாணவர்களுக்கான குறுகிய காலப் பயிற்சித் திட்டத்தை அறிவித்தது. மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்காகத் தேசிய நாடகப் பள்ளியைச் சேர்ந்த தேர்வுக் குழுவினர் நாகர்கோயில் இந்துக் கல்லூரிக்கு வந்தனர். ஜானகியும் அதைக் கேள்விப்பட்டுத் தேர்வுக்குச் சென்றார். ஆனால் கல்லூரி மாணவர் அல்ல என்பதால் அவர் நிராகரிக்கப்படும் சூழல் இருந்தது. இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட ஆற்றலும் தன்னம்பிக்கையும் அற்புதங்களை நிகழ்த்தும் என்பது ஜானகி விஷயத்தில் நிரூபணமானது. அவர் தேசிய நாடகப் பள்ளியின் பயிற்சித் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பயிற்சி முடித்த கையோடு தில்லி தேசிய நாடகப் பள்ளியிலேயே மூன்று வருடப் பட்டயப் படிப்பு படிக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. தமிழ்நாட்டில் இருந்து விரல் விட்டு எண்ணக்கூடியவரே இந்தப் படிப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஜானகிதான் தமிழ்நாட்டில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் பெண் என்றும் சொல்லப்படுகிறது. அந்த மூன்றாண்டுப் படிப்பில் அவர் இந்தியா முழுவதும் பயணித்துள்ளார். நாடகங்களை அரங்கேற்றியுள்ளார். வெவ்வேறு விதமான கலாசாரப் பின்னணி, பிரச்சினைகள் எல்லாமும் அவரது சமூகப் புரிதலை விரிவாக்கியது. இந்தப் புரிதலால் அவரது நடிப்பு, பேராற்றலைப் பெற்றது. பல நவீன நாடகங்களில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இந்த அடையாளம்தான் ஜானகிக்கு சோன் ஈபூஸ் பிரெஞ்சுப் படத்தில் நடிக்கும் அரிய வாய்ப்பைத் தந்தது.
தமிழ்ப் பெண் கதாபாத்திரத்தை மையப்படுத்திய இந்தப் படத்தின் உதவி இயக்குநரான ப்ரேமா ரேவதி, ஜானகியை அதற்குப் பொருத்தமானவராகக் கருதினார். நடிகை தேர்வுக்கு அழைக்கப்பட்டார். அது ஜானகிக்குப் பெரிய சவாலாக இருக்கவில்லை. ஆனாலும் தேர்ந்தெடுக்கப்பட்டது ஜானகிக்கு இன்ப அதிர்ச்சியாகத் தான் இருந்தது. “அதைத் தொடர்ந்து மாலினி 22 பாளையங்கோட்டையில் நடித்தேன். இப்போது இயக்குநர் பாலாஜி சக்திவேலின் படத் தேர்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறேன்” என்கிறார்.
தெருமுனை நாடகங்களில் தன் கலை வாழ்க்கையைத் தொடங்கிய ஜானகிக்கு இன்று பிரெஞ்சு சினிமா, வெள்ளித் திரையில் மேடை அமைத்துத் தந்துள்ளது. மன உறுதியும், வாழ்க்கையை எளிதாகக் கைகொள்ளும் பட்டறிவும் அவருக்கு மேலும் வெற்றிகளைத் தேடித் தரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT