Last Updated : 10 Feb, 2015 01:21 PM

 

Published : 10 Feb 2015 01:21 PM
Last Updated : 10 Feb 2015 01:21 PM

ஒரு கோப்பையின் பயணம்!

இன்னும் நான்கு நாட்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்க இருக்கிறது. பதினோராவது முறையாக நடைபெற உள்ள இந்த உலகக் கோப்பைக்கு ஒரு தனிச் சிறப்பு இருக்கிறது. உலகக் கோப்பைத் தொடர் தொடங்கி இந்த ஆண்டுடன் நாற்பது ஆண்டுகள் நிறைவடைகின்றன என்பதுதான் அது.

இன்று பிரமிப்பூட்டும் வகையில் நடைபெறும் உலகக் கோப்பைத் தொடருக்குப் பின்னணியில் ஒரு நூற்றாண்டு காலப் பயணம் உள்ளது.

முயற்சி

இன்று பத்துக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகளைச் சுலபமாக நடத்திவிட முடிகிறது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பு அது கடினமானது. ஒரு நாள் கிரிக்கெட் அறிமுகமாவதற்கு முன்புவரை கிரிக்கெட் என்பதே ஐந்து நாட்கள் நடைபெறும் டெஸ்ட் வடிவப் போட்டியாக மட்டுமே இருந்தது. டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் காலகட்டத்திலேயேகூட இரண்டும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் போட்டிகளை நடத்த முயன்றுள்ளார்கள்.

1900-ம் ஆண்டில் பிரான்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெற்றிருந்தது. ஒலிம்பிக் என்பதால் பல நாடுகள் கலந்துகொண்ட கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றிருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இந்த ஒலிம்பிக்கில் நடந்தது ஒரே ஒரு போட்டிதான். அதில் இங்கிலாந்தும் பிரான்சும் விளையாடின. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து வெற்றிபெற்றது.

இதில் நெதர்லாந்தும், பெல்ஜியமும்கூட விளையாடுவதாக இருந்தது. ஆனால், அந்த அணிகள் திரும்பப் பெறப்பட்டதால் அப்போது போட்டி நடைபெறவில்லை. இருந்தாலும் பல்வேறு நாடுகள் பங்கேற்கும் ஒரு தொடருக்குப் பிள்ளையார் சுழியாக இருந்தது இந்த ஒலிம்பிக்தான். இந்த ஒலிம்பிக்குக்குப் பிறகு அதிலிருந்து கிரிக்கெட் நீக்கப்பட்டது தனிக்கதை.

ஒரு நாள் போட்டி அறிமுகம்

இதன் தொடர்ச்சியாக 1912-ம் ஆண்டில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடத்தப்பட்டது. ஆனால், மோசமான வானிலையாலும், மக்கள் ஆர்வம் காட்டாததாலும் முத்தரப்பு டெஸ்ட் தொடர் பிரகாசிக்கவில்லை. இதன் பிறகு பல நாடுகள் பங்கேற்கும் போட்டிகளுக்குப் பெரிதாக முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

சுமார் 50 ஆண்டுகள் கழித்து இங்கிலாந்தில் கவுண்டி கிளப் போட்டியில் ஒரே நாளில் போட்டி முடிவு தெரியும் வகையிலான கிரிக்கெட் தொடங்கியது. 1963-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஃபிரண்ட்ஸ் புராவிடன்ட் டிராபி இந்த வகையிலான போட்டியை இன்னும் பிரபலப்படுத்தியது.

கிளப் அணிகள் தவிர்த்து அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளும் இந்தப் போட்டியில் பங்கேற்றன. இன்று ஐ.பி.எல். போட்டிகளைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டுவதைப் போல இப்போட்டிகளைக் காண மக்களும் ஆர்வம் காட்டினார்கள். இதனால் ஒரு நாள் வகையிலான கிரிக்கெட்டுக்கு இங்கிலாந்தில் ஆர்வம் அதிகரித்தது.

மழையால் நடந்த கிரிக்கெட்

இங்கிலாந்தில் ஒரு நாள் போட்டிக்கு மவுசு கூடிய வேளையில்கூட உடனடியாக எந்த சர்வதேசப் போட்டியும் 1960-களின் இறுதிவரை நடைபெறவேயில்லை. 1970-71 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா சென்றது. டிசம்பர் 31-ம் தேதி முதல் ஜனவரி 5 வரை டெஸ்ட் போட்டி நடைபெறுவதாக இருந்தது.

அப்போதெல்லாம் டெஸ்ட் போட்டியின் இடையில் ஒரு நாள் ஓய்வு நாளும் வரும். எனவே டெஸ்ட் போட்டி அட்டவணை ஆறு நாட்களாக இருக்கும். அப்படி நடந்த இந்த டெஸ்ட் போட்டியில் நான்கு நாட்களும் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படவில்லை. கிரிக்கெட் ரசிகர்களின் ஏமாற்றத்தைத் தவிர்ப்பதற்காக ஜனவரி 5-ம் தேதி 40 ஓவர்களைக் கொண்ட போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதைத்தான் சர்வதேச முதல் ஒரு நாள் போட்டி என்று அழைக்கிறார்கள். இந்தப் போட்டிக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு மவுசு கூடியது. கிரிக்கெட் விளையாடப்படும் நாடுகளில் ஒரு நாள் போட்டிகள் விளையாடப்பட்டன.

