Last Updated : 05 May, 2015 11:14 AM

 

Published : 05 May 2015 11:14 AM
Last Updated : 05 May 2015 11:14 AM

மாநிலங்களை அறிவோம்: ஆப்பிள் மாநிலம்- இமாச்சல பிரதேசம்

இமயமலையின் அருகில் அமைந்துள்ள இமாச்சல பிரதேசத்தை மகாபாரதமும் பேசுகிறது. இதற்கு தேவ பூமி என்ற பெயரும் உண்டு. இங்குள்ள கோய்லி, தாகி, தாக்குரி, தாசா, காஸா, கின்னர், கிராத் ஆகிய இனங்கள் ஆதி பழங்குடிகளாகக் கருதப்படுகின்றன.

குடியேற்றங்கள்

கி.மு. 2250 1750 காலகட்டங்களில் சிந்து சமவெளி நாகரிக மக்கள் இமாச்சலில் குடியேறியதற்கான ஆதாரங்கள் உள்ளன. இது முதல் குடியேற்றம். மங்கோலியர்களாக அறியப்படும் மக்கள் குழு இரண்டாவதாக வந்துள்ளது. மூன்றாவதாக, ஆரியர்கள் எனப்பட்டவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்துள்ளனர்.

மவுரியப் பேரரசின் அதிகார எல்லை இமாச்சல்வரை இருந்தது. அதன்பிறகு ஹர்ஷர், தாக்கூர் மற்றும் ராணாக்களின் ஆளுகையிலும் இமாச்சல் இருந்தது. கி.பி.883-ல் காஷ்மீரை ஆண்ட சங்கர் வர்மாவின் செல்வாக்கு இமாச்சலிலும் பரவியிருந்தது. 1043-ல் ராஜபுத்திரர்கள் ஆண்டனர். பின்னர், சன்சார் சந்த் மகாராஜா, சீக்கியப் பேரரசர் மகாராஜா ரஞ்சித் சிங், 1804-களில் இஸ்லாமியத் தளபதிகள் மஹ்மூத் கஜ்நாவி மற்றும் தைமூர், சிக்கந்தர் லோடி ஆகியோரைக் கண்டது இமாச்சல் பிரதேசம்.

கூர்க்கா போரும் கல்சா ராணுவமும்

இந்தச் சூழலில் 1768-ல் பழங்குடி கூர்க்கர்கள் நேபாளத்தில் அதிகாரத்துக்கு வந்தனர். அவர்கள் தங்களின் ராஜ்ஜியத்துடன் இமாச்சலின் சிர்மோர் மற்றும் சிம்லாவை இணைத்தனர். பின்னர், நடந்த ஆங்கிலேயர்- கூர்க்கா மோதலுக்குப் பிறகு இமாச்சல் பிரதேசத்தில் படிப்படியாக ஆங்கிலேயர் தங்கள் அதிகாரத்தை நிலைநாட்டினர்.

1839-ல் ரஞ்சித் சிங் மறைவால் உணர்ச்சிவசப்பட்டிருந்த சீக்கியர்களின் கல்சா ராணுவம் 1845-ல் ஆங்கிலேயர் மீது தாக்குதல் தொடுத்தது. இருப்பினும் பல மலைப்பிரதேச ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்கள் பக்கம் நின்றனர்.

விடுதலைப் போராட்டக் களம்

1857-ல் நடந்த முதல் விடுதலைப் போருக்குப் பின்னர், ஆங்கிலேயருக்கு எதிரான மனப்பான்மை மாநில மக்களிடையே உருவானது. சுதந்திரத்துக்கான தீரமிக்க போராட்டங்கள் வெடித்தன.

18-வது மாநிலம்

1947-ல் நாடு விடுதலைக்குப் பிறகு 1948 ஏப்ரல் 15-ல் இமாச்சல் பிரதேசத்துக்கான முதன்மை மாகாண ஆணையர் நியமிக்கப்பட்டார். 1956 நவம்பர் 1-ல் யூனியன் பிரதேசமாக உயர்ந்தது. 1966-ல் பஞ்சாப்பில் இருந்த கங்ரா உள்ளிட்ட பல மலைப்பிரதேசங்கள் இமாச்சலுடன் இணைக்கப்பட்டன. 1971 ஜனவரி 25-ல் இந்தியாவின் 18-வது மாநிலமாக உதயமானது.

