Published : 06 Jan 2015 02:57 PM
Last Updated : 06 Jan 2015 02:57 PM
பல்துறை அறிஞரான அல்பெருனி இந்திய வானியல், ஜோதிட முறைகளைப் பற்றியும் விளக்கியுள்ளார். பூமி, மற்ற கோள்கள், அவற்றின் பரிமாணம் மற்றும் சுழற்சி, கோள்களின் சந்திப்பு, சூரிய - சந்திர கிரகணங்கள், அட்ச ரேகை, தீர்க்க ரேகை, வானியல் ஆராய்ச்சிக் கருவிகள் உள்ளிட்ட இன்னும் பல வானியல் செய்திகளை அவர் விவரித்துள்ளார்.
இந்தியக் கணித அறிஞர்களும் வானியல் அறிஞர்களும் அறிவு மிகுந்தவர்கள்தான். என்றாலும் பகுத்தறிவைக் கொண்டு முறையாக ஆராய்ந்து முடிவை எட்ட அவர்கள் முயலவில்லை.
விண்வெளி, காலம் ஆகியவற்றின் படைப்பையும் பாகுபாட்டையும் பற்றிப் புராணங்களில் முன்னோர் கூறியுள்ள கருத்துகளை ஆராயாமல் அவர்கள் அப்படியே ஏற்றுக்கொள்கின்றனர். இதனால் அறிவியல் வளர இயலாமல் போனது என்கிறார் அல்பெருனி.
அக்கால மருத்துவம்
பண்டைய இந்தியாவில் மருத்துவமும், வானியலைப் போல அறிவியல் துறையாக மதிக்கப்பட்டது. அத்துறையில் சரகர், சிறந்த ஆசிரியராகக் கருதப்பட்டார். அவருடைய நூல் அராபிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதேநேரம் பாம்பு கடிக்கு மந்திரங்களை உச்சரிப்பது தவிர வேறு சிகிச்சை இல்லை என்றும் இந்தியாவில் நம்பப்பட்டும் வந்திருக்கிறது.
சாதாரண உலோகங்களைத் தங்கமாக மாற்றும் ரசவாத முறையைத் தவிர, நோயாளிகளை உடல் நலம் பெறச் செய்யவும், முதியவர்களை இளைஞர்களாக்கும் என்று கருதப்பட்ட தங்கபஸ்ப முறையையும் மருத்துவர்கள் வைத்திருந்தனர்.
அளவை முறைகள்
அந்நாளில் இந்தியாவில் பின்பற்றப்பட்ட பல்வேறு அளவை முறைகளைப் பற்றியும் அல்பெருனி எழுதியுள்ளார். நிறுத்தல் அளவைகள் இடத்துக்கு இடம் வேறுபட்டன. அளவை முறைகள் தரப்படுத்தப்படவில்லை. எடை குறைந்த பொருட்களைத் துல்லியமாக நிறுத்து எடைபோட முடியவில்லை. அதனால் வெவ்வேறு பொருட்களின் எடையைத் தீர்மானிப்பது கடினமாக இருந்தது. எடையும் தவறாக இருந்தது.
நீட்டல் அளவை முறையிலும் இதேபோன்ற பிரச்சினைதான். சாண் என்பது ஒரு அளவை முறை, ஒரு மனிதனின் உயரம் எட்டு சாண். ஆனால், இந்தச் சாணின் அளவு மனிதருக்கு மனிதர் வேறுபடும் என்பதால், அது திட்டவட்டமான அளவு என்று சொல்ல முடியாது.
என்ன பிரச்சினை?
அல்பெருனியின் புத்தகத்தில் காணப்படும் குறிப்புகளில் இருந்து, 11-ம் நூற்றாண்டு இந்திய மக்கள் பரந்த எண்ணம் இல்லாதவர்களாகவும், மாற்றங்களை ஏற்க விருப்பம் இல்லாதவர்களாகவும் இருந்தது தெரிய வருகிறது. விருப்பு வெறுப்பற்ற ஆராய்ச்சி, வெளிப்படையான விவாதங்கள் மறைந்து அர்த்தமற்ற சடங்குகள் அதிகரித்திருந்தன. அறிவில் கூர்மை, முன்னேற்றம் இருந்தாலும் ‘பயனுள்ளது எது, பயனற்றது எது’ எனப் பகுத்தறியும் ஆற்றல் இல்லாமல் இருந்திருக்கின்றனர்.
இதை அல்பெருனியே விளக்கியுள்ளார்: இந்தியர்கள் குழப்ப நிலையில் உள்ளனர். தர்க்கப்பூர்மான ஒழுங்குமுறையை அவர்களிடம் காண முடியவில்லை. கணித, வானியல் அறிவைப் பொறுத்தவரை நல்ல முத்துகளைக் கசக்கும் கொட்டைகளுடன் கலந்து வைத்தது போலவும், மாணிக்கக் கற்களைச் சாதாரண கூழாங்கற்களுடன் கலந்து வைத்தது போலவும் இருக்கிறது.
இந்த இரண்டு வகைப் பொருட்களையும், அவர்கள் வேறுவேறாகப் பகுத்துப் பார்க்கவில்லை. இரண்டையும் ஒன்று என்றே கருதுகின்றனர். அறிவியல் ரீதியிலான பகுப்பாய்வு முறைகளை அவர்களுடைய மனம்-அறிவு நாடாததே இதற்குக் காரணம் என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT