Published : 21 Jul 2015 11:25 AM
Last Updated : 21 Jul 2015 11:25 AM
பள்ளியில் படிக்க வாய்ப்பு இல்லாதவர்களுக்காக மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட திறந்தவெளிப் பள்ளியாக இது நடத்தப்படுகிறது.
எதுவும் படிக்காதவர்களும் பள்ளிப் படிப்பை இதில் படிக்கலாம். இந்தப் படிப்புமுறையில் இரண்டு கட்டங்கள் உள்ளன. மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு இணையானதாக முதல் கட்டம் உள்ளது. இது அடிப்படைக் கல்வி எனப்படுகிறது. அடுத்ததாக, 10- ம் வகுப்பு மற்றும் 12- ம் வகுப்புக்கு இணையான வகுப்புகள் உள்ளன. இவற்றில் தொழில்முறைப் படிப்புகளும் உள்ளன.
இந்த வகுப்புகளுக்குத் தேர்வு நடத்தித் தரப்படுகிற சான்றிதழ்கள் மாநில அரசுகள் அளிக்கிற அதே வகுப்பு பள்ளிச் சான்றிதழ்களுக்கு இணையானவை.
தேசியப் பள்ளியில் நூறு சதவீதம் ஆன்லைனில்தான் சேர்க்கை நடைபெறுகிறது. ஒரு முறை அளிக்கப்படும் சேர்க்கை ஐந்தாண்டு காலத்துக்குச் செல்லுபடியாகும்.
10-ம் வகுப்புக்கு நேரடியாகச் சேர்க்கை அளிக்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு தேறிய 14 வயது நிரம்பியவர்கள், 10 வரை வேறு ஏதாவது பள்ளிமுறையில் படித்து முடிக்காதவர்கள், பத்தாம் வகுப்பு பாடங்களைப் படித்து முடிக்கும் அளவுக்குப் படித்துள்ளேன் என்று உறுதியளிப்பவர்கள் இதில் சேரலாம்.
ஆனால் 12-ம் வகுப்புக்கு நேரடியாகச் சேர்க்கை கிடையாது. ஆனால், வேறு ஏதாவது பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேர்ந்துகொள்ளலாம். இதில் சேரக் குறைந்தபட்சம் 15 வயது இருக்க வேண்டும்.
10- ம் வகுப்பு சேர்பவர்கள் ஆங்கிலம், இந்தி, உருது, மராத்தி, தெலுங்கு, குஜராத்தி, மலையாளம், ஒடிசா ஆகிய எட்டு மொழிகளின் வழியாகப் படிக்கலாம். தற்போது தமிழில் படிக்க இயலாது. 12-ம் வகுப்பு படிப்பவர்கள் தற்போது ஆங்கிலம்,இந்தி, வங்காளம், உருது ஆகிய மொழிகளில் மட்டுமே படிக்க முடியும்.
10-ம் வகுப்புக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள 26 விதமான பாடங்களில் ஏதேனும் ஏழு விருப்பப் பாடங்களை எடுத்துக்கொள்ளலாம். அதில் தமிழ் உள்ளிட்ட 16 மொழிப் பாடங்கள். மீதமுள்ளவை கணிதம் உள்ளிட்ட அறிவியல் பாடங்களும் உளவியலும் ஓவியமும் கணினியில் தகவல்களை உள்ளீடு செய்யும் டேட்டா எண்ட்ரியும் உள்ளன. 12-ம் வகுப்புக்கும் இதேபோன்ற பாடங்கள் உள்ளன.
தொழிற்முறைப் பாடங்களையும் இணைத்தே பயிலலாம்.
10-ம் வகுப்பில் தேர்ச்சிபெற ஒருவர் அதிகபட்சம், இரண்டு மொழிப் பாடங்கள் உள்ளிட்டு ஐந்து பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும்.
வேறு பள்ளி முறைகளில் 10-ம் வகுப்பு மற்றும் 12- ஆம் வகுப்பு முடித்தவர்கள்கூட இந்தத் திறந்தநிலைப் பள்ளியில் சேர்ந்து படிக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு மதிப்பெண்கள் பட்டியல் மட்டும் தரப்படுகிறது.
நூறு சதவீதம் ஆன்லைன் சேர்க்கையும் ஆங்கிலவழியில் தான் தமிழக மாணவர்கள் படிக்க முடியும் என்பதும் தற்போது சிலருக்குக் கடினமானதாக இருக்கலாம். ஆன்லைன் சேர்க்கைக்கு உதவும் மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்வழிக் கல்விக்கான முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் கிடைக்கின்றன. எனவே, தமிழகத்தின் கல்விப் பசிக்கு இந்த திறந்தநிலைப் பள்ளியும் உதவத்தான் செய்யும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT