Last Updated : 02 Jun, 2015 12:12 PM

 

Published : 02 Jun 2015 12:12 PM
Last Updated : 02 Jun 2015 12:12 PM

சேதி தெரியுமா?

மோடியின் ஓராண்டுப் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி அரசு பதவியேற்று மே 26-ம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனைகளை வெளிப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 5 ஆயிரம் பொதுக்கூட்டங்களுக்குப் பாரதிய ஜனதா கட்சி ஏற்பாடு செய்துள்ளது. கடந்த ஓராண்டில் ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்கியுள்ளதாகப் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ஆனால், பெரும்பாலான எதிர்க்கட்சிகள் மோடியின் ஓராண்டு ஆட்சியை விமர்சனம் செய்தன.

கொளுத்திய சூரியன்

இந்த கோடைகாலத்தில் கொளுத்திய அக்னி வெயில் வட மாநிலங்களைக் கடுமையாகப் பாதித்தது. ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் மே 21 முதல் 27-ம் தேதி வரை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. குறிப்பாக, தெலங்கானாவில் 113 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவானது. வெயிலைத் தாக்குபிடிக்க முடியாமல் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்தார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை மே 26 அன்று சென்னை மற்றும் வேலூரில் அதிகபட்சமாக 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலை பதிவானது.

சென்னையில் இடைத்தேர்தல்

சென்னை ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஜூன் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என மே 26 அன்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஜூன் 30-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் தமிழக முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா போட்டியிடுவார் என மே 29 அன்று அதிமுக தலைமைக் கழகம் அறிவித்தது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அறிவித்துள்ளன.

விவசாயத்துக்குத் தனி சேனல்

மத்திய அரசின் தொலைக்காட்சியான தூர்தர்ஷன் மூலம் மே 26 அன்று டிடி கிசான் சேனல் தொடங்கப்பட்டது. இந்தச் சேனலின் ஒளிபரப்பைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்த சேனல் எல்லா கேபிள் மற்றும் டி.டி.ஹெச். இணைப்புகள் மூலமாகவும் கட்டாயமாகக் காட்ட வேண்டிய சேனலாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டாயமாக ஒளிபரப்பப்பட வேண்டிய சேனல்களின் பட்டியலில் 25வது சேனலாக டிடி கிசான் இடம்பெற்றுள்ளது. 24 மணி நேரமும் விவசாயம், வானிலை, கிராமப்புறம் சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்டினி கிடக்கும் இந்தியர்கள்

இந்தியாவில் 19.4 கோடிப் பேர் போதிய உணவு இன்றி வாடுவதாக மே 28-ம் தேதி வெளியான ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்திய மக்கள் தொகையில் இது 15 சதவீதம். சீனாவைவிடவும் இது அதிகம் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகில் 79 கோடிக்கும் அதிகமானோருக்கு உணவும், ஊட்டச் சத்துமிக்க உணவும் கிடைப்பதில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இத்தகையோரில் ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் மட்டும் 62 சதவீதம் வாழ்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x