வடக்கில் ஜம்மு காஷ்மீர், மேற்கு மற்றும் தென்மேற்கில் பஞ்சாப், தெற்கில் ஹரியாணா, தென்கிழக்கில் உத்ராஞ்சல், கிழக்கில் திபெத் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 450 மீட்டர் முதல் 6,500 மீட்டர் வரையிலான உயரத்தில் அமைந்துள்ளது. 40 சதவீதம் வனப்பகுதிகளாகும்.

தன்னிறைவு

வேளாண்மையில் கிட்டத்தட்ட தன்னிறைவு பெற்ற மாநிலம். 93 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பியே உள்ளனர். முக்கியமான பயிராகக் கோதுமை, சோளம், நெல் மற்றும் பார்லி விளைகிறது. காய்கறி, பழ உற்பத்தியில் முதன்மை மாநிலம். ஆண்டுக்கு ரூ.300 கோடி வர்த்தகம் நடக்கிறது. இதனால் இமாச்சல் பிரதேசத்துக்கு ‘ஆப்பிள் மாநிலம்’ என்ற பெயரும் உண்டு.

போக்குவரத்து வசதியில்லாததால் தொழில் வளம் சொல்லும்படியில்லை. தாதுவளம் வெறும் 0.2 சதவீதம் மட்டுமே. சுண்ணாம்புக்கல், ஜிப்சம், பாறை உப்பு உள்ளன. நீர் மின் உற்பத்தியில் சாதனை செய்யப்பட்டுள்ளது.

மக்கள்

மக்கள் தொகை 68.65 லட்சம் பேர். எழுத்தறிவு பெற்றோர் 82.80 சதவீதம் பேர். பாலின விகிதாச்சாரம் ஆயிரம் ஆண்களுக்கு 972 பெண்கள். இந்து மதத்தினர் 95.45 சதவீதம், இஸ்லாமியர் 1.94 சதவீதம், சீக்கிய மற்றும் பவுத்த மதத்தினர் 2.26 சதவீதமும் கிறிஸ்தவர்களும் வசிக்கின்றனர்.

பண்பாடு

இந்தி மாநில மொழியாக இருந்தாலும் மக்கள் அதிகம் பேசுவது பஹாரி. இதுதவிர, பகுதிவாரியாக மாண்டி, குலாவி, கேஹ்லுரி, ஹிண்டுரி, சாமேலி, சிர்மவுரி, மியாஹாஸ்வி, பங்வாலி உள்ளிட்ட மொழிகள் புழக்கத்தில் உள்ளன.

பாடல், நடனம் இல்லாத பண்டிகையோ விழாவோ இல்லை. போரி விழா, தசரா, , ஹோலி, தீபாவளி, மின்ஜார், லோஸார், டயாளி உள்ளிட்ட 25 வகையான பண்டிகைகளும் சோவி ஜாட்டாராஸ், காஹிக்கா, ரேணுக்கா, லவி சீக்கிய விழா உள்ளிட்ட 19 விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. தொலுரு, பகாககட், சுகாககட், உள்ளிட்ட நாட்டுப்புறப் பாடல்கள் பிரசித்தி பெற்றவை.

கலைநயம்

கல் மற்றும் உலோகச் சிற்பங்கள், ஓவியம், நகை வடிவமைப்பு, துணி அச்சு, நூற்பு மற்றும் நெய்தல், பொம்மைகள் உற்பத்தி, காலணி உற்பத்திகளில் இமாச்சல் மக்களின் கைவண்ணம் மிளிரும்.

உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் இமாச்சல் தனித்து விளங்குகிறது. இயற்கை எழில் கொஞ்சும் வனம், பனி மூடிய நீர்வீழ்ச்சி, ஆறுகள், பள்ளத்தாக்குகள் என வனப்புமிக்க மலைப்பிரதேசமாக, இந்தியாவின் முக்கிய சுற்றுலாத்தலம் இமாச்சல்.

சிம்லா, பாலம்பூர், தர்மசாலா, குலு-மணாலி, சாம்பா- டல்ஹவுசி மற்றும் பீமாஹாலி, சாமுண்டா தேவி, சிண்ட்பூர்ணி, ரேணுக்கா கோயில்கள், மடாலயங்கள் உள்ளிட்டவை சுற்றச் சுற்றத் திகட்டாத பகுதிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x