Last Updated : 23 Jun, 2015 11:33 AM

 

Published : 23 Jun 2015 11:33 AM
Last Updated : 23 Jun 2015 11:33 AM

சேதி தெரியுமா?

நுழைவுத் தேர்வுக்குத் தடை

சி.பி.எஸ்.இ.யால் நடத்தப்பட்ட அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வை ஜூன் 15 அன்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது. மே 3 அன்று நடைபெற்ற நுழைவுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக ஹரியாணா மாநிலக் காவல் துறைக்கு ஆதாரங்களும் கிடைத்தன. தேர்வை எதிர்த்து ஹரியாணாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து, நுழைவுத் தேர்வை ரத்து செய்தது. நான்கு வாரங்களுக்குள் மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

அக்ரமை முந்திய ஹர்பஜன்

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் வாசிம் அக்ரமை இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஜூன் 13 அன்று முந்தினார். இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே பாதுல்லாவில் நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், இம்ருள் கெய்ஸை ஹர்பஜன் வீழ்த்தியதன் மூலம் இந்தச் சாதனையைப் படைத்தார். 102 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்பஜன் 416 விக்கெட்கள் வீழ்த்தி அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறார். 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 414 விக்கெட்கள் எடுத்துள்ள வாசிம் அக்ரம் 10-வது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

தொடரும் அதிரடி

இந்தியச் சந்தையில் விற்கப்படும் அனைத்துப் பாக்கெட் உணவுப் பொருட்களையும் பரிசோதனை செய்ய மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையர்களுக்கு மத்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் ஜூன் 14 அன்று உத்தரவிட்டது. நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாகக் காரீயம் இருப்பது தெரிய வந்ததையடுத்து மேகி நூடுல்ஸின் 9 வகைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இதர பாக்கெட் உணவுப் பொருட்களின் தரம் குறித்து மத்திய உணவுப் பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் டெல்லியில் ஜூன் 13 அன்று சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் அனைத்துப் பாக்கெட் உணவுப் பொருட்களின் மாதிரிகளைச் சேகரித்து அவற்றின் தரம் குறித்துப் பரிசோதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சர்ச்சையைக் கிளப்பிய உதவி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட லலித் மோடி லண்டனில் விசா பெற வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உதவிய விவகாரம் ஜூன் 13 அன்று மத்திய அரசியலில் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரத்தில் சுஷ்மா சுவராஜும், வசுந்தாராவும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. இது மனிதாபிமான உதவி என்று சுஷ்மா விளக்கம் அளித்தார். இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி சுஷ்மாவுக்கும் வசுந்தராவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்தது. இருந்தாலும் இதுதொடர்பான சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை.

அதிபர் கனவு

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிடப் போவதாக ஜெப் புஷ் ஜூன் 15 அன்று அறிவித்தார். அமெரிக்க அதிபராக இருந்த சீனியர் புஷ்ஷின் இரண்டாவது மகனாவார். இவரது அண்ணன் ஜார்ஜ் புஷ்ஷூம் இரண்டு முறை அமெரிக்க அதிபராக இருந்தவர்தான். ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன் ஏற்கெனவே தன்னை வேட்பாளராக அறிவித்துள்ள நிலையில், இப்போது ஜெப் புஷ்ஷூம் தனது விருப்பத்தை அறிவிப்பாக வெளியிட்டுள்ளார்.

அதிர்வை ஏற்படுத்திய கருத்து

நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலை ஏற்படலாம் எனப் பாஜக மூத்த தலைவர் அத்வானி ஜூன் 18 அன்று கூறியது அரசியலில் அதிர்வை ஏற்படுத்தியது. 1975-ம் ஆண்டில் ஜூன் 25 அன்று கொண்டுவரப்பட்ட நிலையை எதிர்த்து அத்வானி 19 மாதங்கள் சிறையில் இருந்தவர். நாட்டில் நிலை பிரகடனப்படுத்தப்பட்டு 40 ஆண்டுகள் ஆனதையொட்டி அத்வானி இந்தக் கருத்தைத் தெரிவித்தார். அத்வானியின் இந்தக் கருத்து மோடி அரசுக்கு ஓர் எச்சரிக்கை என எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ஆனால், எந்த ஒரு தனிநபருக்கு எதிராகவும் இந்தக் கருத்தைத் தெரிவிக்கவில்லை என அத்வானி விளக்கம் அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x