முதல் உலகக் கோப்பை

இதை இன்னும் பிரபலப்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்தது. அதற்காக ஐ.சி.சி. கையில் எடுத்ததுதான் உலகக் கோப்பை கிரிக்கெட். அதுவும் இந்தத் தொடர் நடைபெறுவதற்கு முன்பு வெறும் 18 ஒரு நாள் போட்டிகள் மட்டுமே விளையாடப்பட்டிருந்தன. இந்தியா ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியிருந்தது. இருந்தாலும் தொடரை நடத்த ஐ.சி.சி. முடிவு செய்தது.

அப்போது இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் என ஆறு அணிகள் டெஸ்ட் போட்டி விளையாடும் அந்தஸ்தைப் பெற்றிருந்தன. இந்த ஆறு நாடுகளையும் ஐ.சி.சி.யால் சுலபமாக ஒருங்கிணைக்க முடிந்தது. டெஸ்ட் அந்தஸ்து பெறாத இலங்கையை விளையாட அழைத்தார்கள்.

ஆப்பிரிக்கக் கண்டத்தில் மட்டும் அணி எதுவும் இல்லாமல் இருந்தது. நிறவெறிக் கொள்கை காரணமாக சர்வதேசப் போட்டிகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டதால் தென் ஆப்பிரிக்காவால் பங்கேற்கமுடியவில்லை. இறுதியில் கிழக்கு ஆப்பிரிக்கா என்ற அணி வந்தது. கிழக்கு ஆப்பிரிக்கா என்பது கென்யா, தான்சானியா, உகாண்டா மற்றும் ஜாம்பியா நாடுகளின் கிளப் கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய அணி.

இப்படி எட்டு அணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு வழியாக 1975-ம் ஆண்டில் மூன்றுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற முதல் கிரிக்கெட் திருவிழா தொடங்கியது.

மெருகேறிய தொடர்

அந்தக் காலகட்டத்தில் இங்கிலாந்தில் மட்டுமே இயற்கையாகவே உலகக் கோப்பை கிரிக்கெட்டை நடத்த வசதிகளும் வாய்ப்புகளும் இருந்தன. இங்கிலாந்தில் பகல் நேரம் அதிகம் என்பதால் 60 ஓவர் போட்டிகளைச் சுலபமாக நடத்த முடிந்தது.

1987-ம் ஆண்டுதான் முதல் முறையாக உலகக் கோப்பை நடத்தும் இடம் இந்தியாவுக்கு மாறியது. இந்தியாதான் அதற்கான பெரும் முயற்சியை எடுத்தது. இங்கு பகல் நேரம் குறைவு என்பதால் போட்டி 50 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.

அன்று உலகக் கோப்பையில் விளையாட அணிகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இன்றோ உலகக் கோப்பையில் பங்கேற்க நாடுகள் போட்டி போடுகின்றன. ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் உலகக் கோப்பை தொடர்ந்து மெருகேறி வருகிறது. புதிய நாடுகள், புதிய விதிமுறைகள், புதிய தொழில்நுட்பங்கள் என உலகக் கோப்பை மட்டுமல்ல, கிரிக்கெட்டின் வடிவமும் மாறிக் கொண்டே வருகிறது.

மாறிய வடிவங்கள்

1975, 1979, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு புருடன்ஷியல் காப்பீட்டு நிறுவனமே ஸ்பான்ஸராக இருந்தது. எனவே முதல் மூன்று கோப்பைகளுமே அப்படியே அழைக்கப்பட்டன. 1987-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தானில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரை ரிலையன்ஸ் நிறுவனம் ஸ்பான்ஸர் செய்தது. எனவே ரிலையன்ஸ் உலகக் கோப்பை என்று அழைக்கப்பட்டது.

1992-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையை பென்ஸன் ஹெட்ஜஸ் உலகக் கோப்பை என்றும், 1996 இந்தியா, பாகிஸ்தான், இலங்கையில் நடைபெற்ற உலகக் கோப்பையை வில்ஸ் உலகக் கோப்பை என்றும் அழைத்தார்கள்.

ஸ்பான்ஸர்களுக்கு ஏற்ப கோப்பையின் வடிவமும் மாறிக் கொண்டே இருந்தது. இதைத் தவிர்ப்பதற்காக ஐ.சி.சி.யே உலகக் கோப்பையைத் தயாரிக்க முடிவு செய்தது. இதனை 1999-ம் ஆண்டில் ஐ.சி.சி. செயல்படுத்தியது. அப்போது முதல் இது ஐ.சி.சி. உலகக் கோப்பை என்றழைக்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x