Published : 05 May 2014 02:34 PM
Last Updated : 05 May 2014 02:34 PM

லிஃப்ட் மேலே செல்வதற்குள்...

“உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்?”

இதுதான் பெரும்பான்மையான நேர்காணல்களில் கேட்கப்படும் முதல் கேள்வி.

ஏன் இது முதல் கேள்வி என்பதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். கனத்த உரையாடலுக்கு முன் ஒரு இதமான கேள்வி என எடுத்துக் கொள்ளலாம். புரிவதற்குக் கடினமாக இல்லாமல், விடை தெரிந்த கேள்வி என்றால் இதைவிட எதைச் சொல்ல? (இதற்கும் விடை சொல்லத் திணறும் பதற்றக்காரர்கள் இருக்கிறார்கள். அது பற்றிப் பிறகு பார்க்கலாம்.)

இது தவிர நேர்காணல் எடுப்பவர்களுக்கும் சிந்திக்கும் அவகாசமும், வந்தவரைப் பேசவிட்டு நோட்டமிட ஒரு திறந்த கேள்வி தேவைப்படுகிறது. இதைக் கேட்டுவிட்டுத் தேவைப்படும் இடத்தில் வெட்டி ஒரு மறு கேள்வி கேட்டுத் தங்கள் வேலையைத் தொடங்கலாம்.

பல நேரங்களில் நேர்காணல் எடுப்பவருக்கு மிகுந்த அசதி இருக்கும். பயிற்சி அமர்வில் 8 மணி நேரம் அசதி இல்லாமல் பேசக்கூடிய என்னால் நேர்காணல் எடுக்கையில் அசதி அடையாமல் 2 மணி நேரம் பேச்சு கேட்பது கடினம். ஒரு மணி நேரத்திற்கு ஒரு தேனீரும் சிறிது நடையும் கட்டாயம் வேண்டும். புது ஆள் வந்தவுடன் புத்துணர்ச்சியுடன் புதுக் கேள்வியை யோசிப்பதும் சிரமம். இதனால்தான் இந்த, “உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்?” கிட்டத்தட்ட ஸ்டாண்டர்ட் கேள்வி!

சரி, இந்தக் கேள்வியின் பதிலால் என்ன தெரிந்துகொள்ள முடியும்? என்னைக் கேட்டால் எல்லாம் தெரியும். இடைமறிக்காமல் மூன்று நிமிடங்கள் பேச அனுமதித்தால் எதிராளியின் மன ஓட்டம் புரியும். அவர் பின்புலம் புரியும். மொழி அறிவும் தெரியும். சி.வி.க்கும் நிஜத்திற்கும் உள்ள தொடர்பு தெரியும். எல்லாவற்றையும்விட அடுத்து என்ன கேட்க வேண்டும் என்று தெரியும்.

இந்தக் கேள்விக்கு ஒரு நல்ல பதில் என்றால் எப்படி இருக்க வேண்டும்?

இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எந்த வரையறையும் இல்லை. ஆனால் மிக நுட்பமாகப் பார்த்தால், நேர்காணலை வழிநடத்தக்கூடிய பதிலை நீங்கள் தரும் வாய்ப்பு உள்ளது. உங்கள் பதில்களிலிருந்து கேள்விகள் பிறக்க அதிக வாய்ப்புகள் நேர்காணலின் ஆரம்ப கட்டத்தில் உண்டு. இதைச் சாமர்த்தியசாலிகள் நன்கு பயன்படுத்திக்கொள்வார்கள்.

நேர்காணலின் குறிக்கோள் நீங்கள் அந்த வேலைக்குத் தகுதியானவரா என்று சோதிப்பதுதானே? அப்படி என்றால் அந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவர் என்பதை எடுத்துச் சொல்ல உங்கள் அறிமுக உரை உதவலாம் அல்லவா? இதைச் செய்வதன் மூலம் நீங்கள் நேர்காணல் எடுப்பவரின் நேரத்தையும் சிரமத்தையும் குறைத்து அவர்கள் வேலையைச் சுலபமாக்குகிறீர்கள்.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள் என்றவுடன் பலர் சி.வி.யைத் திரும்ப விலாவாரியாகச் சொல்ல ஆரம்பிப்பார்கள். சிலர் தங்கள் பெருமையைப் பேசுவார்கள். சிலர் சில சின்ன தகவல்களுக்கு நேரம் எடுத்துக் கொள்வார்கள். இவை உங்களைப் பற்றி சுவாரசியம் இழக்கச்செய்து அடுத்த கேள்விக்குக் கொண்டுசெல்ல வைக்கும்.

எது அவசியம், எது அனாவசியம் என்று தெரியாமல் பலர் இந்தப் பொன்னான முதல் சந்தர்ப்பத்தை இழந்துவிடுகிறார்கள். சரியான பதில் என்று ஒன்று இல்லை என்றாலும் ஒரு ஆலோசனை தருகிறேன்.

