Published : 02 Dec 2014 11:33 AM
Last Updated : 02 Dec 2014 11:33 AM

ப்ளஸ் 2 வெற்றிப் பாதை | எளிதாக ஜெயிக்க, மதிப்பெண் குவிக்க

பிளஸ் 2 தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டதும், மாணவர் மட்டுமல்ல, பெற்றோர், ஆசிரியர் என அனைத்து மட்டங்களிலும் பதற்றம் கூடியிருக்கும். அந்தப் பதற்றத்திற்கு அவசியமே இல்லை. பிளஸ் 2 தேர்வில் எளிதாக ஜெயிக்கவும், மதிப்பெண் குவிக்கவும் உங்களுக்குக் கைகொடுக்க இந்தப் பகுதி பெரிதும் உதவும்.

பாடவாரியாக அளிக்கப்படும் இந்தக் குறிப்புகள் கூடுதல் மதிப்பெண்களை பெற உங்களுக்கு நிச்சயம் கைகொடுக்கும். தமிழ் முதல் மற்றும் இரண்டாம் தாள்களை எதிர் கொள்வதற்கான நுணுக்கங்களை இந்த முறை பார்ப்போம்.

மொழிப் பாடம் முக்கியம்

மாணவர்கள் மட்டுமல்ல, ஆசிரியர்களும் மொழிப் பாடங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை. பாஸானால் போதும். மொழிப் பாடத்துக்கு ஒதுக்கும் நேரத்தைத் தொழிற்கல்வி மேற்கல்விக்குக் கைகொடுக்கக்கூடிய இதர பாடங்களுக்குத் தரலாம் என்பது அவர்களுடைய கணிப்பு. ஆனால், இந்த அலட்சியம் ஆபத்தைத் தரலாம்.

மொழிப் பாடத்தில் சிறப்பாகத் தேறுவது, இதர பாடங்களில் கூடுதல் மதிப்பெண் பெற வழி செய்யும். தெளிவான, அழகான கையெழுத்து, விரைவாக எழுதுதல், சொற்களஞ்சியம் உட்பட இதர பாடங்களுக்கான பல ஆதாய அம்சங்கள் மொழிப் பாடம் மூலமே கிடைக்கும். அதுவுமில்லாது, மற்ற பாடங்களை நன்றாகப் படித்துவிட்டு மொழிப் பாடத்தில் அதுவும், தமிழ் தாளுக்குப் போதுமான முக்கியத்துவம் தராமல் போனால், இதர தேர்வுகளையும் அவை பாதிக்கலாம். தமிழுக்குப் போதுமான கவனம் தரவில்லையே, கடைசி நேரத்தில் கவிழ்த்துவிட்டால் என்ன செய்வது என்ற உதறலுக்கு வாய்ப்பு தரக் கூடாது.

எல்லாவற்றுக்கும் மேலாக, பள்ளி, மாவட்டம், மாநிலம் என முதலிட வரிசையை அலங்கரிக்கும் ‘டாப்பர்ஸ் லிஸ்ட்’ கனவுள்ள மாணவர்கள், தங்கள் மொத்த மதிப்பெண்ணில் சறுக்காதிருக்க மொழிப் பாடங்களே கைகொடுக்கும். தொழிற்கல்விக்கான பாடங்களில் வாங்குவது போல உச்ச மதிப்பெண்களை மொழிப் பாடங்களில் அள்ளுவதற்குக் கூடுதல் உழைப்பு அவசியம். அதேபோல சராசரி மதிப்பெண் எடுப்பவர்களும், தேர்ச்சித்திறனைக் கூட்டிக்கொள்ள அவசியமான குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

தனித்தன்மை அவசியம்

தமிழ் தாளில் கூடுதல் மதிப்பெண் பெறச் சுயமான படைப்புத் திறனை வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக 2-ம் தாளில் இலக்கிய நயம் பாராட்டல், துணைப்பாடப் பகுதிக்குப் புத்தகம் மற்றும் கையேடுகளில் உருப்போட்டு வந்ததைத் தேர்வில் எழுதுவது முழு மதிப்பெண் தராது. பாடம் சாராத தனித்தன்மையை உரசிச் சொல்லும் சுயமான கருத்துகள் அவசியம். குறைந்தபட்சம் ஒரே வகுப்பிலிருந்து தேர்வுக்குத் தயாராகுபவர்கள், அச்சடித்தது போன்ற ஒரே கருத்தை எழுதுவதையாவது தவிர்க்கலாம். பொதுவான வாசிப்பும் சுவாரசியமான மேற்கோள்களும் சேர்ந்தாலே பதிலில் சுய அடையாளம் வந்துவிடும்.

கையெழுத்தில் கவனம்

அழகு மட்டுமல்ல விரைவு, தெளிவு ஆகியவையும் நல்ல கையெழுத்துக்குக் கட்டியம் சொல்லும். வாக்கியப் பிழை, சந்திப் பிழை, மயங்கொலிப் பிழை போன்றவைதான் தமிழ்த் தாள் திருத்துபவர் கண்ணில் உறுத்தும். விழுந்து விழுந்து படிக்கும் மாணவர்கள் போதுமான எழுத்துப் பயிற்சி இல்லாததால், மொழிப் பாடத்தில் மதிப்பெண்களைக் கோட்டை விடுவது இப்படித்தான். அதிலும் மனப்பாடச் செய்யுள் பகுதியில் எழுத்துப் பிழை அறவே கூடாது.

