Last Updated : 24 Mar, 2015 12:09 PM

 

Published : 24 Mar 2015 12:09 PM
Last Updated : 24 Mar 2015 12:09 PM

செயற்கையாக இயற்கையை அனுபவிக்க முடியுமா?

அறிவின் பிறப்பிடம் மூளை மட்டும் அல்ல. தகவல்களை ஒருங்கிணைத்து ஒன்றோடு ஒன்றைத் தொடர்புபடுத்தும் வேலையை மூளைதான் செய்கிறது. ஆனால் வெளி உலகிலிருந்து தகவலைப் பெற்று மூளைக்குத் தருபவை புலன்கள். ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் கச்சா தகவல்களை உள்வாங்கி மூளையிடம் ஒப்படைப்பது புலன்கள்தான். புலன்களின் செயல்பாட்டிலேயே அறிவு பிறக்கத் தொடங்கி விடுகிறது. அப்படிப் பார்த்தால் இயற்கைச் சூழலில் இருக்கும்போது ஒருவர் தன்னுடைய அத்தனை புலன்களையும் பயன்படுத்துகிறார்.

கண்கவர் வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் மலர் தோட்டத்துக்குள் நுழைந்து பாருங்கள்! சட்டென உங்கள் நடையின் வேகம் குறையும், ரீங்காரமிடும் வண்டுகள், காற்றின் இசைக்கு ஏற்பத் தலையசைக்கும் இலைகள், விடியற்காலை அல்லது அந்திசாயும் பொழுதென்றால் சூரியகாந்தி பூ போல மலர்ந்திருக்கும் சூரியன் இப்படி ஒவ்வொரு நிகழ்வையும் கண்கள் கண்டுகளிக்கும், பூக்களின் வாசத்தை நாசி நுகரும், மரத்தண்டு, இலை, தழைகளைக் கைகள் ஸ்பரிசிக்கும். கொஞ்சும் குரல் எழுப்பும் பறவைகளின் ஒலியைக் காதுகள் கேட்டு ரசிக்கும். இவ்வாறு புலன்கள் அத்தனையும் துறுதுறுவென இயங்கும்போது பிரகாசமாக அறிவு ஊற்றெடுக்கும்.

ஸ்மார்ட் போனில் இயற்கை

இப்போது இதற்கு நேர்மாறானச் சூழலை யோசித்துப் பாருங்கள். தொலைக்காட்சி, ஐபேட், ஸ்மார்ட் போன், கணினி போன்றவற்றில் இதே போன்ற தோட்டத்தின் வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள். அப்போது மேல் கூறிய அத்தனை புலன் உணர்வுகளும் சாத்தியமா? மரம், செடி, கொடி, பூக்கள், வண்டு, பறவை, சூரியனை உங்கள் கண்கள் காணலாம். பறவை, வண்டுகளின் ஓசையைக்கூடக் கேட்கலாம்.

ஆனால் பூக்களின் வாசத்தை நுகர முடியுமா? தொடுதல் உணர்வு ஏற்படுமா? மிஞ்சி மிஞ்சிப் போனால் டச் ஸ்கிரீன், விசைப்பலகை, மவுசை தடவிப் பார்க்கலாம். தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக மூன்று பரிமாணங்களில் ஒரு பொருளைக் காணும் நிலை முதல் 7டி எனப்படும் பார்த்தல், கேட்டல், முகர்தல், தொடுதல் எனப்படும் அத்தனை புலன் உணர்வுகளையும் பார்வையாளருக்குக் கொண்டு சேர்க்கும் தொழில்நுட்ப ஜாலங்களும் வந்துவிட்டன.

ஆனால் எத்தனை மாயாஜாலங்கள் செய்தாலும் இவற்றின்மூலம் மெய்யான உணர்வுகளை உணர முடியுமா? குறைபாடுள்ள தகவல்களை மட்டுமே மூளை பெறமுடியும். இதை ‘இயற்கை பற்றாக்குறை குறைபாடு’ (‘Nature Deficit Disorder’) என்கிறார் ஆய்வாளர் ரிச்சர்ட் லோவ். இது ஒரு மருத்துவ ரீதியான சிக்கல் என அவர் கூறவில்லை. ஆனால் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடைவெளி அதிகரித்துக் கொண்டே போகிறது என கவலை தெரிவிக்கிறார்.

‘எனக்கு எல்லாம் தெரியும்’

இப்படி காட்சி ஊடகத்தின் வாயிலாகத் தட்டையான அனுபவத்தை மட்டும் பெற்றுவிட்டு தனக்கு எல்லாம் தெரியும் (‘know-it-all’) என நினைத்துக் கொள்கிறார்கள் இவர்கள் என்கிறார் ரிச்சர்ட். எல்லாம் தெரியும் என்பவர்கள் உணர்ச்சியற்றவர்களாக, ஆர்வமற்றவர்களாக, சுறுசுறுப்பற்றவர்களாக, சலிப்படைந்தவர்களாக இருப்பார்கள் எனவும் எச்சரிக்கிறார்.

