Published : 09 Dec 2014 11:56 AM
Last Updated : 09 Dec 2014 11:56 AM

விதியும் மதியும்

தங்களின் தோல் நிறத்தில் தொடங்கி மாற்ற முடியாத விஷயங்களுக்காக மனதை அலட்டிக் கொண்டு தன்னைத்தானே வருத்திக் கொள்பவர்கள் பலர். அவர்களின் பிரச்சினைகளை வைத்து ஒரு புத்தகமே போடலாம். தங்களுக்குத் தாங்களே போட்டுக் கொள்ளும் விலங்குகளை உடைத்துக் கொண்டு வெளிவராத வரை அவர்களுக்கு எட்டாத உயரத்தில் தான் வெற்றி இருக்கும்.

மாற்ற முடியாத விஷயங்களை அப்படியே ஏற்றுக் கொள்வது, மாற்றுவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து செயல்படுவது என்ற இரண்டு வகைகளில் எடுத்துக் கொள்வதன் மூலம் வாழ்க்கையை மகிழ்ச்சியானதாக மாற்றி விட முடியும்.

வாழ்க்கை மீது விதிக்கப்பட்டிருக்கும் சில எதார்த்தங்களை ஒப்புக் கொள்ள மறுக்காதீர்கள். நம் முன்னோர் அப்படியான எதார்த்த நிகழ்வுகளை “விதி” என்று வகைப்படுத்தினார்கள். அதை மாற்ற முடியாது என்பதாலேதான் “விதியை மாற்ற முடியும்” எனச் சொல்லாமல் “விதியை மதியால் வெல்லலாம்” எனச் சொல்லித் தந்தனர்..

இஸ்லாமியக் கலிபாக்களில் ஒருவரான ஹஜ்ரத் அலியைச் சந்தித்த யூத இளைஞன் விதிக்கும், பகுத்தறிவுக்கும் உள்ள வித்தியாசத்தைச் சொல்ல முடியுமா? என்று கேட்டான். ஹஜ்ரத் அலி அவனிடம், “உன் வலதுகாலைத் தூக்கு” என்றார். அவனும் தனது வலது காலைத் தூக்கியபடி நின்றான்.

“சரி…..இப்போது உன் வலது காலைக் கீழிறக்காமலேயே இடது காலையும் தூக்கு” என்றார்.

“அது எப்படி முடியும்?” என்றான் இளைஞன்.

“ஒற்றைக் காலை மட்டும் தூக்கு என்றதும் உன்னால் முடியும் என நினைத்துச் செய்தாய் அல்லவா? அதுதான் பகுத்தறிவு. இன்னொரு காலையும் தூக்கச் சொன்னபோது அது முடியாது என உணர்ந்தாய் அல்லவா? அதுதான் விதி” என்றார். அந்த வித்தியாசத்தை உணர்ந்தாலே போதும்.

விதியை மதியால் வெல்லுங்கள். வாழ்வு வசப்படும். மகிழ்ச்சி உங்களைத் தேடி வரும்.

- மு. கோபி சரபோஜி, ராமநாதபுரம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x