Published : 03 Feb 2015 02:33 PM
Last Updated : 03 Feb 2015 02:33 PM
உங்களை யாராவது‘சுத்தக் கர்நாடகம்’ எனத் திட்டினால் வருத்தப்படாதீர்கள். அது வசைச்சொல் அல்ல. வாழ்த்து. பண்பாட்டு வளம், பாரம்பரியப் பெருமையின் குறியீடுதான் கர்நாடகம்.
‘கரு’ என்றால் மேடு. ‘நாடு’ என்றால் நிலம். மேட்டுப்பகுதி என்ற பொருள் படும் வகையில் கர்நாடகம் எனப் பெயர் வந்தது.
ஆதி முதல்…
பழைய கற்கால கைக்கோடாரி கலாச்சாரத்துடனும் சிந்துசமவெளி நாகரிகத்தின் தொடர்ச்சியான ஹராப்பாவுடனும் கர்நாடகத்துக்கு வணிக மற்றும் கலாச்சாரத் தொடர்புகள் இருந்துள்ளன.
நந்த வம்சம், மவுரிய வம்சம், சதவாகனர்கள், கடம்பர்கள், கங்கர்கள், பாதமி சாளுக்கியர்கள், ராஷ்டிரகூடர்கள், கல்யாண் சாளுக்கியர்கள், தேவகிரி யாதவர்கள், ஹோசலர்கள், விஜயநகரப் பேரரசு, பாமினி பேரரசு, பிஜப்பூர் சுல்தான்கள், கீழடி நாயக்கர்கள், மைசூர் உடையார்கள், ஹைதர் அலி, திப்புசுல்தான், பிரிட்டிஷ் ஆளுகை என வலிமைமிக்க பேரரசுகளின் தாயகமாகக் கர்நாடகம் இருந்தது. இதுவே பன்முகத்தன்மை கொண்ட பிரதேசமாகக் கர்நாடகம் விளங்கக் காரணமாயிற்று.
தமிழகத்தில் கோலோச்சிய களப்பிரர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் என்று பெரிய புராணமும், கல்லாடமும், வேள்விக்குடி செப்பேடும் கூறுகின்றன. ஆனால் அவர்கள் கர்நாடகத்தில் அரசாண்டதாகவோ, எந்தப் பகுதியில் இருந்து படையெடுத்துத் தமிழகம் வந்தனர் என்பது குறித்தோ வரலாற்றுச் சான்றுகள் இல்லை.
கர்நாடகம் உதயம்
சுதந்திர இந்தியாவில் மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டப்படி 1956 நவம்பர் 1 அன்று மைசூர் மாநிலம் உருவாக்கப்பட்டது. அது 1973 ல்தான் கர்நாடகமானது.
மேற்கில் அரபிக்கடல், வட மேற்கில் கோவா, வடக்கில் மகாராஷ்டிரா, கிழக்கில் ஆந்திரம், தென் கிழக்கில் தமிழ்நாடு, தென் மேற்கில் கேரளத்தை எல்லைகளாகக் கொண்டு 1,91,976 சதுர கி.மீ. பரப்பளவுடன் இந்தியாவின் 8-வது பெரிய மாநிலமானது அது.
224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையைப் போலவே 75 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்ட மேலவையும் இங்கு உள்ளது. 6.1 கோடி மக்கள் தொகை. பாலின விகிதாச்சாரம் 1000 ஆண்களுக்கு 968 பெண்கள். கல்வியறிவு 75.60 சதவீதம். இந்திய அளவில் 16-வது இடம். நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களான ஐஐஎஸ், ஐஐஎம், என்ஐடி மற்றும் தேசியச் சட்டப்பள்ளியும் பந்திப்பூர் தேசிய பூங்காவும் இங்குதான் உள்ளன.
காவிரி, கிருஷ்ணா, சாராவதி, மலபிரபா மற்றும் துங்கபத்திரா என முக்கிய நதிகள் வளம் சேர்க்கின்றன.