ஒரு குழந்தை இயற்கை மீது பற்றும் இயற்கை ரீதியான அறிவுத்திறனும் கொண்டிருக்க வேண்டுமென்றால் அக்குழந்தை இயற்கையோடு கைகோர்த்துச் சுதந்திரமாக இயங்க அனுமதிக்க வேண்டும். குறைந்தபட்சம் வீட்டின் கொல்லைப்புறத்தில் மணலைக் குவித்து, துழாவி விளையாட அனுமதிக்க வேண்டும் என்கிறார் ரிச்சர்ட் லோவ். அதே சமயம் எல்லா நேரங்களிலும் வெளிப்புறத்தில்தான் அக்குழந்தை இருக்க வேண்டும் என்றும் அவசியமில்லை.

பிடித்ததைப் படி!

இயற்கை ரீதியான அறிவுத்திறனை வளர்க்க பசுமையான உட்புறச் சூழலும், வெளிப்புறச் சூழலும் அவசியம் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதற்குரிய வழிகளும் முன்வைக்கப்படுகின்றன. கல்வி மூலமாகவும் இயற்கை ரீதியான அறிவுத்திறனை வளர்த்துக் கொள்ள முடியும். ஒரு கட்டத்தில் அது அவசியமுமாகிறது.

அதற்கான முனைப்பு அந்தக் குழந்தைகளிடமே காணப்படும். விலங்கியல், தாவரவியல், சூழலியல், பூகோளம், வானியல், வானிலை ஆய்வியல் போன்ற பாடங்களை ஆழமாகக் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இத்தகைய குழந்தைகளிடம் இயல்பாகவே காணப்படும்.

அவர்களுக்குப் பிடித்தமான விஷயங்களை வளர்க்க உதவும் கற்றல் முறையை அவர்கள் விரும்புவார்கள். உங்களுக்கு நன்றாக வரக்கூடிய ஒரு செயலைச் செய்யும்போது நிச்சயம் நீங்கள் நன்றாகத்தான் உணர்வீர்கள். உங்களுக்கு உள்ளூர ஆர்வம் இருக்கும் ஒரு செயலைச் செய்யும்போது அதில் சவால்களை எதிர்கொண்டாலும் அதைச் செய்ய முடியாது என உங்கள் மனம் ஒருபோதும் சொல்லாது.

ஆகவே எந்த அறிவுத்திறன் உங்களிடம் ஒளிர்கிறதோ அதைக் கல்விக்கான நுழைவாயிலாகப் பயன்படுத்தினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். இயற்கை மீது காதல் கொண்டவர்கள் அதை ஒரு தனித் திறனாக வளர்த்துக் கொள்ளும்போது உயிரியல் ஆசிரியர், உயிரியல் நிபுணர், வன காப்பாளர், விலங்கு சாலை காப்பாளர், சூழலியலாளர், மானுடவியலாளர் ஆகலாம் எனக் கார்டனர் எடுத்துரைக்கிறார்.

அகம், புறம்

எளிமையாகத் தொடங்க வேண்டுமெனில், மீன்களை வளர்ப்பது, செடிகளுக்கு நீர் பாய்ச்சி, உதிர்ந்த இலைகளை நீக்கி செடிகளைப் பராமரித்தல், இக்கிபானா (Ikebana) போன்ற பூக்கள் அலங்கரிப்பில் ஈடுபடுவது, ஃபிலாஷ் கார்டு விளையாட்டின் மூலம் மலர்களின் பாகங்களை, விலங்குகளின் வகைமையை எழுதி படித்தல், சூழலியல் தொடர்பான புத்தங்களை வாசித்தல்; கலந்துரையாடல் மற்றும் விவாதங்களில் ஈடுபடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடலாம்.

புறச் சூழலில் நீங்கள் இன்னும் வீரியமாகச் செயல்படப் பல வழிகள் உள்ளன. நேரடியான அனுபவத்துக்கு ஈடு இணையே கிடையாது.

விலங்கு காட்சி சாலைக்குச் செல்லலாம். பைனாகுலர் ஒரு அருமையான கருவி. நம் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருக்கும் அற்புதமான உயிரினங்களைப் பார்வையிட அது உதவும்.

உங்கள் பள்ளியில், கல்லூரியில் பசுமைக் கழகம் ஒன்றை உருவாக்கி தொடர்ந்து மரம் நடலாம், நட்ட செடிகளைப் பராமரிக்கலாம், சூழலியல் குறித்த விழிப்புணர்வு பெற பசுமை நடை செல்லலாம், குழுவாக இணைந்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க ஆக்கப்பூர்வமான செயல்களில் ஒன்றுகூடி ஈடுபடலாம். அமெரிக்கச் சூழலியல் ஆர்வலரான ஸ்டீவ் வேன் மாடர் கூறுவதைப்போல இயற்கையின் மீது காதலாகி விழுவதுதான் உலகிலேயே மிகவும் சுவாரஸ்யமான சாகசம். அந்தச் சாகசத்தில் உடனடியாக ஈடுபடலாமே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x