நேர மேலாண்மை நன்று

சிலர் தமிழ் என்றதும் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளுவார்கள். இதுவும் தவறு. கேட்ட கேள்விக்கு உரிய அளவில் விடை அமைந்தாலே போதும். நெடுவினாக்களுக்குத் துணைத் தலைப்புகளுடன் பத்திகள் பிரித்து எழுதுவது அவசியம். அதேபோல 10 வரிகளில் எழுது என்ற வினாவிற்கு, எழுதிய வரிகளை எண்ணி நேர விரயம் செய்யக் கூடாது. உரிய கருத்துகளைச் செறிவோடு பட்டியலிட்டிருந்தால் அதற்கான வரிகள் சேர்ந்து விடும்.

‘புளூ பிரிண்ட்’ உதவியுடன் படிப்பதும், திருப்புதல் தேர்வுகளில் ஆசிரியர் அறிவுறுத்தும் இந்தக் கேள்விக்கு இத்தனை நிமிடம் என்ற காலவரையறைக்குள் தேர்வெழுதிப் பழகுவதும் நேர விரயத்தைத் தவிர்க்க உதவும். அதேபோல வினாத்தாளின் ரோமானியப் பிரிவுகள் ஒவ்வொன்றுக்குமான நேரத்திற்கு, முன்திட்டமிடல் மட்டுமே உதவும். எழுத்துப் பிழை உள்ளிட்ட பெரும்பாலான தவறுகளைச் சரிசெய்வது மதிப்பெண் இழப்பைத் தவிர்க்கும்.

முதல் தாள் நெடுவினா வரிசையில் திருக்குறள், காப்பியப் பகுதி, மறுமலர்ச்சி பாடல்கள் இந்த 3-ல் ஒரு கேள்விக்கு விடை எழுத வேண்டியிருக்கும். பலரும் சுலபமாக இருக்கும் என்று கடைசி இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்வார்கள். ஆனால், கூடுதல் மதிப்பெண் பெற விரும்புபவர்கள் திருக்குறளைத் தெரிவு செய்யலாம். படித்ததை எழுதினாலே போதும். மதிப்பெண் குறைக்க இதில் வாய்ப்பில்லை. அது மட்டுமல்ல திருக்குறள் பகுதியை முழுவதுமாகப் படித்தால், முதல் தாளில் 30 மதிப்பெண் நிச்சயம். மேலும் இரண்டாம் தாள் நெடுவினாக்களில் மேற்கோள் காட்டவும் திருக்குறள் உதவும்.

நேரம் ஒதுக்குவது எப்படி?

எல்லாம் சரி, நடைமுறையில் பள்ளியிலும் வீட்டிலும் தமிழ் படிக்க உரிய நேரம் அனுமதிப்பதில்லையே என்று புலம்புபவர்களுக்காக இந்தக் குறிப்பு: முதன்மைப் பாடங்களை படிக்கும்போது இடையில் இளைப்பாறல் தேவைப்படுமே, அப்போது தமிழைப் படிக்கலாம். இதனால் மொழிப் பாடத்துக்கு வழக்கமாக ஒதுக்கும் நேரம் கூடுதலாகும். கூடவே, படிப்புக்கு இடையிலான ஓய்வு என்பது படிப்பைப் பாதிக்கவும் செய்யாது.

தமிழில் சுமாரான மதிப்பெண்களை எடுப்பவர்கள், கூடுதலாக நேரம் ஒதுக்கி முயற்சி, பயிற்சி இவற்றைத் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். இருக்கும் சில மாதங்களில் மொழிப் பாடத்திற்குக் கூடுதல் நேரம் ஒதுக்க இயலாது என்பவர்கள், வினா வங்கி உதவியை நாடலாம்.

முக்கியமாய் இலக்கணப் பகுதிக்கு வினா வங்கி பட்டியலிட்டிருக்கும், முந்தைய ஆண்டுகளில் அடிக்கடி கேட்கப்பட்ட கேள்விக்கான விடைகளில் தேடுவது அவசியம். இலக்கணத்தைப் புரிந்துகொண்டு படித்தால், விரைவாகப் படிக்கலாம். படிப்பதும் மனதில் தங்கும். நமது பேச்சு மொழிதானே என்ற அலட்சியம் தமிழ்த் தாளில் வேண்டாம்.

எழுதிப் பாருங்கள்

படிப்பதைவிட அதை எழுதிப் பார்ப்பதே படிப்பை முழுமையாக்கும்; தவறுகளைத் திருத்த உதவும். பெரும்பாலானவர்கள் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ள தமிழ் இரண்டாம் தாளில், அவற்றைத் தவிர்க்க முதல் 3 மற்றும் 5,6,7 ஆகிய பாடங்களுக்கு முக்கியத்துவம் அளித்துப் படிக்கலாம். 2-ம் தாளில் மதிப்பெண் குறையுமெனில், தேர்ச்சிக்குத் தேவையான கூடுதல் மதிப்பெண்களை முதல் தாளில் எடுத்துவிட முயல வேண்டும். வாழ்த்துப் பகுதிக்கும், மறுமலர்ச்சிப் பகுதிக்கும் திருப்புதல் தேர்வு அவசியம். ஒவ்வொரு பாடத்தின் பின்னாலிருக்கும் பயிற்சி வினாக்களைச் சரியாகப் படித்து வந்தாலே, ஒரு மதிப்பெண் வினாக்களில் முழுமையாக மதிப்பெண் பெறலாம்.

(பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் வழங்கும் ‘பிளஸ் 2 மீத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமின்’ தமிழாசிரியர் க.செல்வராஜ் உதவியுடன் தொகுக்கப்பட்டது)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x