தசரா கோலாகலம்
10 நாட்கள் கொண்டாடப்படும் மைசூர் தசரா பண்டிகை பிரசித்திபெற்றது. கன்னட வருடப் பிறப்பான உகாதி, மகரசங்கராந்தி, விநாயக சதுர்த்தி, நாக பஞ்சமி, பசவா ஜெயந்தி, ஹோசலா மகோத்சவம், பட்டாடக்கல் நாட்டிய திருவிழா, கரகம், தீபாவளி, ரமலான் மற்றும் கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
யக்ஸகானா, டோலு குனிதா, சோமனா குனிதா, கொடுகு, ஜக்கா காலிகே குனிதா, ஹலேலு வேஷகாரரு, பப்பட்ரி, ஜோடு காலிகி போன்ற நாட்டுப்புற நிகழ் கலைகள் இன்றும் ஜீவனோடு நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இதில் யக்ஸகானா மாநில நடனமாகும்.
முதன்மை மொழி கன்னடம். தமிழ், கொங்கணி, கொடவா, துளு, மராத்தி, இந்தி உள்ளிட்ட பிறமொழிகளின் புழக்கமும் உள்ளன.
கலை இலக்கியம்
சாளுக்கியர் காலம் பொற்காலம். கட்டிடக் கலை உள்ளிட்ட இலக்கியத்தை வளர்த்தெடுப்பதில் முக்கியப் பங்காற்றினர். அடுத்தடுத்து வந்த அரசுகளின் செழுமையான பங்களிப்பாலும் கலை இலக்கியங்களில் தனி முத்திரை பதித்தது கர்நாடகம். இன்றுவரை கன்னட எழுத்தாளர்களே அதிக அளவில் ஞானபீட விருதுகளைப் பெற்றுள்ளனர்.
மாநிலத் தலைநகரான ‘பூங்கா நகரம்’ பெங்களூரு, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் முன்னோடி நகரமாக உருமாறியுள்ளது. இந்தியாவின் தங்க உற்பத்தியில் 90 சதவீதம் கர்நாடகத்தின் பங்கு. மாங்கனீசு, மேக்னைட், இரும்பு, எலக்ட்ரானிக் உபகரணங்கள், கணிணித் தொழில்நுட்ப உற்பத்தியில் சாதனை படைக்கும் கர்நாடகம் மனித வளத்திலும் முன்னணிதான்.
காப்பி உற்பத்தியில் முதலிடம். சிறுதானியம், மூல பட்டு, சந்தனம் ஆகியவை முக்கிய விளைபொருட்கள். நெல், கர்ம்பு, நிலக்கடலை, தேங்காய், சூரியகாந்தி, சோயா, மக்காச்சோளம், சோளம் உற்பத்தியும் கணிசமாக நடக்கிறது. 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் வேளாண்மை தொழில் செய்கின்றனர். 1,23,100 ஹெக்டேர் பரப்பில் விவசாயம் நடக்கிறது. இருப்பினும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு இல்லை.
பழங்குடிகள்
இந்து மதத்தினர் 83 சதவீதமும் கணிசமான எண்ணிக்கையில் முஸ்லிம், கிறிஸ்தவம், பவுத்தம் மற்றும் சமண மதத்தினரும் வசிக்கின்றனர். இருளிகர், மலைக்குடி, ஏறவா, ஜெனு குறும்பர் என 49 பிரிவுகளைச் சேர்ந்த ஆதிவாசிகள் மாநில மக்கள் தொகையில் 3 சதவீதம் உள்ளனர்.
கர்நாடகம் சிறந்த சுற்றுலா தேசம். நவநாகரிக நகரங்களும், பாரம்பரிய நினைவுச் சின்னங்களும், பண்டைய கோயில்களும், மிக நீண்ட கடற்கரையும் உள்ளடக்கியது. துவார சமுத்திரா ஏரி, ஹோசலேஸ்வரா கோயில்கள், பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அறிவித்த ஹம்பி, மைசூர் அரண்மனை, ஆசியாவின் மிக உயரமான நினைவுச்சின்னமான சரவணபெலகுலாவில் கம்பீரமாக நிற்கும் மகாவீரரின் சிலை, புத்தர் வந்ததாகக் கூறப்படும் ரங்கபட்டினம் உள்ளிட்டவை கர்நாடகத்துக்குப் புகழ் சேர்ப்பவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT