Published : 24 Mar 2015 01:19 PM
Last Updated : 24 Mar 2015 01:19 PM
முதுகு வலியால் ‘ஆ அம்மா’ எனத் துடித்துத் துடித்து அலறும் 30 வயது இளம் பெண்.
ஓட்டப் பந்தயத்தில் வேகவேக மாக ஓடிக் கால் ஆடுதசையில் தசை முறுக்கம் பெற்று வலியால் துடிக்கும் இளைஞன்.
ஆர்த்ரைடீஸ் (Arthritis) மூட்டு வலியால் அவதிப்படும் முதுமை அடைந்த கிழவன்.
எல்லோரும் பயன்படுத்தும் வலி நிவாரணக் களிம்பைச் சற்றே கவனமாகப் பரிசோதியுங்கள். பெரும்பாலும் வலி நிவாரணி களிம்பில் கேப்சாஸின் (Capsaicin) என்ற வேதிப் பொருள் இருக்கும். கேப்சாஸின் கொண்டுதான் பெரும்பாலும் பலவகை வலிநிவாரணி களிம்புகள் தயாரிக்கப்படுகின்றன.
உள் வலியும் வெளி வலியும்
பச்சை மிளகாயில் “காரம்” தரும் வேதிப்பொருள் தான் இந்தக் கேப்சாஸின். பச்சை மிளகாயிலிருந்துதான் கேப்சாஸின் தனித்து எடுக்கப்பட்டு வலிநிவாரணி களிம்புகள் தயார் செய்யப்படுகின்றன. பல காலம் இந்தக் களிம்புகள் மருத்துவப் பயனில் இருந்தாலும், சமீபத்தில்தான் உள்ளபடியே கேப்சாஸின் நரம்புப் பகுதியில் எப்படி வேலை செய்து வலி நிவாரணியாகச் செயல்படுகிறது என ஆய்வு வழி கண்டுபிடித்துள்ளனர்.
ருட்கர்ஸ் நியூ ஜெர்சி மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் ஆய்வாளர் டிபோர் ரோஹாக்ஸ் (Tibor Rohacs) மற்றும் அவரது கூட்டாளிகள் கேப்சாஸின் எப்படிப் பலவகை வலிகளுக்கும் வலிநீக்கியாக, நிவாரணியாகச் செயல்படுகிறது என்பதைத் தமது ஆய்வு மூலம் விளக்கியுள்ளனர்.
வலி என்று நாம் பொதுவே கூறினாலும் அதில் பலவகை உண்டு என உடலியல் மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலில் ஒரு இடத்தில் தீக் காயம் ஏற்படுகிறது; அல்லது விரல் கதவிடுக்கில் பட்டு நசுங்குகிறது என்றால் அந்த வலி புறநரம்பு இழைகளில் ஏற்படும் உணர்வு. இதை Nociceptive என்று அழைப்பார்கள்.
குறிப்பிட்ட எல்லை கடந்து வெப்பம் அல்லது அழுத்தம் அதிகரிக்கும்போது அது “வலி” என உணரப்படுகிறது. இதை வெளிவலி என விளங்கி கொள்ளலாம். எனவே தான் தீயில் விரலை வைக்கும் போது குறிப்பிட்ட வெப்ப நிலைக்கு அதிகமாக வெப்பம் தாக்கும் போது விரலை அனிச்சையாகச் சட்டென்று எடுக்கிறோம்.
ஆனால் முதுகு வலி, மூட்டு வலி ஆகியவை புற உலகிலிருந்து வரும் அழுத்தம் அல்லது வெப்பம் போன்ற தூண்டு தலால் ஏற்படும் வலிகள் அல்ல. திசு அல்லது நரம்பு சிதைந்து அல்லது பாதிக்கப்பட்டு அதனால் ஏற்படும் வலிகள் இவை. இந்த வகை வலிகளைப் பொதுவாக Neuropathic என்று அழைப்பார்கள். இதை உள் வலி என விளங்கி கொள்ளலாம்.
பழகப் பழக ..
மிளகாயைத் தோலில் தடவினால் ஏற்படுவது போலத் தசை மீது வலி உள்ள இடத்தில் கேப்சாஸின் களிம்பைத் தடவினால் எரிச்சல் ஏற்படும். உள்ளபடியே தசையில் வினைபுரிந்து கேப்சாஸின் வெப்பம் தூண்டுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. வேறு வார்த்தையில் கூறினால் கேப்சாஸின் தடவுவதும் தீ சுட்டு ஏற்படும் வலியும் ஒன்றுதான்.
ஏற்கனவே ஆய்வாளர்கள் கேப்சாஸின் பட்டதும் தசையில் உள்ள வெப்ப உணர்வு புரதம் Trpv1 ஐ தூண்டுகிறது என அறிந்துள்ளனர். தீ சுடும்போது வெப்பம் குறிப்பிட்ட எல்லையை கடந்து போகும்போது Trpv1 புரதம் சுரக்கும். Trpv1 மிகுந்து சுரப்பதைத்தான் வலி என மூளை உணர்கிறது. அவ்வாறு தான் தோலில் கேப்சாஸின் பட்டதும் Trpv1 புரதம் சுரக்கிறது என கண்டு வியந்தனர் ஆய்வாளர்கள்.
கிராமத்திலிருந்து புதிதாக நகரத்துக்கு வந்தால் முதலில் நகரத்தின் இயங்கு சந்தடி, வாகன இரைச்சல் எல்லாம் நமது காதுகளில் விழுந்து எரிச்சல் ஏற்படும். ஆனால் காலம் செல்லச் செல்ல நகரத்தின் சந்தடி பின்னணியில் சென்று மறைந்து விடுவது போலத் தான் நீண்ட நாள் கேப்சாஸின் களிம்பு தடவப்படும்போது Trpv1 தூண்டப்படுவது மட்டுப்படும்.
தொடர்ந்து கேப்சாஸின் களிம்பு தடவப்படும்போது உடல் அந்த நிலை தான் இல்பு நிலை என ஏற்று Trpv1 சுரப்பது குறையும். அந்தத் தசை பகுதியில் மரமரப்பு அதாவது உணர்வின்மை ஏற்பட்டு வலியுணர்வு நீங்கி விடும். Trpv1 சுரப்பது குறைவதால்தான் வலி என மூளை உணர்வது இல்லை. எனவே தான் காலப்போக்கில் கேப்சாஸின் களிம்பு எரிச்சலைத் தருவதில்லை.
மிளகாய்க்குள் ஆய்வு
Trpv1 புரதம் வெப்ப உணர்வுடன் தொடர்பு உடையது. அதாவது தீக்குள் விரலை வைத்தால் ஏற்படும் வலி Trpv1 புரதத் தூண்டுதலால் ஏற்படும். ஆனால், நரம்பு கிழிவு முதலின காரணமாக ஏற்படும் நரம்புக்குத்து வலி (neuralgia), புற நரம்பு மண்டல வேதியல் மாற்றம் காரணமாகத் தூண்டப்படும் நரம்பு இயக்கத் தடை, நரம்பு இயக்கக் கோளாறு (neuropathy) முதலிய வலி, அளவுக்கு அதிகமாகத் தசை இழுபட்டு நீட்சி அடைவதால் ஏற்படும் வலி மற்றும் மூட்டுவலி முதலிய பலவகை வலிகளுக்கும் கேப்சாஸின் நிவாரணம் தருகிறது. இதுதான் இதுநாள் வரை புதிராக இருந்தது.
அதாவது Nociceptive வலியை உணர்த்தும் Trpv1 எப்படியோ Neuropathic வலிமீது தாக்கம் செலுத்துகிறது. நரம்பு மற்றும் தசை முறுக்கம் முதலியவற்றால் ஏற்படும் வலி முதலிய வலிகளுக்கும் கேப்சாஸின் வெப்பம் தூண்டுவது போன்ற உணர்வை ஏற்படுத்துவதற்கும் உள்ள தொடர்பை டிபோர்ரின் ஆய்வு வெளிச்சமிட்டுள்ளது.
உள்ளபடியே நேரடியாகக் கேப்சாஸின் வேலை செய்வதில்லை. அடுக்கி வைக்கப் பட்ட சீட்டுக்கட்டில் ஒன்றைத் தட்டி விட்டாலும் ஒன்று மற்றதின் மீது தாக்கம் செலுத்தி எல்லாம் ஒவ்வொன்றாகத் தொடர்போல விழுவது போலக் கேப்சாஸின் ஏற்படுத்தும் வினை தொடர் சங்கிலியாகச் செயல்பட்டு இறுதியில் பல வகை வலிகளை நிவாரணம் செய்கிறது என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.
கேப்சாஸின் Trpv1 ஐ தூண்டும்போது அதன் ஊடே பாஸ்போலிபிட் (phospholipid) எனும் ஒரு வகை லிபிட் (கொழுப்பு பொருள்) ஐ சுரப்பதையும் சேர்த்து மட்டுப்படுத்துகிறது. இந்தப் பாஸ்போலிபிட் உள்ளபடியே ஒருவகை சிக்னல் தரும் மூலக்கூறு ஆகும். அதாவது தபால்காரர் எனலாம். இந்தப் பாஸ்போலிபிட் தான் தசை இயக்க உணர்வை உணர்வும் பிஸ்ஸோ1 (Piezo1) பிஸ்ஸோ2 (Piezo2) ஆகிய புரதங்களைத் தூண்டுகிறது. பாஸ்போலிபிட் குறையக் குறையப் பிஸ்ஸோ1 , 2 புரதங்கள் தூண்டப்படுவதும் குறையும்.
தசைப் பகுதிகளில் இழுவை (stress) ஏற்பட்டுதான் பெரும்பாலும் உள் வலிகள் ஏற்படுகின்றன. பிஸ்ஸோ1 , 2 புரதங்கள் தூண்டப்படுவது குறைந்தால் அந்த தசை பகுதியில்இழுவை இல்லை என மூளை விளங்கிக் கொள்ளும். எனவே வலி உணர்வு மங்கும். இவ்வாறு தான் நேரடியாக இல்லாமல் கேப்சாஸின் தடவப்பட்ட தசைப் பகுதியில் வெறும் வெப்ப உணர்ச்சி மட்டும் மட்டுப்படுவதில்லை; தசை இழுபடுவதால் ஏற்படும் பலவகை வலிகளும் மட்டுப்படுகின்றன என இந்த ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பரிசோதனை எலியிடமிருந்து எடுக்கப்பட்ட தண்டுவட நரம்பு முடிச்சு இழைகளில் (Dorsal root ganglion -DRG) உள்ள நரம்பு செல்களை ஆராய்ந்து டிபோர் உள்ளபடியே தசை முறுக்கம் போன்ற உணர்வையும் கேப்சாஸின் மட்டுப்படுத்துகிறது எனக் கண்டனர். இதன் வழி கேப்சாஸின் எப்படிச் சிறந்த வலிநீக்கியாக இருக்கிறது என்பது மேலும் நுட்பமாக விளங்கியுள்ளது. ஆயினும் எல்லா வலிநிவாரணிகளும் திசு சிதைவு தசை பாதிப்பு முதலிய குறைகளுக்கு மருந்து அல்ல வெறும் வலியுணர்வை மட்டுப்பட செய்து மட்டுமே உதவுகிறது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
- கட்டுரையாளர் புது டெல்லியில் உள்ள விக்யான் பிரச்சார் நிறுவனத்தின் விஞ்ஞானி.
தொடர்புக்கு - tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT