Last Updated : 07 Jul, 2015 11:23 AM

 

Published : 07 Jul 2015 11:23 AM
Last Updated : 07 Jul 2015 11:23 AM

உங்களுக்கான பொறியியல் பாடம்

எல்லோரும் பொறியியல் படிக்க விரும்பலாம். ஆனால், பொதுவாக, பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களை இரண்டு வகையினராகப் பிரிக்கலாம்.

முதல் வகையானவர்கள் செயல்பாடு சார்ந்த நுண் அறிவு உள்ளவர்கள். அவர்களிடம் ஒரு கடிகாரத்தையோ, ஒரு இயந்திரத்தையோ கொடுத்தால், தனித் தனியாகப் பிரிப்பார்கள். மீண்டும் அவற்றை ஒன்றுசேர்ப்பார்கள். அத்தகையவர்கள் மெக்கானிக்கல், சிவில், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்கல் போன்ற பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

இரண்டாம் வகை மாணவர்கள் கருத்தியல் சார்ந்த நுண் அறிவு உள்ளவர்கள். இத்தகையவர்கள் தர்க்கரீதியான சிந்தனையும், அதிகக் கணித ஆர்வமும் கொண்டவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட மாணவர்கள் தகவல்தொழி்ல்நுட்பம், கணினி அறிவியல் போன்ற பாடப்பிரிவுகளுக்கு முக்கியத்துவம் தரலாம்.

இந்த இரண்டில் நாம் எந்த வகை என்பதனை நமக்கு நாமே கண்டறிந்து அதற்கேற்ற பாடங்களை மாணவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

கணினி அறிவு தேவை

மெக்கானிக்கல், சிவில் மற்றும் எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்கல் போன்ற அடிப்படையான பொறியியல் படிப்புகளுக்கு எப்போதும் ஒரே சீரான முறையில் தேவையிருக்கிறது. தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் போன்ற படிப்புகளுக்கான தேவை திடீரென உச்சக்கட்டத்துக்குப் போகிறது. இவற்றில் எதைத் தேர்ந்தெடுக்கலாம் என்று மாணவர்கள் முடிவு செய்துகொள்ள வேண்டும்.

பாடப் பிரிவினையைத் தேர்ந்தெடுக்கும் போது, பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கவலை கல்லூரி வளாகத்திலேயே பெரிய நிறுவனங்கள் வந்து வேலை வாய்ப்பு வழங்குமா என்பதுதான்.

பெரும்பாலும் ஐ.டி. எனப்படும் தகவல் தொடர்புத் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள்தான் பெரும்பாலும் கல்லூரி வளாக நேர்காணல்களை நடத்தி மாணவர்களை வேலைக்கு எடுத்துக்கொள்கின்றன. ஓரளவுக்குக் கணினி அறிவும், தர்க்கரீதியான சிந்தனையும், ஆங்கில மொழிப்புலமையும் இந்தத் துறைக்குப் போதுமானதாக உள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியும் அந்த நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.

இன்று எந்தப் பொறியியல் பாடப்பிரிவினை எடுத்துப் படித்தாலும் ஒரு ஐ.டி. நிறுவனத்துக்குச் செல்லும் அளவுக்குத் தேவையான கணினி அறிவு கிடைத்துவிடும். ஆகையால் ஒரு குறிப்பிட்ட பாடத்தைப் படித்தால் மட்டும்தான் கல்லூரி வளாகத் தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்படுவோம் என்று நினைக்கத் தேவையில்லை.

தேவை விருப்பத் தேர்வுகள்

பாடப்பிரிவைத் தேர்ந்தெடுக்கும்போது ஒன்று, இரண்டு, மூன்று என்று தங்களின் விருப்பங்களில் சில சாய்ஸ் வைத்துக்கொள்வது நல்லது. உதாரணமாக, தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல் போன்ற பாடத்திட்டத்தைப் பொறுத்தவரை ஏறக்குறைய 80 சதவீதம் ஒன்றாகவே இருக்கும். ஆகவே, தகவல் தொழில்நுட்பத்தை முதல் வாய்ப்பாக வைத்திருக்கும் மாணவர்கள், அதற்கு இணையான கணினி அறிவியலை இரண்டாம் வாய்ப்பாக வைத்துக்கொள்வது நலம்.

அதேபோன்று எலெக்ட்ரிக்கல் மற்றும் கணினி, பொறியியல், மற்றும் எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல், ஆகிய பாடப்பிரிவுகளை ஒப்பிட்டுப்பார்த்தால் கிட்டத்தட்ட 50 சதவீதம் ஒன்றாகவே இருக்கும். ஆகவே எலெக்ட்ரிக்கல் மற்றும் கணினி பொறியியல் முதல் வாய்ப்பாக இருந்தால் எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியல் இரண்டாவது வாய்ப்பாகத் தேர்ந்தெடுப்பது நன்று.

கல்லூரி வளாக நேர்காணல்களையும் தாண்டி உயர்கல்விக்கும், மிக முக்கியமான நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைத் தரக்கூடிய பாடப்பிரிவாகத் தேர்ந்தெடுப்பது எப்போதும் நல்லது.

நல்ல கல்லூரி

பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்த பிறகு ஒரு சிறந்த கல்லூரியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சிறந்த கல்லூரியைத் தேர்ந்தெடுப்பது என்பது பொறியியல் படிப்பில் பாதியை வெற்றிகரமாக முடிப்பதற்குச் சமமாகும்.

சிறந்த கல்லூரியைத் தேர்ந்தெடுக்கும்போது மாணவர்கள் முக்கியமாகப் பார்க்க வேண்டியவை.

கடந்த சில ஆண்டுகளில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள கல்லூரிகளுக்கான தரவரிசையில் அந்தக் கல்லூரியின் இடம்.

கல்லூரி வளாகத் தேர்வில், அந்தக் கல்லூரியில் படித்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம்.

கல்லூரியின் உள்கட்டமைப்பானது வகுப்பறைகள், ஆய்வகம் மட்டுமல்ல, திறமையான ஆசிரியர்களும் என்ற புரிதல் இருக்க வேண்டும்.

மதிப்பெண்களை வாங்கவைப்பது மட்டுமல்லாமல், மாணவர்களின் தனித்திறனுக்கும், படைப்பாற்றலுக்கும் வாய்ப்பளித்து, அவர்களின் பன்முகத்தன்மையை வளர்த்தெடுக்கும் இடமாகவும் இருக்க வேண்டும்.

இவை எல்லாம் சரியாய் அமைந்துவிட்டால் உங்கள் பொறியியல் கனவு நிச்சயம் சிறப்பான முறையில் பலிக்கும்.

தொடர்புக்கு: ravieinstein@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x