Elevator Pitch என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஒரு லிஃப்டில் ஏதேச்சையாக உங்கள் வாடிக்கையாளரைப் பார்க்க நேர்ந்தால் உங்கள் பொருள் பற்றி லிஃப்ட் செல்லும் நேரத்திற்குள் சொல்ல முடியுமா? அது தான் எலிவேட்டர் பிட்ச். மிகச் சுருக்கமாக, மிக முழுமையாக மனதில் பதியும் அளவு அறிமுகம் செய்வதைத் தான் அப்படிச் சொல்கிறார்கள். உங்களுக்கும் ஒரு எலிவேட்டர் பிட்ச் அவசியம்.

எங்கள் குடும்பம் அம்பாசமுத்திரம் என்று ஆரம்பித்து மூன்று தலைமுறைக் கதை சொல்லி உங்கள் நடப்பாண்டு சாதனை வரை சொல்ல அவகாசம் கிடையாது. உங்கள் முதல் வரிகளில் ஒரு கொக்கி வைத்தால் அந்த இடத்தில் ஒரு கேள்வி வரும். அந்தப் பதில் உங்கள் உரையின் தொடர்ச்சியாக இருக்கும்.

என்னை ட்யூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் கம்பனிக்குப் பயிற்சி மேலாளர் வேலைக்கு நேர்காணலுக்கு அழைத்திருந்தார்கள். கார்ப்பரேட் அனுபவம் கிடையாது; பயிற்சி அனுபவமும் சில ஆண்டுகள்தாம். நான் என்னை அறிமுகம் செய்தபோது இப்படிச் சொன்னேன்: “நான் பார்த்த முதல் பயிற்சி வகுப்பு என்னுடையது!” கொல்லென்று சிரித்துவிட்டுக் காரணம் கேட்டபோது பின்னோக்கி என் அனுபவமின்மையைச் சொன்னேன். இப்படி அவர்கள் கேள்விகளிலேயே உங்கள் கதையைச் சொல்லும் போது முதல் கேள்வியும் துணைக் கேள்விகளும் சிறப்பாகக் கையாளப்பட்டதாகச் சொல்லலாம்.

உங்கள் முதல் பதில் உங்களைப் பற்றி முதல் தோற்றத்தை ஏற்படுத்தும். அதனால் அதைச் சரியாகப் பயன்படுத்துங்கள்.

ஒரு விளம்பரம் 30 வினாடிகளில் உங்களை ஒரு தேவையில்லாத பொருளை வாங்க வைக்கும் சக்தி கொண்டது. முதல் அறிமுக உரையும் கிட்டத்தட்ட விளம்பரம் போன்றதொரு வாய்ப்புதான். பொய் கலக்காமல் உங்களைப் பற்றி ஒரு சுவாரசியமான அறிமுகம் உங்களை ஒரு நல்ல உரையாடலுக்கு இட்டுச்செல்லும்.

சரி, “உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்” என முதல் கேள்வி அமையா விட்டால், உங்கள் அறிமுக வாசகங்களை என்ன செய்வது?

தி.மு.க. தலைவைர் மு.கருணாநிதியின் டெக்னிக்தான் கடைசி வழி. கேள்வி எதுவாக இருந்தாலும் தான் சொல்ல வேண்டியதை அதில் இணைத்துச் சொல்வதில் அவருக்கு நிகர் அவரே!

வேலையைக் காதலி!

மன நோய்கள் நரம்புத் தளர்ச்சியால் வருபவை என்றும் நம்பியிருந்த காலம் அது. பெண்களின் ஹிஸ்டீரியா போன்ற நிலைகளுக்கு ஹிப்னோஸிஸ் முறையைப் பயன்படுத்திய மருத்துவரிடம் உதவி சிகிச்சையாளராக இருக்கிறார் இவர்.

பின் வரும் காலங்களில் அவரிடமிருந்து பிரிந்து உளப்பகுப்பாய்வு முறையை உருவாக்குகிறார். மருந்துகளைவிட நோயாளிகளிடம் பேசுவதையும் அவர்கள் கனவுகளை ஆராய்வதும் பிரதான வழிகளாகக் கையாள்கிறார்.

Free Association என்ற முறையில் மனதில் தோன்றும் எண்ணங்களைப் பேச வைத்து, அதன் பின் தன் பகுப்பாய்வில் தொகுத்து தரும் முறை தான் முதல் நேர்காணல் முறை. இன்றும் In Depth Interview எனும் நிறுவன மேலாளர்களுக்கான ஆய்வில் இந்த உத்தியின் தாக்கத்தை காணலாம்.

சைக்கோ அனாலிஸிஸ் எனும் கருத்தக்கத்தை வழங்கிய அவர் உளவியல் துறையின் தந்தை என அழைக்கப் பெற்று வரும் ஸிக்மண்ட் ஃப்ராய்ட் !

டாக்டர். ஆர். கார்த்திகேயன்- gemba.karthikeyan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x