Last Updated : 26 May, 2014 11:11 AM

 

Published : 26 May 2014 11:11 AM
Last Updated : 26 May 2014 11:11 AM

கட்டிடங்களை உருவகப்படுத்தும் மென்பொருள் கண்டுபிடித்து சென்னை மாணவன் சாதனை

இல்லாததை இருப்பதுபோல உருவகப்படுத்தும் புதிய மென் பொருளை கண்டுபிடித்து சென்னையைச் சேர்ந்த பிளஸ் -1 மாணவர் சாதனை படைத்துள்ளார். இந்த மென்பொருளைக் கொண்டு ‘வெர்சுவல் ரியாலிட்டி’ என்ற நவீன தொழில்நுட்பத்தில் பிரமாண் டமான கல்லூரிக் கட்டிடத்தை அவர் உருவகப்படுத்தியுள்ளார்.

புதிய கட்டிடத்தைக் கட்ட விரும்புபவர்கள் முதலில் சிவில் இன்ஜினீயரிடம் கூறி அதற்கான வரைபடத்தை வரைவார்கள். பிறகு அந்த வரைபடத்தின்படி கட்டிடம் கட்டும் பணி தொடங்கும். இதுபோல சென்னை தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் புதிய 4 மாடி கட்டிடம் கட்டு வதற்கு அக்கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டது. அந்தக் கட்டிடம் எப்படி இருக்க வேண்டும் என்று தான் மனதில் நினைத்தபடி உருவ கப்படுத்த அந்தக் கல்லூரியின் தாளாளர் அபய்குமார் விரும்பி யுள்ளார்.

இதுகுறித்து கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் கவுர ஆலோசகராக பணியாற்றும் முனைவர் புருஷோத்தமனிடம் அவர் கூறி யுள்ளார். அவர், கம்ப்யூட்டரில் அதிக ஆர்வம் கொண்ட தனது பேரன் ரிஷி ஹரீஷிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். புதிய கட்டிடத்துக்கான 25 வரைபடங்களும், கல்லூரி வளாகத்தில் எடுக்கபட்ட சில புகைப்படங்களும் அவரிடம் கொடுக்கப்பட்டன. இதை வைத்து அவர் கல்லூரிக் கட்டிடத்தை உருவகப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து ‘தி இந்து’ நிருபரிடம் ரிஷி ஹரீஷ் கூறியதாவது:

ஒரு கட்டிடத்தை கட்டி முடித்து உள்ளே சென்று பார்த்தால் எப்படி இருக்குமோ, அப்படியொரு உணர்வு ஏற்படும் வகையில், கல்லூரியின் கட்டிடத்தை உருவகப்படுத்தியுள்ளேன்.

நெதர்லாந்து நாட்டில் டோன் ரோசன்டால் என்பவர் கேளிக்கை விளையாட்டுக்காக உருவாக்கிய ‘பிளண்டர் த்ரீடி’ என்ற இலவச மென்பொருளைப் பயன்படுத்தி. இதனை கம்ப்யூட்டர் திரையில் 12 நிமிடம் பார்க்கலாம். பருந்துப் பார்வையில் தொடங்கி, 4 மாடிக் கட்டிடத்தில் உள்ளே நுழைந்து வகுப்பறைகள், நூலகங்கள், கூட்டஅரங்கம், கேன்டீன் என்று எல்லாவற்றையும் தனித்தனியாக பார்க்க முடியும். ஒவ்வொரு தளத்திலும், ஒவ்வொரு அறையும் எத்தனை சதுர அடியில் இருக்க வேண்டும், கட்டிடத்தின் நாலாபுறத் தோற்றமும் எவ்வாறு அழகுடன் இருக்க வேண்டும் என ஒவ்வொன்றையும் கணித அடிப்படையில் துல்லியமாக உருவகப்படுத்தியுள்ளேன்.

‘பிளண்டர் த்ரீடி’ மென்பொருள் தொழில்நுட்பத்துடன் நான் படித்த அல்ஜிப்ரா, ஜாமட்ரி, டிரிக்னா மெட்ரி, அல்கார்தம், லாக்கர்தம், கால்குலஸ் போன்ற சில விஷயங்களைப் பயன்படுத்தி புதிய மென் பொருளை தயாரித்துள்ளேன். இதைக் கொண்டு வீடு அல்லது எந்தக் கட்டிடத்தையும் தத்ரூபமாக உருவகப்படுத்த முடியும்.

இப்புதிய மென்பொருளை, உயிர்காக்கும் மருத்துவ தொழிலில் குறிப்பாக நோய் கண்டுபிடிப்புக்கு பயன்படுத்துவதற்கான முயற்சியில் எனது தாத்தா புருஷோத்த மனுடன் இணைந்து ஈடுபட்டுள்ளேன்.

இவ்வாறு ரிஷி ஹரீஷ் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x