Last Updated : 02 Jul, 2019 11:26 AM

 

Published : 02 Jul 2019 11:26 AM
Last Updated : 02 Jul 2019 11:26 AM

கடந்த வாரம்: சேதி தெரியுமா?

ஆரோக்கிய மாநிலம்: கேரளம்

ஜூன் 25: நாட்டின் சுகாதாரச் செயல்பாடுகளில் முன்னணியில் இருக்கும் மாநிலங்களின் பட்டியலை ‘ஆரோக்கியமான மாநிலங்கள், முன்னேறும் இந்தியா’ என்ற பெயரில் நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டது. இந்தப் பட்டியலில் கேரளம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. உத்தரப் பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது. தமிழ்நாடு இந்தப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.

மோகன் ரானடே மறைவு

ஜூன் 25: சுதந்திரப் போராட்ட வீரர் மோகன் ரானடே (90) பூனாவில் காலமானார். 1950-களில், கோவா விடுதலை இயக்கத்தை இவர் தலைமையேற்று நடத்தினார். கோவா விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் போர்த்துக்கீசிய சிறையில் 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தார். இவருக்கு 2001-ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

‘ரா’ புதிய தலைவர்

ஜூன் 26: இந்தியாவின் உளவு அமைப்பான ‘ரா’வின் புதிய தலைவராக சமந்த் கோயல் நியமிக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை நியமனக் குழு அவரது நியமனத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

நுண்ணறிவுப் பிரிவு புதிய இயக்குநர்

ஜூன் 26: நுண்ணறிவுப் பிரிவின் (Intelligence Bureau) புதிய இயக்குநராக அரவிந்த் குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார். புலனாய்வு அமைப்பின் தற்போதைய இயக்குநர் ராஜிவ் ஜெயின் பதவிக்காலம் முடிவடைந்ததால், புதிய இயக்குநராக அரவிந்த் குமார் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மராத்தியர் இட ஒதுக்கீடு செல்லும்

ஜூன் 27: மகாராஷ்ட்ர மாநில அரசு, வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் மராத்தியர்களுக்கு அறிவித்த இட ஒதுக்கீடு செல்லும் என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், இட ஒதுக்கீட்டை அரசியலமைப்புக்கு உட்பட்டு 16 சதவீதத்திலிருந்து 12-13 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விராட் கோலி புதிய சாதனை

ஜூன் 27: உலகக் கோப்பை 2019 போட்டி கள் இங்கிலாந்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்தத் தொடரில், இந்திய அணி ஆறாவது ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில், இந்திய கேப்டன் விராட் கோலி, சர்வதேச அளவில் 20 ஆயிரம் ரன்களை வேகமாக எடுத்த வீரர் என்ற புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

இதன்மூலம், சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா ஆகிய இருவரின் சாதனைகளையும் முறியடித்துள்ளார். 20 ஆயிரம் ரன்களைக் கடந்த கிரிக்கெட் ஆட்டக்காரர்களில், உலக அளவில் 12-வது ஆட்டக்காரராகவும், இந்திய அளவில் 3-வது ஆட்டக்காரராகவும் கோலி இருக்கிறார்.

நிலவின் பாறை மாதிரிகளை ஆராயும் நாசா

ஜூன் 27: அப்போலா திட்டத்தின் பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் விதமாக, நிலவிலிருந்து எடுத்துவந்த மாதிரிகளை ஆராய்ச்சி செய்யத் திட்டமிட்டிருப்ப தாகத் தெரிவித்திருக்கிறது நாசா.

விண்வெளி வீரர்கள் நீல் ஆர்ம்ஸ்ட்ராங், பஸ் ஆல்ட்ரின் ஆகிய இருவரும் 1969, ஜூலை 20 அன்று நிலவில் காலடி முதலில் பதித்தார்கள். நிலவிலிருந்து எடுத்துவரப்பட்ட பாறைகளைப் புவியியல் வல்லுநர்கள் ஆராய்ச்சி செய்வார்கள் என்று நாசா தெரிவித்திருக்கிறது.

புதிய தலைமைச் செயலாளர், டி.ஜி.பி.புதிய-தலைமைச்-செயலாளர்-டிஜிபிright

ஜூன் 29: தமிழ்நாடு அரசு, மாநிலத்தின் புதிய தலைமைச்  செயலாளராக கே. சண்முகத்தையும், ‘டி.ஜி.பி.’யாக ஜே. கே. திரிபாதியையும் நியமித்தது. இவர்கள் இருவரும் ஜூலை 1 அன்று பதவியேற்றார்கள்.

தமிழகத் தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் , டி.ஜி.பி.யாக இருந்த டி.கே. ராஜேந்திரன் ஆகிய இருவரும் ஜூன் 30 அன்று ஓய்வுபெறுவதால் புதிய தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. இருவரும் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x