Last Updated : 05 May, 2014 01:45 PM

 

Published : 05 May 2014 01:45 PM
Last Updated : 05 May 2014 01:45 PM

தொப்பி தைக்கக் காப்புரிமை

வெயிலிலிருந்து தற்காத்துக்கொள்ள தலைக்கு மேலே தொப்பிவைக்கும் பழக்கம் நம்மிடையே பரவலாகியுள்ளது. தொப்பி தைப்பதற்கு முதலில் காப்புரிமை பெற்றவர் யாரெனத் தெரியுமா?

அமெரிக்காவில் காப்புரிமைச் சட்டம் 1790-ல் அமலானது. அதன் பின்னர் ஆண்கள் பெண்கள் என வித்தியாசம் இன்றி அனைவரும் காப்புரிமை பெற அந்தச் சட்டம் வழிசெய்தது. ஆனால் தொடக்கத்தில் ஆண்கள் மட்டுமே தங்களது கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகளைப் பெற்று வந்தனர். பெண்களில் அநேகர் தங்களது கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமை பெறுவது பற்றிக் கவலைகொண்டதே இல்லை.

இந்த வழிமுறையை மாற்றினார் மேரி டிக்ஸன் கியெஸ். இவர் அமெரிக்காவின் கனெக்டிகட்டைச் சேர்ந்தவர். நார்களைப் பட்டு அல்லது நூல் ஆகியவற்றுடன் சேர்த்து தொப்பி தைக்கும் வழிமுறையை மேரி கியெஸ் கண்டறிந்தார். 1809-ம் ஆண்டு மே மாதம் 5-ம் நாளன்று தனது கண்டுபிடிப்புக்கான காப்புரிமையை அவர் பெற்றுக்கொண்டார். 1836-ல் காப்புரிமை அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இவரது காப்புரிமைக் கோப்பு எரிந்துவிட்டது மேரியின் துரதிருஷ்டமே.

1840-ம் ஆண்டு வரை அமெரிக்காவில் 20 பெண்கள் மட்டுமே காப்புரிமை பெற்றிருந்தனர். அமெரிக்காவின் தொப்பி உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் வழிமுறையைக் கண்டுபிடித்ததற்காக அப்போதைய அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் மேடிஸனின் மனைவியான டால்லி மேடிஸன் மேரியைப் பாராட்டியுள்ளார்.

தொப்பி தைக்கும் வழிமுறையைக் கண்டறிந்த முதல் பெண்மணி மேரி டிக்ஸன் கியெஸ் அல்ல. 1798-ல் நாரைக் கொண்டு பின்னல் தையல் மூலம் தொப்பி தைக்கும் வழியைக் கண்டுபிடித்தவர் நியூ இங்கிலாந்தைச் சேர்ந்த பெட்ஸி மெட்காஃப் என்பவர். மெட்காஃபின் தொப்பி உருவாக்கும் வழிமுறை அமெரிக்காவில் பிரபலமாக இருந்தது. இவர் தனது தொப்பிகளை உருவாக்குவதற்காகப் பல பெண்களை வேலைக்கு வைத்திருந்தார்.

ஆனால் மெட்காஃப் காப்புரிமை பெறுவதை விரும்பவில்லை. எனவே காப்புரிமை பெறுவதற்காக அவர் விண்ணப்பிக்கவில்லை. இதனிடையே ஐரோப்பியப் பொருட்களை இறக்குமதி செய்ய அதிபர் ஜேம்ஸ் மேடிஸன் தடைவிதித்துவிட்டார். இதனால் மெட்காஃப் காப்புரிமை பெற வழியே இல்லாமல் போயிற்று.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x