Published : 26 May 2015 12:22 PM
Last Updated : 26 May 2015 12:22 PM
அண்மையில் சீனாவுக்குப் போனார் பிரதமர் நரேந்திர மோடி. சீனாவின் துணைத் தூதரகம் சென்னையில் அமைக்கப்படும் என்று அங்கே அறிவித்தார். சென்னையில் மட்டும் 53 துணைத் தூதரகங்கள் இருக்கின்றன.
ஆனாலும், அமெரிக்கா, இலங்கை ஆகிய நாடுகளின் துணைத் தூதரகங்களைத் தெரிந்த அளவுக்கு மற்ற நாடுகளின் துணைத் தூதரகங்களைத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சரி, ஒரு நாட்டில் இன்னொரு நாட்டுக்குத் தூதரகம் இருக்கும்போது துணைத் தூதரகம் எதற்கு? இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?
தூதரகமும் துணையும்
ஒரு நாட்டின் தூதரகம் என்பது அந்த நாட்டின் ஒரு பிரதிநிதித்துவ அலுவலகமாகவே பார்க்கப்படுகிறது. ஒரு நாடு இன்னொரு நாட்டின் தலைநகரில் ஒரே ஒரு தூதரகத்தை மட்டுமே அமைக்க முடியும். ஆனால், வெவ்வேறு நகரங்களில் பல துணைத் தூதரகங்களை அமைத்துக்கொள்ளலாம்.
இதில் தூதரகத்துக்குதான் மிகப்பெரிய அந்தஸ்து கிடைக்கிறது. துணைத் தூதரகத்தை ஜூனியர் தூதரகம் என்றே அழைக்கிறார்கள்.
அரசுகளுக்கு இடையேயான உறவுகளைப் பேணுவதே தூதரகத்தின் பணி.
ஒரு நாட்டில் தூதரகங்கள் விரிவாக்கம் செய்யப்படும்போது அவற்றைச் சம்பந்தப்பட்ட நாடு முதலில் அங்கீகரிக்க வேண்டும். ஒரு நாட்டில் உள்ள தூதர் அந்த நாட்டில் உள்ள தூதரகத்தின் உயர் அதிகாரமிக்க பிரதிநிதியாகக் கருதப்படுவார். துணைத் தூதரகங்களின் தலைமை அதிகாரியைத் துணைத் தூதர் என்கிறார்கள்.
தூதரகப் பணிகள்
தூதுவர் என்பவர் அவர் சார்ந்த நாட்டின் செய்தித் தொடர்பாளருக்கு இணையானவர். எந்த நாட்டில் தூதரகம் உள்ளதோ அந்த நாட்டு அரசுடன் அரசியல் ரீதியாகவும், ராஜ்ஜிய ரீதியாகவும் உறவுகளைப் பேணுவதும், அந்த நாட்டில் வாழும் தன்னுடைய நாட்டின் குடிமக்களின் நலன்களையும் பேணுகிறது தூதரகம்.
தூதரகங்கள் ராஜ்ஜிய ரீதியிலான பணிகளை முன்னெடுத்துச் செல்லும். துணைத் தூதரகங்கள் அதைச் சிறிய அளவில் மட்டுமே செய்யும். இரண்டு நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் வணிக உறவுகளை வளர்ப்பது துணைத் தூதரகங்களுக்கு உள்ள பணி. துணைத் தூதரகங்கள் விசா, பாஸ்போர்ட் பணிகளையும் கவனிகிறது.
ஒரு நாட்டின் தொழிற்சாலைகளுக்கு உதவுவது, தங்கள் நாட்டில் இருந்து முதலீடுகளைப் பெற்றுத் தருவது துணைத் தூதரகங்களுக்கு உள்ள மிகப் பெரிய பொறுப்பு. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்றுமதி, இறக்குமதி வசதிகளை செய்து தரும் பணிகளையும் அவை செய்கின்றன.
தூதரகம் ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளைப் பேணினால், துணைத் தூதரகங்கள் பொது நிர்வாகத்தைப் பேணுகிறது. தூதரகம் தன்னுடைய நாட்டுக்கும் தூதரகம் அமைந்துள்ள நாட்டுக்கும் இடையே தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும். துணைத் தூதரகங்கள் சுற்றுலா வரும் தங்கள் நாட்டு குடிமக்களுக்கும், அவர்களின் பயணத்துக்கும், அவர்கள் தங்குவதற்கும் பொறுப்பேற்றுக்கொள்கிறது.
ஒரு நாட்டில் அரசு மேற்கொள்ளும் சமூக, அரசியல், ராணுவ, பொருளாதார விஷயங்களையும் அந்த நாட்டில் நடக்கும் விஷயங்களையும் தங்கள் நாட்டு அரசுடன் தூதரகம் பகிர்ந்துகொள்ளும். துணைத் தூதரகங்கள் அரசியல் ரீதியான முக்கியமான மரணங்கள், பிறப்புகள், திருமணங்கள் பற்றி தன் நாட்டு அரசோடு பகிர்ந்து கொள்ளும்.
இரு நாடுகளுக்கு இடையே ஒப்பந்தங்களைத் தயார் செய்வது, அரசு முறை பயணங்களுக்கு ஏற்பாடு செய்வது தூதரகத்தின் பொறுப்பு.
ஒரு நாட்டில் தங்கியுள்ள தங்கள் நாட்டு குடிமக்களுக்குப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளைத் தெரிவிப்பது துணைத் தூதரகங்களின் பொறுப்பு. தங்கள் நாட்டு குடிமக்கள் கைது செய்யப்பட்டுச் சம்பந்தப்பட்ட நாடு ஒப்படைக்கும்போது அவர்களைத் தங்கள் பொறுப்பில் வைத்துக் கொள்வது துணைத் தூதரகங்களின் முக்கியமானப் பணி.
ஒரு நாட்டில் இன்னொரு நாட்டின் தூதரகமும், துணைத்தூதரகமும் இருந்தாலும் இரண்டுக்கும் தனித்தனிப் பணிகளும் பொறுப்புகளும் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT