Last Updated : 26 May, 2014 02:57 PM

 

Published : 26 May 2014 02:57 PM
Last Updated : 26 May 2014 02:57 PM

இந்திய மருத்துவ கவுன்சில்

பிளஸ் 2 தேர்வு முடிவுகளுக்கு முன்பே இந்தக் காலத்தில் என்ன படிக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவுசெய்துவிடுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட துறையைத் தேர்வு செய்யும் முன் பலருடன் பேசுகிறார்கள்; விவாதிக்கிறார்கள். ஆனால், நம்மில் எத்தனை பேர் நாம் தேர்ந்தெடுக்கும் துறைக்கு அங்கீகாரம் அளிக்கும் அமைப்புகளைப் பற்றி அறிந்துகொள்ள முயல்கிறோம்? மிகவும் சொற்ப அளவிலேயே இருப்பார்கள். அதைப் போக்கும் வகையில் ஒவ்வொரு கல்வி சார்ந்த அமைப்புகள் பற்றித் தொடர்ந்து பார்ப்போம். இந்த வாரம் இந்திய மருத்துவ கவுன்சில் பற்றி:

இந்திய மருத்துவ கவுன்சில் என்பது நம் நாட்டில் சீரான, தரமான மருத்துவக் கல்வியை வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு. இது இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1933-ம் ஆண்டின் படி, 1934-ல் நிறுவப்பட்டது. இது தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு. சுதந்திரம் அடைந்த பிறகு மருத்துவ கவுன்சில் சட்டம் 1956-ன் படி, மாற்றியமைக்கப்பட்டது. இது தன்னாட்சி கொண்ட அமைப்பாக இருந்தாலும், மத்திய மனித வள அமைச்சகத்தின் உயர்க் கல்வித் துறையின் கீழ் இந்த அமைப்பு செயல்படுகிறது.

பணிகள்

இந்த அமைப்பு மருத்துவக் கல்வி சார்ந்த பல்வேறு பணிகளைச் செய்துவருகிறது. மருத்துவக் கல்வியை ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியமான பணி. இந்த அமைப்பே மருத்துவப் பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் அளிக்கிறது. மாணவர்களுக்கு மருத்துவப் பட்டம் வழங்குவது, தேர்ச்சி பெறும் மருத்துவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது, மருத்துவப் பணிகளை ஒழுங்குபடுத்துதல் ஆகிய பணிகளையும் செய்து வருகிறது.

இந்த அமைப்பின் தலைவராக ஆந்திராவைச் சேர்ந்த புட்டா சீனிவாஸ் இருக்கிறார். இவரது தலைமையில் 68 உறுப்பினர்களுடன் இந்திய மருத்துவ கவுன்சில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கெனத் தனியாக http://www.mciindia.org/என்னும் இணையதளம் உள்ளது. மருத்துவக் கல்லூரியில் சேர விரும்பும் மாணவர்கள் அறிந்துகொள்ளப் பல தகவல்கள் இதில் உள்ளன. எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பல்கலைக்கழங்கள் உள்ளன, அரசு, தனியார் கல்லூரிகளில் உள்ள இடங்கள் நிலவரம், ஸ்பெஷாலிட்டி துறைகளுக்குச் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்கள் உள்ளன. மருத்துவர்களின் பதிவு, மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் மருத்துவப் பேராசிரியர்களின் தகவல், கல்லூரிகளின் தர ஆய்வு அறிக்கைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

மாணவர்களும், பெற்றோர்களும் அறிந்துகொள்ள வசதியாகப் பல்வேறு கல்லூரிகளின் தகவல்கள் இதில் கொட்டிக் கிடக்கின்றன. இந்திய மருத்துவ கவுன்சிலின் செயல்பாடு, விதிகள், அதிகாரங்கள் எனப் பல தகவல்கள் இந்த இணையதளத்தில் உள்ளன. மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் இந்திய மருத்துவ கவுன்சிலையும், அதன் இணைய தளத்தையும் ஒருமுறை பார்ப்பது மிகவும் நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x