Last Updated : 14 Jul, 2015 12:08 PM

 

Published : 14 Jul 2015 12:08 PM
Last Updated : 14 Jul 2015 12:08 PM

சேதி தெரியுமா?

ஆட்சிப் பணிகள் தேர்வு முடிவு

அகில இந்திய அளவில் மத்திய தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்திய நேர்முகத் தேர்வின் முடிவுகள் ஜூலை 4-ம் தேதி வெளியானது. இதில் ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., மத்திய அரசாங்கத்தின் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவுகளில் பணியாற்ற 1,236 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்தத் தேர்வில் முதல் மூன்று இடங்களையும் பெண்களே பிடித்து சாதனை படைத்தனர். இரா சிங்கால் முதல் இடத்தையும், ரேணு ராஜ் இரண்டாம் இடத்தையும், நிதி குப்தா மூன்றாமிடத்தையும் பிடித்தார்கள். தமிழகத்தைச் சேர்ந்த டி.சாரு ஆறாவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார்.

அமைச்சர் அந்தஸ்து

நிதி ஆயோக் துணைத் தலைவராக உள்ள அர்விந்த் பனகாரியாவுக்கு அமைச்சர் அந்தஸ்து வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான தகவல் ஜூலை 5-ம் தேதி வெளியானது. நிதி ஆயோக்கின் மற்ற இரு உறுப்பினர்களுக்கும் மத்திய இணை அமைச்சருக்கு இணையான அந்தஸ்து கொடுக்கப்பட உள்ளது. நிதி ஆயோக் தலைவருக்கு மத்திய அமைச்சருக்கு இணையான அந்தஸ்து கொடுக்கப்பட்டாலும், அவருக்கு அமைச்சரவைச் செயலாளருக்கு இணையான சம்பளமே வழங்கப்படும்.

கிரீஸ் கடனும் வாக்கெடுப்பும்

கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸை கடனில் இருந்து மீட்க ஐரோப்பிய யூனியன், ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வ தேச நிதியம் ஆகியவை பரிந்துரைத்த கடன் மீட்புத் திட்டத்தை அந்நாட்டு மக்கள் நிராகரித்தனர். இது தொடர்பான வாக்கெடுப்பு ஜூலை 5-ம் தேதி நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் 61 சதவீத மக்கள் கடன் மீட்புத் திட்டத்தை எதிர்த்தும், 39 சதவீத மக்கள் கடன் மீட்புத் திட்டத்தை ஆதரித்தும் வாக்களித்திருந்தார்கள். இதன்மூலம் கடனைத் திரும்ப செலுத்துவதற்கான பொருளாதாரக் கட்டுப்பாடுகளையும், சிக்கன நடவடிக்கைகளையும் ஏற்க மாட்டோம் என பிற ஐரோப்பிய நாடுகளுக்கு கிரீஸ் மக்கள் உணர்த்தியுள்ளனர்.

சி.பி.ஐ.க்கு மாறிய வியாபம் வழக்கு

பல மர்ம மரணங்களின் பின்னணியைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தின் ‘வியாபம்' ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி ஜூலை 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ‘வியாபம்' ஊழல் தொடர்பாக இதுவரை 46 பேர் மர்மமாக இறந்ததால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. வியாபம் முறைகேடு வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், வியாபம் ஊழல் வழக்கை சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்து உத்தரவிட்டது. மருத்துவத் துறை நியமனங்களுக்கான தேர்வுகளை ‘வியாபம்' என்ற வாரியம் நடத்தியது. இந்த வாரியத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பது கண்டறியப்பட்டதையடுத்து மர்ம மரணங்களும் ஏற்படத் தொடங்கின.

பாகிஸ்தான் செல்லும் மோடி

ரஷ்யா, உஸ்பெஸ்கிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், கிர்கிஸ்தான் என ஆறு நாடுகளுக்குப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 7-ம் தேதி புறப்பட்டு சென்றார். ரஷ்யாவில் நடக்க உள்ள பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்றார். ரஷ்யாவில் சீனா, பாகிஸ்தான் ஆகிய தலைவர்களையும் மோடி சந்தித்து பேசினார். இந்தச் சந்திப்பின் ஒரு பகுதியாக, 2016-ல் நரேந்திர மோடி பாகிஸ்தானுக்கு வர வேண்டும் எனவும், அங்கு நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் எனவும் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுத்த அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டார்.

விண்ணில் பாய்ந்த ராக்கெட்

பிரிட்டனின் 5 செயற்கைக்கோள்களை சுமந்துகொண்டு பி.எஸ்.எல்.வி-சி 28 ராக்கெட் வெற்றிகரமாக ஜூலை 10-ம் தேதி விண்ணில் சீறிப் பாய்ந்தது. புறப்பட்ட 19-வது நிமிடத்தில் புவியின் சுற்று வட்டப்பாதையிலும் நிலை நிறுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள்கள் பூமியிலிருந்து 120 டிகிரியில் தனித்தனியாகச் சுழன்று வந்து பூமியில் உள்ள மண் வளம் மற்றும் இயற்கை வளங்களை ஆய்வு செய்யும். முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 1,440 கிலோ எடையைக் கொண்ட வெளிநாட்டு செயற்கைக்கோள்களை இஸ்ரோ அனுப்புவது இப்போதுதான் முதல்முறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x